Friday, July 11, 2008

வட அமெரிக்காவின் இருபத்தியோராவது தமிழ் மாநாடு

இந்த மாநாட்டை அல்லது விழாவைப் பற்றி கதைக்கும் முன்பாக வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் சிறப்புத்தன்மைகளைக் கொஞ்சம் சொல்ல வேண்டும்.

வணிகமயமாக்கப் பட்ட இந்த உலகில் சிறுபான்மையினங்கள் தங்கள் இன அடையாளங்களான மொழி, கலை, பண்பாடு போன்றவற்றைப் பேணுவது என்பது மிகக் கடினமான, ஆதாயமில்லாத ஒன்று. வணிகமய உலகின் ஆரம்பமும், அடித்தளமுமான அமெரிக்க மண்ணில் உட்பிளவுகளுக்கும், போட்டி, பொறாமைகளுக்கும் பெயர்பெற்ற தமிழினம் சுய அடையாளத்துடன் பெரிய அளவில் ஒரு விழாவை இருபத்தியோரு ஆண்டுகளாக நடத்தி வருகிறதென்றால், இதைவிட பேரவைக்குப் பெருமை வேறொன்று சொல்ல வேண்டியதில்லை. கடந்த இருபத்தியொரு ஆண்டுகளாக வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ஆண்டு தோறும் ஜுலை முதல் வாரத்தில் மூன்று நாட்களைத் தமிழ்விழாவாகக் கொண்டாடி வருகிறது. பேரவை என்பது அமெரிக்காவின் பல நகரங்களிலுள்ள தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு ஆகும். இம்மூன்று நாட்களில் தமிழர்கள் திரளாக வந்து தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, கலை, இசை, நாட்டியம், நாடகம், அமெரிக்க மற்றும் உலகத் தமிழர் முன்னேற்றம் என பல வகையான கருத்துக்களில் கலந்துரையாடல்களும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தி வருகின்றனர்.

எத்தனையோ இன்னல்களுக்கு இடையில், செம்மையான மொழிக்கூறுகள், பாரம்பரியக் கலைகள், நடன நிகழ்ச்சிகள், நவீன அறிவியல் வளர்ச்சிகள் போன்றவற்றை உள்ளடக்கி சமத்துவம், சமூக நீதி போன்ற விழிப்புணர்வுடன் இம்மானாடு நடத்தப் படுகின்றது என்பது இதன் சிறப்பு. தமிழ்த் தாயகங்களில் ஒடுக்கப் பட்ட சமூகங்களின் பிரதினிதிகளும், கலைஞர்களும் இவ்விழாக்களுக்கு வரவழைக்கப் பட்டு, சிறப்பாக போற்றப் படுகின்றனர் என்பது இன்னொரு சிறப்பு. முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஒடுக்கப் படும் ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளுக்கு ஆதரவாக தன் குரலைத் தொடர்ந்து ஒலித்து வருகிறது இப்பேரவை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஆண்டு இம்மாநாடு ஜூலை 4 முதல் 6 வரை புளோரிடா மாநிலம் ஓர்லாண்டோ நகரில் நடைபெற்றது. நடுத்தர வர்க்கத்தின் உல்லாச உலகான டிஸ்னிலாண்டுக்குச் சென்று உல்லாசமாக இராமல் தமிழறிஞர்களின் பேச்சுக்கு செவி மடுத்து, தமிழ் இலக்கியத்தை நுகர்ந்து, தமிழிசைக்குத் தலையாட்டி, தமிழ் நடனத்தைக் கண்டு களித்து, தமிழர் அடையாளத்தைப் பேணச் சூளுரை ஏற்று, தமிழைக் கணினி அல்லது கம்ப்யூட்டரில் செயலாக்கியது மானாட்டுக்கு வந்த அதிசயத் தமிழர் கூட்டம். இம்மானாட்டில் குறிப்பாக என்னைக் கவர்ந்தவை பல உண்டு.

பேராசிரியர். சுப வீரபாண்டியன் அவர்களின் தெள்ளத்தெளிந்த சிந்தனைகள் பொதிந்த சொற்பொழிவுகளும், இயக்குனர் சீமானின் தமிழுணர்வினைத் தட்டியெழுப்பும் இசையுடன் கலந்த பேச்சும், இயக்குனர் தங்கர் பச்சானின் யதார்த்தத்தைச் சுட்டிக் காட்டும் வெளிப்படையான பேச்சும் இம்மானாட்டுக்கு வந்தவர்களை கொஞ்சமாவது உலுக்கியிருக்கும். விழாவின் சிறப்புப் பேச்சாளரான பேராசிரியர் சுப. வீரபாண்டியன் “அரசனாக, அகதியாக” என்ற தலைப்பில் சிந்திக்க வைக்கும் சிறப்புரையாற்றினார். எல்லா மொழிகளையும் சமமாக மதிக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்த திரு. வீரபாண்டியன், மொழியை இழந்ததால் நாட்டை இழந்த இனங்களின் வரலாற்றைக் கூறித் தமிழர்கள் தமிழ் மொழியை இழக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். தமிழ் உணர்வு, தரமான ரசனை, மொழி கலப்பின்மை போன்றவற்றை வலியுறுத்திய இயக்குனர் சீமான், சில நாட்டுப் புறப் பாடல்களைப் பாடி மிக அருமையாக உரையாற்றினார். சீமானின் மொழிப் பற்றும், இன உணர்வும், விழாவிற்கு வந்திருந்த இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தன. இயக்குனர் தங்கர் பச்சானும் தரமான திரைப் படங்கள் பற்றி பேசினார். எங்கு சென்றாலும், எங்கு வாழ்ந்தாலும் தமிழ் மண்ணையும், மொழியையும் மறந்து விடாதீர்கள் என்றார். அமெரிக்க மண்ணில் பிறந்த தமிழ்க் குழந்தைகள் தமிழை எப்பாடு பட்டாவது கற்கவேண்டும். மொழியைக் கற்காமல் பண்பாட்டைப் பேணுவது அதிக நாள் நிலைக்காது என்று கூறினார். ”இனம் வாழ மொழி காப்போம், மொழி காக்கக் கைகோப்போம்” என்ற விழாவின் கோட்பாட்டை மிகவும் வலியுறுத்துவதாக இருந்தன இம்மூவரது உரைகளும்.

கலைமாமணி நர்த்தகி நடராஜனின் சிலப்பதிகார நாட்டிய நாடகம் விழாவின் முத்தான நிகழ்ச்சியாக அமைந்து தமிழர்களை உணர்ச்சிக் கடலில் ஆழ்த்தியதென்றால் மிகையாகாது. பேராசிரியர் பாலசுப்பிரமணியத்தின் கணீரெனும் குரலில் இசைத்த சிலப்பதிகாரப் பாடல்களும், அதற்கு ஒத்திசைத்த அருமையான இசைக்குழுவும், கலைமாமணி நர்த்தகி நடராஜனின் துடிப்பான பரதமும், இதைப் போன்றதோர் நாட்டிய நிகழ்ச்சியைக் கண்டதில்லை என்று அரங்கத்திலிருந்த அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.

தமிழிசை ஆராய்ச்சியாளர் பேராசிரியர் மம்மது அவர்களின் உரை, ஈராயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழிசை, கர்நாடக இசை என்ற புதிய பெயருடன் இன்று உலவினாலும், தமிழிலக்கியங்களில் தமிழ்ப் பண்களாக விரவிக் கிடக்கின்றது என்று விளங்க வைத்தது. விழாவின் சீரிய நிகழ்ச்சிகளிடையே மெல்லிய நகைச்சுவையை துய்க்கச் செய்தது ஈரோடூ மகேஷ் வழங்கிய நிகழ்ச்சிகள். பட்டி மன்றமானாலும், தனிப்பட்ட நகைச்சுவை விருந்தானாலும் அரங்கத்தைக் கலகலப்பூட்டினார் அந்த இளைஞர். நடிகர் நந்தாவின் பேச்சு நம்மை ஈழத்துக்கேக் கொண்டு சென்றது. ஆணிவேர் படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பின் மூலம் அவர் அறிந்த கொண்ட உண்மைகளைப் பகிர்ந்து கொண்டார். இதுதவிர கலைமாமணி சுதா இரகுநாதனின் கர்நாடக இசை நிகழ்ச்சியும், ஐங்கரனின் மெல்லிசை நிகழ்ச்சியும் அனைவராலும் கண்டுகளிக்கப் பட்ட முக்கிய அம்சங்களாக இருந்தன.

தமிழ்ச்சங்கங்களின் நிகழ்ச்சிகள் பல பிரமிக்க வைத்தன. குறிப்பாக வாசிங்டன் தமிழ்ச்சங்கம் வழங்கிய வினாடி-வினா நிகழ்ச்சி தமிழ்த் தொலைக் காட்சிகள் அனைத்தையும் வெட்கப் படவைக்கும் தரமான நிகழ்ச்சிகள். தமிழ்த் தொலைக்காட்சிகள் அனைத்தும் திரைப்பட உலகையும், அரைகுறை ஆங்கிலத்தமிழையும் கட்டிக் கொண்டு அழுது வரும் இக்காலத்தில் தமிழ் இலக்கியங்களையும், இசையையும் முன்னிறுத்திய என்னதொரு அருமையான வினாடி வினா. இதைப் பல மாதங்களாக உழைத்துச் செம்மையாகத் தயாரித்து வழங்கும் பீட்டர் எரோனிமூஸ் குடும்பத்தினரும், வாசிங்டன் தமிழ்ச்சங்கமும் பெரும்பாராட்டுக்குரியது. கனடா தமிழ்ச்சங்கம் வழங்கிய நாட்டிய நாடகம் ஈழத்தமிழர் வாழ்வில் சாதி ஒடுக்குமுறை நிலவியதை கண்முன் நிறுத்தியது. மிசௌரித் தமிழ்ச்சங்கம் வழங்கிய பறை மற்றும் சிலம்பம் நிகழ்ச்சி, தமிழர்களின் இசைக் கருவியையும், தற்காப்புக் கலையையும் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தது. நேரமிருந்தால் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

மேலும் தொழில் முனைவோர் கருத்தரங்கம், திருமண செய்ய முனைவோருக்கான சந்திப்புகள் போன்றவற்றில் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தமிழ்மணம் மற்றும் உத்தமம் அமைப்புகளின் தமிழ்க் கணினிப் பயிலரங்கம் மற்றும் வலைப்பதிவுப் பயிற்சிகள் சிறப்பாக நடைபெற்றன. மின்னஞ்சலிலும், இணையத்திலும் தமிழில் எழுதப் பயிற்சி பெற்றனர். வேதாத்திரி மகரிஷியின் யோகாசனப் பயிற்சி வகுப்புகளில் கலந்து பலர் பயன்பெற்றனர்.

விழாவின் அனைத்துக் கொண்ட்டங்களுக்கிடையேயும், ஈழத்தில் அரசு ஒடுக்குமுறையின் கீழ் அல்லல் படும் ஈழத்தமிழ் மக்களை அனைவரும் நினைவு கூர்ந்தனர். அம்மக்களுக்கு விரைவில் உரிமைகளை மீட்டுத் தர வல்லரசுகள் உதவவேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து சிறப்புப் பேச்சாளர்களும், கலைஞர்களும் வலியுறுத்தினர்.

இப்படிப்பட்ட சிறந்த மானாட்டை ஒருங்கிணைக்க திரு. ஸ்ரீ சுப்பிரமணியம், திரு. ஜெய் தபராஜ் போன்றவர்கள் ஏற்றுக் கொண்ட சிரமங்கள் விவரிக்க முடியாதவை. அவர்களுடைய உழைப்பை ஒவ்வொரு இடத்திலும் காண முடிந்தது. பேரவைத் தலைவர் தில்லைக் குமரன் மற்றும் நிர்வாகக் குழுவினரும் பாராட்டப் பட வேண்டியவர்கள்.