Thursday, June 14, 2012

தமிழ் அமெரிக்க இளைஞர்களுக்கான நிகழ்ச்சி

அதென்ன ”தமிழ் அமெரிக்க இளைஞர்கள்” என்று அழைக்கிறீர்கள்? அமெரிக்கத் தமிழ் இளைஞர்கள் என்று சொன்னால் என்ன? என்று கேட்கிறீர்களா?





இந்தக் காணொளியை முழுவதுமாகப் பார்த்துவிட்டு பின் இந்தக் கேள்வியைக் கேளுங்கள்! இந்த இளைஞர்கள் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இளைஞர்கள். ஆங்கிலமே இவர்களுடைய இயல்பான மொழி (தாய் மொழி என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்குமென்றாலும் தாய் பேசும் மொழியாகவே பெரிதும் புரிந்துகொள்ளப்படுதலால், இயல்பு மொழி என்ற சொல் மொழியியலாளர்களால் பயன்படுத்தப்படுகிறது). பள்ளிக்கூடத்திலும், வெளியிலும் இவர்கள் கற்பதும், பேசுவதும் ஆங்கிலத்தில்தான். வீட்டில் தாய் தந்தையர் தமிழில் பேசினாலும் இவர்களுக்கு இயல்பாக வருவது ஆங்கிலமே. பண்பாட்டு அடிப்படையில் பார்க்கப்போனால், தமிழர் (இந்தியத்தமிழர் அல்லது ஈழத்தமிழர்) பண்பாட்டுக்கூறுகளையும், அமெரிக்கப் பண்பாட்டுக்கூறுகளையும் கலந்து பெற்றுக் கொள்கிறார்கள். இந்தச் சூழலில் இவர்களுடைய முதன்மை அடையாளம் ”அமெரிக்கர்” என்பதே. இரண்டாவது அடையாளமே தமிழர் என்று சொல்ல முடியும். எனவேதான் இவர்களை ”அமெரிக்கத் தமிழர்கள்” என்பதை விட ”தமிழ் அமெரிக்கர்கள்” என்று சொல்வதே சரியானது.

இருப்பினும் தம்முடைய தமிழ் அடையாளத்தை இவர்கள் தக்கவைத்துக்கொள்வதும், போற்றச்செய்வதும் முற்றிலும் பெற்றோர்கள் கையிலே உள்ளது. (1)  பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேசினாலும், பதில் சொன்னாலும் அவர்களுடன் தொடர்ந்து தமிழிலேயே பேசுவது முதலில் மிக அவசியம். (2) அடுத்து, தமிழ்த் திரைப்படங்கள், தொலைக்காட்சி, தமிழ்ப்பாடல்கள் என்று இல்லத்தில் நுகர்வு மொழியாகத் தமிழை வைத்திருப்பது. (3) மூன்றாவது, தாயகங்களுக்கு அடிக்கடி குடும்பத்துடன் சென்று தாத்தா பாட்டியுடனும் உறவினர்களுடனும், நண்பர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து பிள்ளைகளுக்குத் தாயக உறவுகளைப் பலப்படுத்துவது, தாத்தா-பாட்டியினரை அமெரிக்காவுக்கு அழைத்து தங்களோடு அடிக்கடி தங்கவைத்துக் கொள்வது போன்றவை. (4) இறுதியாக, பல்வேறு வேலைகளுக்குமிடையே, தமிழ்ச்சங்கங்கள், தமிழ்ப்பள்ளிகள் நடத்துவதில் கணிசமான நேரம் செலவழிப்பது, தம் பிள்ளைகளையும் ஈடுபடுத்துவது. இதைப்பற்றிய விவாதத்தையே இப்பிள்ளைகள் வாயிலாகவே நீங்கள் இங்கு கண்டிருப்பீர்கள். பிள்ளைகள் கல்லூரிக்குச் செல்லும் பருவத்திலேயே தம் அடையாளத்தைப் பற்றிய கேள்விகளும், புரிதலும் எழுகின்றன என்பதை நீங்கள் காணலாம். அப்பொழுது அவர்களுக்கு முற்றிலும் புதியதாக தமிழ் மொழியைக் கற்றுக்கொடுப்பது கடினம்.  இளமையிலேயே இப்பொறுப்புகளைப் பெற்றோர் நடைமுறைப்படுத்துவது மிக அவசியமாகிறது.

இதற்கான மிக அருமையான தளம் பேரவை மாநாடு! பேரவையில் இந்த ஆண்டும் தமிழ் அமெரிக்க இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகளை அவர்களே ஒருங்கிணைக்கிறார்கள். முழுமையாக அறிந்து கொள்ள பின்வரும் சுட்டிக்குச் செல்லுங்கள்:

Wednesday, June 13, 2012

FeTNA வெள்ளி விழா: கவனகக்கலை நிகழ்ச்சியும் பயிலரங்கமும்!!

தமிழ் மக்களின் பழங்கலைகளில் கவனகக் கலையும் ஒன்று. கவனகம் என்பது ஒரே நேரத்தில் தன்னைச்சுற்றி நடக்கக் கூடிய பல்வேறு நிகழ்வுகளை நினைவில் நிறுத்தி முடிவில் தொகுத்துக் கூறுவதாகும். இது நினைவாற்றலின் உயர்ந்த வடிவம்.

நமது முன்னோர்கள் நூறு நிகழ்வுகள்வரை நினைவில் நிறுத்திச் சொல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் அரசர்களை மகிழ்விக்கவும், செல்வந்தர்கள் மத்தியிலும் இருந்து இந்தக் கவனகக் கலையைச் செய்திருக்கின்றார்கள். அவர்களுள் முக்கியமானவர்கள்.

செய்கு தம்பிப் பாவலர் சிறிய சரவணக்கவிராயர் தே.போ. கிருட்டிணசாமி பாவலர் நா.கதிர்வேல் பிள்ளை அட்டாவதானியார் அச்சுத உபாத்தியாயர் அரங்கநாதக்கவிராயர் அப்துல்காதர் அரங்கசாமி அய்யங்கார் சரவணக் கவிராயர்.

அரண்மனைகளிலும் அடுக்குமாடிச் செல்வந்தர்கள் வீடுகளிலும் மட்டுமே காண முடிந்த கவனகக்கலையைத் தமிழகத்தில் பட்டி தொட்டிகளுக்கெல்லாம் கொண்டு சென்ற பெருமை பதின்கவனகர் கோவில்பட்டி இராமையா அவர்களையே சாரும். அவர் கண்பார்வை இல்லாதவர். பத்து வகையான கவனகக்கலை நிகழ்ச்சி நடத்துவதில் வல்லவர். அவர் இன்று உயிருடன் இல்லை.

அவருக்குப்பின் கவனகக்கலையைத் தமிழகம் மட்டுமல்லாது கடல் கடந்து உலகம் முழுவதும் கொண்டு சென்ற பெருமை பதின்கவனகர் (தசாவதானி) இராமையா அவர்களுடைய புதல்வர் பதினாறுகவனகர் திருக்குறள் கனகசுப்புரெத்தினம் அவர்களையே சாரும். அவரை இன்றைய கவனகக் கலையின் தந்தை என்று சொல்லலாம்.

அடுத்த கவனகர் செங்கல்பட்டு திருக்குறள் இரா.எல்லப்பன் அவர்கள். இவர் திருக்குறளில் மட்டும் முப்பதிற்கும் மேற்பட்ட கவனகங்களைச் செய்யக் கூடியவர்.

எண் கவனகம், எழுத்து கவனகம், வண்ண கவனகம், பெயர் கவனகம், கூட்டல் கவனகம், கழித்தல் கவனகம், பெருக்கல் கவனகம், தொடுதல் கவனகம், மணியடித்தல் கவனகம், ஈற்றடிக்கு வெண்பா எழுதுதல், சிலேடை வெண்பா எழுதுதல், கட்டளைக் கலித்துறை எழுதுதல், சூழ்நிலைக்கேற்ப இசைப்பாடல் எழுதுதல், மாயக் கட்டம், பிறந்த நாளுக்குக் கிழமை கூறல், கனமூலம் கூறல், இருமடி கூறல், நாலடியார், திருக்குறள் கூறல், கழித்தல் கவனகம், கனமூலம் கூறல், சோப்பில் சிற்பம் செதுக்குதல், சூழ்நிலைக்குப் பாடல் எழுதுதல் எனப் பலவகையான கவனகங்கள் உள்ளன.

இக்கவனக் கலையில் இன்றைய காலகட்டத்தில், எழுபது கவனகங்களை நடத்தும் ஆற்றல் கொண்ட மற்றுமொரு வல்லவர்தான் கலை.செழியன் அவர்கள் ஆவார். அமெரிக்கத் தமிழர்களுக்கும், தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கும் இவ்வரிய கலையைக் கற்பிக்க வருகிறார் கலை.செழியன் அவர்கள். கலை செழியன் ஓர் இளம் தமிழறிஞர். இவர் ’செந்தமிழ் அந்தணர்’ இளங்குமரனார் அய்யா அவர்களின் வழிகாட்டுதலில் ’தமிழியலில் கவனகக்கலை’ என்கிற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

28 வயது இளைஞரான இவர் ஓர் ’எழுபது கவனகர்’. பல செயல்களை நினைவில் வைத்து செயல்படும் கலைதான் கவனகக்கலை. திரு. செழியன் 13 வயதிலிருந்தே கவனகக்கலை செய்து வருகிறார். இவர் ’நினைவாற்றலில் மனப்புரட்சி’ என்கிற நூல் ஒன்றை எழுதியுள்ளார். அய்யா இளங்குமரனார் முன்னிலையில் இவர் எழுபதின் கவனகம் அரங்கேற்றம் செய்தது இவரது வாழ்வில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

இதுவரை இவர் 1500 மேடைகளில் கவனகக் கலையை நிகழ்த்தியிருக்கிறார். இச்சிறுவயதிலியே இவர் பல விருதுகளும் சிறப்புகளும் பெற்றுள்ளார். இவர் எழுதிய நினைவாற்றலில் மனப்புரட்சி என்கிற நூலிற்காக தமிழக அரசின், ஆண்டு 2000-த்துக்கான “தமிழிலக்கியச் சங்கப்பலகைக் குறள்பீடப் பரிசு” பரிசு பெற்றார். இவரது பேச்சுத் திறமைக்காக 2010-ம் ஆண்டு சென்னைக் கம்பன் கழகம் ’ வளர் தலைமுறை பேச்சாளர் விருது’ வழங்கி சிறப்புச் செய்திருக்கிறது.

பேரவை வெள்ளி விழாவில் இவரது கவனகக்கலை ஆற்றலைக் காணவும், நம் அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கான கவனகக்கலை பயிற்சியை மேற்கொள்ளவும் நாம் அனைவரும் வெள்ளி விழாவில் கலந்து கொள்வது ஒரு நல்வாய்ப்பாக இருக்கிறது என்பது திண்ணம்.

Register early before it gets full. It happened in FeTNA 2009!

பேரவை வெள்ளி விழாவில், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளரான திரு. எஸ்.ராமகிருஷ்ணன் இலக்கியம், சினிமா, நாடகம், சிற்றிதழ்கள், வார இதழ்கள், அயலக இதழ்கள், இணையம் எனப் பல தளங்கள் மூலம் இலக்கிய வாசகர்களிடம் நன்கு அறிமுகமானவர்.

'அட்சரம்' என்னும் இலக்கிய இதழை நடத்தி வரும் இவர், நவீன தமிழ்ச் சிறுகதையில் புதிய போக்குகளை உருவாக்கி படிப்பவர் கவனத்தை ஈர்த்தவர். ஆனந்த விகடனில் இவர் எழுதிய 'துணையெழுத்து' பரந்த அளவில் வாசகர்களின் கவனத்தை ஈர்த்தது. மகாபாரதத்தை மையமாகக் கொண்ட இவரின் 'உப பாண்டவம்' என்ற புதினம், தற்போது மலையாளம் மற்றும் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது 'நெடுங்குருதி' எனும் புதினம் 2003இல் தமிழின் சிறந்த புதினமாக தேர்வு செய்யப்பட்டது. திரு. எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்து வெளியாகியுள்ள 'உலக சினிமா' என்ற நூல் உலக சினிமாவை தமிழில் அறிமுகப் படுத்தும் அரிய முயற்சி. குழந்தைகளுக்கான 'ஆலிஸின் அற்புத உலகம்' என்ற உலகப் புகழ் பெற்ற புதினத்தை மொழிபெயர்த்துள்ளார். உலக இலக்கியம் குறித்து ' வாக்கியங்களின் சாலை' என்ற கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.

காலத்தால் புறக்கணிக்கப்பட்டு சாம்பல் படிந்து நிற்கும் கிராமங்களையும் , நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்தவர்களாகத் தனிமையும் துயரமுமாக அலைவுறும் விளிம்பு நிலை மனிதர்களையும் திரு. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் படைப்புகள் எங்கும் காணமுடிகிறது. கதை சொல்லலில் பல புதிய சாத்தியங்களை உருவாக்கும் இவரது மிகுபுனைவும் , கவித்துவ மொழியும் தமிழ்க் கதையாடலில் மிகத் தனித்துவமானது. இவரின் படைப்புகள் புதியதொரு தமிழ்ப் புனைவியலை உருவாகுகின்றன என்பதே உண்மை.

தனது எழுத்துகள் பற்றி திரு. எஸ். ரா அவர்கள் கூறுகையில்" என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் வெல்வதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல வெறியோடும் பேராசையோடும் உலகை எனது இருப்பிடத்துக்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள்" தமிழ் இலக்கிய உலகில் மிகவும் கொண்டாடப்படும் எழுத்தாளர் திரு. எஸ்.ரா அவர்களைக் கண்டு உரையாடவும், அவர்தம் சொற்பொழிவைக் கேட்டுப் பயனுறவும் நமது வெள்ளிவிழா ஒரு நல்ல வாய்ப்பைத் தருகிறது..

Register early before it gets full. It happened in FeTNA 2009!

Tuesday, June 12, 2012

நாங்கள் பேரவை விழாவை எப்படி நடத்தினோம் - பனைநிலத்திலிருந்து ஒரு கண்ணோட்டம்

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 24வது ஆண்டு விழா 2011 ஆம் ஆண்டு சார்ள்ஸ்டன், தென் கரோலினாவில் நடந்தது. சிறப்பாக நடந்தது. இதனை நாங்கள் மட்டும் சொல்லவில்லை. வந்திருந்த, தொலைவிலிருந்து ஒளிபரப்பைப் பார்த்திருந்த எல்லோரும் சொன்னது. இவ்விழாவினைப் பற்றிய ஒரு பதிவினைச் செய்வது எங்கள் சங்கத்துக்கு அவசியம். ஆனால் அதனை எங்கிருந்து தொடங்குவது என்றுதான் தெரியவில்லை. எத்தனையோ மணித்துளிகள், எத்தனையோ ஆயிரங்கள், அவ்வளவு பேருடைய வியர்வையிலும் துளிர்த்து, வளர்ந்து பூத்துக் குலுங்கியது அந்த விழா. யாருக்கு நன்றி சொல்வது, எல்லோரையும் உள்ளடக்கிவிட முடியுமா அந்த நன்றியுரையில் என்றெல்லாம் மலைப்பாக இருக்கிறது. சென்ற ஆண்டு 2010லேயே பனைநிலம் என்று முடிவாகிவிட்டது. அன்றிலிருந்து ஒருங்கிணைப்பாளர் முனைவர் தண்டபானி அவர்களுடைய தலைமையில் வேலைகள் சிறுகச் சிறுகச் சீராக செய்துவரப்பட்டன. கனெக்டிகட் விழா முடியும் வரையில் அரங்கைப் பதிவு செய்ததைத் தவிர கனெக்டிகட் விழாவுக்கு எவ்விதக் குந்தகமும் ஏற்படாத வகையில் பணியாற்றினோம். 2010 கனெக்டிகட் விழாவுக்கு எங்கள் சங்கத்தின் சார்பில் சுமார் 20 பேர் சென்றிருந்து பறையடித்து, சார்ள்ஸ்டன் நகர அலுவலகத்திலிருந்து நாங்கள் வாங்கிக் கொண்டு போயிருந்த நகரக் கையேட்டினை அனைவருக்கும் கொடுத்து வாருங்கள் வாருங்கள் என வரவேற்று வந்தோம். அதன் பிறகு வேலைகள் மிகத் துரிதமாக நடைபெற்றன. அக்கம்பக்கத்துத் தமிழ்ச் சங்கங்களுக்குச் சென்று பேரவை விழாவைப் பற்றிக் கூறி வரவேற்பிதழைக் கொடுத்து வந்தோம். கிரீன்வில், சார்லெட், அட்லாண்டா, அகஸ்டா, கொலம்பியா ஆகிய ஊர்களுக்குச் சென்று சொந்த முறையில் அழைப்பினை விடுத்தோம். அழைப்பிதழைத் தமிழ்நாட்டிலிருந்து ஒரு அச்சகம் அன்பளிப்பாக அளித்தது. ஒவ்வொருவரும் தத்தம் நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்து, விழாவுக்கு வரும்படி கேட்டுக் கொண்டோம். பேரவையைப் பற்றியும், விழாவைப் பற்றியும் பலரும் அறிந்துகொள்ளும் வகையில் தொலைபேசி வழியாகவே பெருமளவில் பரப்புரையை மேற்கொண்டோம். எங்களது அன்பான அழைப்பினைப் பலர் ஏற்றுக் கொண்டதையும், வர இயலாதவர்கள் அன்போடு தங்கள் ஆசியைக் கூறிக்கொண்டதையும் கண்டோம். இன்னும் சிலர், வர இயலாமல் போனதை நினைத்து வருந்தி, தங்கள் நன்கொடையை விழாவுக்கு அளித்த கொடை மாண்பையும் கண்டோம். இவர்கள் அனைவருக்குமான நன்றியை மற்றவர்களோடு சேர்த்து இவ்விடுகையின் இறுதியில் சொல்வோம்.

ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் ஒரு குழு. உணவு, நிகழ்ச்சிகள், அலங்காரம், நிதி திரட்டல், மலர், பதிவு, உபசரிப்பு என்று பலவிதக் குழுக்கள். ஒவ்வொன்றிலும் உள்ளூர்த் தமிழ்ச் சங்கத்தவரும், வெளியூர்த் தமிழ்ச் சங்கத்தவரும் கலந்திருந்தனர். வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரங்களுக்கொருமுறை என தொலைஅழைப்பில் கலந்துகொள்வோம். ஒவ்வொரு குழுவிலும் இருந்த உழைப்பாளிகளை நினைக்கும்போதும், அவர்கள் ஈடுபாட்டுடன் தத்தமது கடமைகளை ஒழுங்குணர்வோடும், அர்ப்பணிப்போடும் செய்ததை நினைக்கும்போது நெஞ்சம் நிறைகின்றது. இத்தகைய தொண்டர்களின் அர்ப்பணிப்பால்தான் பேரவை என்கிற ஆலமரம் சிறிய ஊர்களில்கூட கிளைபரப்பி நிலைகொள்ள முடிகிறது. இந்த அர்ப்பணிப்பும் தொண்டுணர்வும் மேலும் பெருகும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. எத்தனையோ தடங்கல்கள், சவால்கள், எதிர்ப்புகள் என்று பலவற்றுக்கும் முகம் கொடுத்து விழாவை வெற்றிகரமாக நடத்த முடிந்ததற்குக் காரணம் இந்தத் தொண்டர்களும், அவர்களைத் தட்டிக் கொடுத்து ஊக்குவித்து மகிழ்ந்த ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட தலைவர்களும், பேரவையின் முன்னோடிகளும், கூடவே தமிழ் என்ற சக்திவாய்ந்த மொழி தந்த பலமும்தான். இந்த பலமே பல்வேறு தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்த நண்பர்களும் மனமுவந்து முன்வந்து இணையமாகட்டும், மேடை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதாக இருக்கட்டும், விழா அன்றைக்கு வரிந்து கட்டிக் கொண்டு விருந்து பரிமாறுவதாக இருக்கட்டும், அல்லது பல்வேறு செயற்பாடுகளை நடத்துகிறதாகட்டும், எந்த வேலையையும் பகிர்ந்துகொண்டு செய்தார்கள். அந்தத் தோழமைக்கு எங்கள் நன்றிகளையும் இறுதியில் சொல்வோம்!

உணவைச் சமைக்க இடம் கண்டுபிடித்தது, சமைப்பதற்கு உணவகங்களை ஏற்பாடு செய்தது, சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுத்து அழைத்து விசா, பயண ஏற்பாடுகளைச் செய்தது, தமிழன்னைக்கு சாமிமலையில் சிலையைச் செய்தது (அதுவும் நன்கொடையே), அரங்கின் முகப்பில் வைக்க தஞ்சை பெரிய கோயிலைப் பெரிய அளவிலே அச்சிட்டது (நன்கொடையே), உள்ளரங்கிலே பாவை விளக்கு ஓவியங்கள் (நன்கொடை), காலங்காட்டி வடிவமைத்து அச்சிட்டது (நன்கொடை), விழாவுக்கான அன்பளிப்புப் பை, பொன்னாடை, சந்தனமாலை, பதக்கங்கள், பரிசுகள் (நன்கொடை), மலரைத் தயாரித்து அச்சடித்தது (நன்கொடை) என ஒவ்வொரு பகுதியிலும் வேலைகள் செம்மையாக நடந்தேறின. ஒவ்வொரு வேலையின்போதும் சந்திக்க நேரும் மக்கள் அனைவரும் பாராட்டியது அக்குழுவினரின், பேரவையின் மொழி மீதான நேசத்தையும், அதற்காக நாம் அன்போடு செலுத்தும் உழைப்பையும்தான். அரங்கத்தின் பணியாளர்கள் அனைவரும் அன்போடு நமக்குப் பணிவிடை செய்தார்கள். இறுதியில் அரங்கைக் காலி செய்துவிட்டுக் கிளம்பும்போது நம்மை ஆரத் தழுவிப் பாராட்டி விடை கொடுத்தனுப்பினார்கள். எளிமையான மக்களின் உழைப்பாலேயே பெரும் காரியங்கள் சாதிக்கப்படுகின்றன என்பதை இன்னொருமுறை நாம் உணர்ந்துகொள்கிறோம்.

முதல் நாள் மாலை தென் கரோலினா மீனகத்தில் நடைபெற்ற வரவேற்பானது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உவப்பைத் தந்தது. அந்த அழகிய மாலை நேரத்தில் வெளியே கூப்பர் ஆறும், வாண்டோ ஆறும் அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கும் நீர்நிலையினருகே தமிழ்க் குடும்பங்கள் சங்கமித்திருந்த காட்சி அழகு. மீனகத்தினுள்ளே குழந்தைகள் ஓடியாடி ஆர்வத்துடன் பலவித மீன்களையும், இதர உயிரிகளையும் பார்த்து, கற்று, குலாவி மகிழ்ந்திருந்தனர். புதுமையான இவ்வரவேற்பு ஏற்பாட்டினைப் பலரும் மகிழ்ந்து பாராட்டினர்.

விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள், கலைஞர்கள் முதலானோர் தத்தமது குறித்த நேரங்களில் வந்திருந்து விழாவில் பங்களித்தது மட்டுமல்லாது, பல்வேறு நிகழ்ச்சிகளையும் கண்டும், மக்களோடு கலந்தும் இன்புற்றிருந்தார்கள். அவர்களில் பலரும் பேரவையின் செயற்பாடுகளைப் பற்றிய பெருமிதமும், ஒருவித வியப்பும் கொண்டிருந்தார்கள் என்பதை அவர்களே சொன்னார்கள். நல்ல வேளையாக, "பெரும்" நட்சத்திரங்கள் என்ற போர்வையில் எந்த கூட்ட இழுப்பானும் (crowd puller) வரவில்லை என்பது எங்களுக்கு மகிழ்ச்சி. ஏனெனில் கவர்ச்சிக்கான எந்த அம்சத்தையும் காட்டாமல், திரைப்பட நாயக/நாயகிகளின் "கண்காட்சி" இல்லாமல் தமிழ் மொழி, கலை, பண்பாடு என்ற அறிவுசார் குணநலன்களை மட்டுமே முன்வைத்து ஒரு விழாவை வெற்றிகரமாக நடத்திவிட முடியும் என்று காட்டியது இந்த விழா. கடந்த சில ஆண்டுகளில் அறிந்தோ அறியாமையினாலோ சிலருக்கு ஒருவித பயம் கலந்த புரியாமை உண்டாகியிருந்தது, அது என்னவெனில், திரையுலகில் "பெரிய நட்சத்திரங்கள்" யாரையாவது கொண்டுவந்து காட்டினால்தான் விழாவுக்கு மக்கள் வருவார்கள் என்ற அறியாமை. அந்த மாயையை உடைத்து, பேரவை விழாவைத் தமிழின் பலத்தோடு மட்டுமே நடத்திவிட முடியும் எனக் காட்டியது இந்த விழா. நாம் அழைத்த எந்தக் கலைஞரும், எந்த அறிஞரும் எந்தவொரு crowd pullerஐயும் விட அவரவரது துறையில் சிறப்பானவர்களே. இத்தகைய தகுதி வாய்ந்த சிறப்பு விருந்தினர்களைத் தேர்ந்தெடுத்து அழைத்து சிறப்பித்ததைக் குறித்து நாம் பெருமிதம் கொள்கிறோம். வரும் ஆண்டுகளில் பேரவை விழாவை நடத்த முனையும் ஒவ்வொரு சங்கமும் பயில வேண்டிய நீதி இது, கைக்கொள்ள வேண்டிய கோட்பாடு இது.

பல்வேறு தொழில் நிறுவன உரிமையாளர்களும், வணிகப் பெருமக்களும், அன்பர்களும் தங்களால் இயன்ற அளவு பொருளுதவி செய்து உதவினார்கள். பிறரறியாமல் சக்தி கலைக்குழுவுக்கென எங்கள் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் 5000 டாலர் மனமுவந்து கொடுத்த கொடையை என்னவென்று பாராட்ட? ஒவ்வொருவரும் செய்த பொருளுதவியும் எங்கள் சங்கத்தில் நன்றியோடு நினைவுகூரப்படுகிறது. ஏனெனில் பொருளீட்டுதல் எவ்வளவு கடினமென்பதை நாமனைவரும் அறிவோம். ஒவ்வொரு தமிழ்ச் சங்கமும் தங்களது நேரத்தையும், உழைப்பையும் செலவிட்டு நிகழ்ச்சிகளைத் தயாரித்து வந்து படைத்தார்கள். அந்த உழைப்புக்கு நம் வந்தனங்கள். பல தமிழ்ச் சங்கங்களுக்கு ஆர்வமிருந்தும் தொலைவு காரணமாக வர இயலவில்லை. நிகழ்ச்சிக் குழு ஒரு தமிழ்ச் சங்கத்தின் கலைஞர்களிடம் சற்றே கடுமையாக நடந்துகொண்ட ஒரு நிகழ்வு மேடையின் பின்புறத்தே ஒருமுறை நடந்தது. அத்தகைய நிகழ்வுக்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம். நேரப் பற்றாக்குறை காரணமாக எங்கள் தமிழ்ச் சங்கம் மூன்று மாத காலமாகப் பயிற்சியெடுத்து அரங்கேற்ற நினைத்திருந்த "மருது பாண்டியர்" நாடகம் அரங்கேறாமலேயே போனது இன்னொரு வருத்தம். இருப்பினும் அதில் வரும் மங்கையரின் நடனத்தை மட்டுமேனும் நிகழ்த்திவிட முடிந்ததில் ஒரு சிறிய தேறுதல். யாரேனும் ஒருவர் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நல்ல விமரிசன நோக்குடன் எழுதினாரென்றால் நன்றாக இருக்கும், யாருக்கு அந்த நேரம் இருக்கப் போகிறது. கண்ணன் என்ற எங்களூர்க்காரர் சுமார் 5000 அருமையான படங்களை எடுத்திருந்தார். இப்படங்களை பேரவையின் இணைய தளத்தில் காணலாம். அவருக்கு உறுதுணையாக அய்யா சிவன் அவர்களும் படங்களை எடுத்துக் கொண்டிருந்தார். மறுபுறம் ரவி, செந்தூரன், தீபன், பாக்கியராசன், விஜய் அணி நேரடி ஒளிபரப்பினைத் துல்லியமாகச் செய்துகொண்டிருந்தது. பேரவை விழாவினை ஒழுங்கமைத்த அத்தனை குழுக்களின் நடவடிக்கைகளையும், அவை எதிர்கொண்ட சவால்கள் அவற்றைத் தீர்த்த விதங்கள் போன்றவற்றை எழுத முனைந்தால் அது ஒரு புத்தகமாக நீளும்.

நன்றி நவிலல்! மேற்சொன்ன அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களது உளப்பூர்வமான நன்றியையும், அன்பையும் தெரிவித்துக் கொள்வதில் பேருவகை அடைகிறோம். குறிப்பாக, பேரவைத் தலைவர் முனைவர் பழனி சுந்தரம் அவர்களுக்கும், கடந்த சில ஆண்டுகளாகவே பேரவை விழாக்கள் தொடர்ச்சியாகப் பொருளாதார அளவிலும், மக்கள் கூடும் எண்ணிக்கையிலும், நிகழ்ச்சிகளின் தரத்திலும் உயர்வதற்கு அரும்பாடுபட்டுவரும் முனைவர் முத்துவேல் செல்லையா உட்பட்ட பேரவையின் செயற்குழுவிற்கும், பேரவையின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்கும் வாழ்நாள் உறுப்பினர்களுக்கும், பேரவையின் முகமாக விளங்கும் இணையதளத்தைச் சிறப்புற வடிவமைத்து நிர்வகித்த நண்பர் விஜய் மணிவேல் அவர்களுக்கும், இதர பேரவை பற்றாளர்களுக்கும் இந்நேரத்தில் எங்கள் நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறோம். எவரையேனும், எதையேனும் குறிப்பிடாது விட்டிருப்போமாயின் அது தற்செயலாக நேர்ந்ததேயென்றும், சுட்டிக்காட்டப்படுமிடத்து திருத்திக் கொள்வோமென்றும் பணிவுடன் தெரிவிக்கிறோம். நாமனைவரும் இணைந்து இதனைப் போலவே தொடர்ந்தும் பேரவையின் பல்வேறு திட்டங்களுக்கும் உறுதுணையாக இருப்போம் என்ற உறுதியோடு நிற்போம். நன்றி, வணக்கம்!

- பனையேறி, பனைநில தமிழ்ச் சங்கம், சார்ள்ஸ்டன், தென் கரோலினா.(இது முந்தைய பதிவின் திருத்தங்களுடனான மீள் பதிவு.)

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழிசை விழா!!

அமெரிக்க மண்ணில் தமிழிசையை முறைப்படி விதைத்து, வளர்த்து, செழிக்கச் செய்துவரும் பேரவை முயற்சிகளின் அடுத்த கட்டமாக, முறைப்படுத்தப்பட்ட தமிழிசை விழாவுக்கான ஏற்பாடுகள் ஈடேறி வருகின்றன. தமிழிசை விழாவின் போது தமிழிசை பயிலும் மாணவர்களுக்கு அவர்தம் ஆற்றலின் நிலைக்கொப்ப வாய்ப்பளிக்கப்படும். இதை கருத்திற்கொண்டு, தற்போது அனைத்து நிலைகளுக்கும் இன்னிசையேந்தல் திரு.ஆத்மநாதன் அவர்கள் மூலம் தமிழ்ப்பாடல்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.

நமது வெள்ளி விழாவையொட்டி, தமிழிசை விழாவும் இடம் பெற உள்ளது. அது குறித்த கூடுதல் விபரங்களை தமிழிசை விழா ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டுப் பெற்றுப் பயனடைக.! மேலும், இவ்விழா கீழ்க்காணும் பிரிவுகளாக நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

அடிப்படைப்பாடல் பிரிவு. இரண்டு மணி நேரம். தமிழ் கீதங்கள், தமிழ் வர்ணங்கள், தமிழ்க் கீர்த்தனைகள். இணையதளத்தில் சில வெளியிடப்படும். தமிழிசை பாடல் பிரிவு. இரண்டு மணி நேரம். பாடல்களை அவரவரே தேர்வு செய்துகொள்ளலாம்.

தமிழிசை விழாவைப் பற்றி அறிந்து கொள்ளவும், முன்பதிவு செய்து கொள்ளவும் இச்சுட்டியைச் சொடுக்கிப் பயனடைக!

ஒருங்கிணைப்பாளர்கள்: தேவகி செல்வன் (devakiselvan@yahoo.com)
கரு.மலர்ச்செல்வன் (kmalarselvan@yahoo.com)
கொழந்தைவேல் இராமசாமி (samyrama1@yahoo.com)
லதா பார்த்தசாரதி (partha_latha@hotmail.com )
பொற்செழியன் இராமசாமி (Porchezhian@hotmail.com )

இவ்விழாவைத் தொடர்ந்து பல ஊர்களிலும் தமிழிசை நிகழ்ச்சிகளை நடத்தி இன்புற்று மகிழ்வோம்.

தமிழிசை விழாவைச் சிறப்பாக நடத்திக் கொடுக்க வருகிறார் கலைமாமணி டி.கே.எஸ் கலைவாணன் அவர்கள். கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் மேலான இசைக் கச்சேரிகளை நடத்திய பெருமைக்கு உரியவர். இசையரசு எம்.எம்.தண்டபாணி தேசிகரின் மாணவர். தமிழை, அதன் ஒலிப்பு பிசகாமல் பாடி, தமிழிசையின் மூலம் கேட்போரைக் கட்டிப் போடுவதில் கைதேர்ந்த வல்லவரான இவரது நிகழ்ச்சி விழாவில் இடம் பெறுவது இசையார்வலர்க்கு.இன்ப அதிர்ச்சி!! 


Monday, June 11, 2012

அமெரிக்கா: தமிழ்த்தேனீ-2012 நாடளாவிய தமிழ்ப் போட்டிகள்

ஆண்டுதோறும் இடம் பெற்றுக் கொண்டிருக்கிற, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை நடத்தும் ‘அமெரிக்கத் தமிழ்த் திருவிழாவின் தமிழ் மாணாக்கருக்கான நாடளாவிய தமிழ்த்தேனீ போட்டிகள், பேரவையின் வெள்ளி விழாவிலும் இடம் பெறுகிறது. அது பற்றிய விபரம் கீழே வருமாறு:

திருக்குறள் (Thirukkural ) போட்டி

மூன்று பிரிவுகள்: முதலாம் நிலை—நான்காம் நிலை(1-4); ஐந்திலிருந்து எட்டு (5-8); ஒன்பதிலிருந்து பனிரெண்டு (9-12)

நிலை என்பது பள்ளியாண்டு 2011-2012(school grades) வகுப்பின் அடிப்படையில் கொள்ளப்படும்.

கட்டுரைப் போட்டி (Essay Writing)

மூன்று பிரிவுகள்: நிலை நான்கு மற்றும் ஐந்து (4-5); ஆறிலிருந்து எட்டு (6-8); ஒன்பதிலிருந்து பனிரெண்டு (9-12)

பேச்சுப் போட்டி (Public Speaking)

நான்கு பிரிவுகள்: முதல் நிலை-மூன்றாவது(1-3); நான்கு மற்றும் ஐந்து (4-5); ஆறிலிருந்து எட்டு(6-8); ஒன்பதிலிருந்து பனிரெண்டு(9-12)

தமிழ்ப் பன்முகத்திறன் – Jeopardy (பேசுதல், மு.வ அறிமுக வினாக்கள், திரைப்படக் காட்சி, திரைப்பாடல்)

நான்கு பிரிவுகளை உள்ளடக்கிய Jeopardy வடிவ பன்முகத்திறன் போட்டி. முதலாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு(1-12) வரை அனைவரும் பங்கேற்கலாம். போட்டி விபரங்கள் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும்: www.fetna.org

கூடுதல் விபரங்களுக்கு தமிழ்த்தேனீ ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்பு கொள்க!

பூங்கோதை poongovind@yahoo.com பொற்செழியன் Porchezhian@hotmail.com உமா நெல்லையப்பன் nellaiappan@msn.com இளங்கோ சின்னச்சாமி ilango_language@yahoo.com

கூடுதல் தகவலுக்கு: www.fetna.org

Sunday, June 10, 2012

வெள்ளி விழாக் காணும் பேரவை


வண்ணப் பூவும் மணமும் போலே, மகர யாழும் இசையும் போலே, கண்ணும் ஒளியும் போலே, நமது கன்னல் தமிழும் நாமும் அன்றோ? உடலோடு உயிர் ஒன்றியிருப்பது போலே, நம் மனமும் தமிழும் இரண்டறக் கலந்து வாழ்கிறது என்பதுதானே மெய்? தமிழ் என்றால், மொழியென மட்டுமே கணக்கில் கொள்ளலாகாது.மொழியூட்டும் அறிவு; மொழி கொடுக்கும் கலை; மொழி வகுக்கும் தொன்மை; மொழி படைக்கும் பண்பாடு; மொழி வளர்க்கும் சிந்தனை. இப்படியான கூறுகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டதுதான் தாய்மொழி என்பதாகும். அதனடிப்படையில், தமிழுக்காகவும் தமிழனுக்காகவும் கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாய்க் கடமையாற்றிச் செம்மாந்து நிற்கும் ஒரு கட்டமைப்புதான் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை என்பதாகும்.

ஆரிசுபர்க், வாசிங்டன் வட்டாரம், டெலாவேர், நியூயார்க், இலங்கைத் தமிழ்ச்சங்கம் என ஐந்து சங்கங்கள் இணைந்து, “ஆங்காங்கே இருந்த தமிழர்களை எல்லாம் ஒரு இடத்தில், ஒரே கூட்டமாகக் கொண்டு வந்து சேர்ப்பதுதான் அன்றைய தேவையாக எங்களுக்கு இருந்தது.” என்கிறார் வட அமெரிக்க கூட்டுத் தமிழ்ச்சங்கத்தை தோற்றுவித்தவர்களுள் ஒருவரும், முதல் தலைவருமான முனைவர்.முத்தரசன் அவர்கள்,அப்படிக் கூட்டிய கூட்டத்தில், வந்திருப்போருக்கு தமிழ்க்கலையை ஊட்டுவதும், தமிழ்க்கல்வியை வலியுறுத்துவதும், பண்பாட்டைப் பேணுவதுமே குறிக்கோளாக இருந்தது என்றும் கூறுகிறார் தலைவர் முனைவர் முத்தரசன் அவர்கள். அவர் கூற்றுக்கொப்ப, அதன் குறிக்கோளில் இருந்து நழுவாதும் வழுவாதும் தன் வழியில் செம்மையாகச் சென்று, இருபத்து ஐந்து ஆண்டுகளைக் கடந்து வந்திருப்பதுதான் பின்னாளில் பெயர் மாற்றம் கண்ட, வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையாகும்.

பேரவையானது தன் கடமைகளையும் பொறுப்புகளையும் நாளுக்கு நாள் கூட்டிக் கொண்டே போகிறது என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.அறப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டும், வட அமெரிக்கத் தமிழர்கள் என்பதையும் கடந்து உலகத் தமிழர்கள் என்கிற வரையறையையும் தேவைக்கொப்ப பாவனைக்குக் கொள்கிறது. எடுத்துக்காட்டாக, கும்பகோணத்தில் தீ விபத்தில் சிக்குண்டும் புண்பட்டும் போன தமிழ்ச்சிறார்களுக்கு உதவிக் கரம் நீட்டவும் மறந்து விடவில்லை; இலங்கையில் மனித உரிமைகள் நசுக்கப்பட்ட போதும் வாளாது இருந்துவிடவில்லை; ஆழிப்பேரலையில் தமிழர்கள் அல்லலுற்ற போதும் தன் கடமையைச் செய்யாமல் இருக்கவில்லை வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை. வட அமெரிக்கத் தமிழர்களின் வாழ்வியல் முன்னேற்றங்களுக்கும், விழுமியச் செம்மைப்படுத்தலுக்குமாக, அமெரிக்கச் சட்டதிட்டங்களுக்குள் இயங்கி, தமிழ் விழுமியக் கூறுகளை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறது பேரவை.

தமிழ்நாட்டில் இருந்து தன் தொழில்முறைப் பயணமாக தமிழரொருவர் அமெரிக்க நகர் ஒன்றுக்கு வருகிறார். வந்த இடத்தில் காலனின் சூழ்ச்சிக்குப் பலியாகி மரணித்து விடுகிறார் அவர். அவருக்கான ஈமச்சடங்குகள் தமிழ் முறைப்படி செய்தாக வேண்டும். அதற்கான பொருளியல் கூறுகளையும் கவனித்தாக வேண்டும். விபரம் நமது பேரவை முன்னோடிகளுக்குத் தெரிய வருகிறது. ஓடோடிச் சென்று கடமையாற்றித் திரும்புகிறார்கள். உள்ளூர் மற்றும் வெளியூர்த் தமிழ்ச்சங்கத்தினர். இது எப்படி இயன்றதாகிப் போனது? உள்ளூர் மற்றும் வெளியூர்த் தமிழர்களைப் பிணைத்தது எது?? பிணைத்த பெருமை பேரவையைச் சேராதா??

இப்படியானதொரு பிணைப்பைத்தானே, இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர்நிறுவனத் தலைவர் முனைவர் முத்தரசன் அவர்கள் மனத்துள் கொண்டதாகக் கூறினார்? இப்படியான இக்கட்டான நேரங்களில், ஆங்காங்கே இருக்கும் தமிழர்களைக் கொண்டு வந்து சேர்ப்பதும் பேரவையின் வெற்றியாகும்!இருபத்து நான்கு ஆண்டுகளாய்த் தொடர்ந்து விழாக் கண்டிருக்கிறது பேரவை. இதோ, வெள்ளி விழாவும், முனைவர் மு.வரதராசனார் ஆண்டு விழாவாக மலரவிருக்கிறது.

விழாக்களை நடத்துவதால் என்ன பயன் என எவரும் வினவலாம். பண்டைய காலந்தொட்டு, ஊர்கூடித் தேர் இழுப்பதும், கலை விழாக்கள் இடம் பெறுவதும் மரபாக இருந்து வருகிறது. விழாக்களின் மூலம் சமூகத்துள் இணக்கம் பிறந்து ஒற்றுமை ஓங்குகிறது. வாழ்வியல் கூறுகள் செம்மைப்படுகிறது. இளைய தலைமுறையினர், மூத்தவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள ஏதுவாகிறது. சிந்தனை வயப்பட்டு மனம் மறுமலர்ச்சி கொள்கிறது. இன்றைய நவீன காலத்தில், தொடர்பு எல்லை பெருகிப் பொருளியல் வளர்ச்சிக்கும் வித்திடுகிறது. எனவேதான் தொன்றுதொட்டு  கடைப்பிடிக்கப்பட்டு வரும் விழாக்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணமே உள்ளன.ஆண்டுதோறும் பேரவை நடத்தும் அமெரிக்க தமிழ்த் திருவிழாவில், அப்படி என்னதான் இடம் பெறுகிறது?

உள்ளூர்க் கலைஞர்களைக் கொண்டு, நம் வீட்டுப் பிள்ளைகளைக் கொண்டு கலை, இலக்கிய, நாடக, நாட்டியங்கள் இடம் பெறுகின்றன. இதன் வாயிலாக, நம் வீட்டுப் பிள்ளைகள் கலைப் பயிற்சி பெற்றுச் சிறக்கிறார்கள். நமக்கான கலைகள் நம்மைவிட்டு அகலாது பேணிப் பாதுகாக்கப்படுகின்றன. காலத்தின் தேவைக்கொப்ப புதுமையைப் புகுத்தி மேம்பாடு காணச் செய்யப்படுகின்றன. காண்போருக்குக் களிப்பையூட்டிப் பேரின்பத்தை உண்டு செய்கிறது. மொழித்திறன் வளர்க்கும் போட்டிகள் பல நடத்தப்படுகின்றன. மொழியறிவு கூடியும், அறியாமை நீங்கவும் இவை வழிவகுக்கின்றன. அறநெறி சார்ந்த நூல்களைக் கற்று இளந்தலைமுறையினர் தத்தம் வாழ்வை நல்வழிப்படுத்துகிறார்கள்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் துவக்கநாள் முதல் ஆதரவளித்தும், விழாக்களுக்கு வருகையளித்துக் கொண்டும் இருப்பவர் டாக்டர்.M.N..கிருஷ்ணன் அவர்கள். நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக , ஆலோசராக  பல தமிழ்ப்பணிகளில் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறார். சென்ற ஆண்டு விழாவொன்றின் போது அவர் பகிர்ந்து கொண்ட அவர்தம் அனுபவம் கீழே வருமாறு:.                                     

"நான் நியூயார்க் நகரைச் சார்ந்தவன். தற்போது என்னுடன் இருப்பவர் என் மனைவி மருத்துவர் சசிகலா கிருஷ்ணன். நான், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை தோன்றிய காலத்திலிருந்தே பிணைப்புக் கொண்டவன். பேரவை ஆர்வலன். இதுவரைக்கும் பார்த்தோமானால், பேரவையானது முன்னேற்றம் கண்டு வளர்ச்சிப் பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்கத் தமிழர்களைப் பொறுத்த மட்டும், எண்ணிக்கையில் மட்டுமல்லாது, அனைவரும் வந்திருந்து தத்தம் குழந்தைகளோடு இருந்து பார்க்கும் தரமான  விழா என்றால், இது ஒன்றுதான்.வந்திருந்து, இனிமை போற்றி, இன்புற்றுச் செல்லக்கூடிய விழாக்கள் இவை. தமிழர்கள் எல்லாம் இன்னும் கூடுதலாய் வந்திருந்து சிறப்பெய்த வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஒருதடவை வந்தால், நீங்கள் திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருப்பீர்கள். இந்த விழாவில் உங்களையெல்லாம் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நாங்க இன்னும் அடுத்தடுத்த விழாக்களுக்கு வருவோம். Many more to come. Thank you!!"




பேரவையும், தமிழ்மாநாடுகளும்


இருபத்தைந்து முப்பது வருடங்களுக்கு முன் அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த நகரங்களிலோ அல்லது மாநிலங்களிலோ தமிழ்ச் சங்கங்களைத் தோற்றுவித்தார்கள். உதாரணமாக நியூயார்க், வாசிங்டன், நியூ ஜெர்ஸி, பிலடெல்பியா, சிகாகோ, சான்பிரான்சிஸ்கோ போன்ற நகரங்களில் தமிழ்ச் சங்கங்கள் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக நடந்து வருகின்றன. ஆரம்ப காலங்களில் தமிழ்ச்சங்கங்கள் தமிழர்கள் ஒன்று கூடிக் களிக்கும் அமைப்புகளாக இருந்தாலும், காலப் போக்கில் கலை நிகழ்ச்சிகளையும், தமிழ்ப் பள்ளிகளையும், போட்டிகளையும், சிறப்பு உரைகளையும், அச்சிதழ்களையும் நடத்த ஆரம்பித்தனர். நியூயார்க், வாசிங்டன், டெலவர், ஹேரிஸ்பர்க், நியூஜெர்சி (இலங்கைத் தமிழ்ச் சங்கம்) என்ற பெருநகரங்களில் இருந்த தமிழ்ச் சங்கங்கள் பின்னால் ஒன்று கூடி வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) என்ற கூட்டமைப்பையும் ஏற்படுத்தி ஆண்டுக்கு ஒருமுறை கோடை விடுமுறையில் தமிழர் விழாக்களை ஒருங்கிணைத்தனர். முதலில் நானூறு அல்லது ஐநூறு பேர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டுக்கு கடந்த சில ஆண்டுகளாக சுமார் ஆயிரத்து ஐநூறு பேர்கள் வரை வருகின்றனர். அமெரிக்காவில் அதிகம் தமிழர்கள் கூடும் ஒரே நிகழ்வு இந்த பேரவை அல்லது பெட்னா மாநாடு.


இந்த மாநாட்டை ஒவ்வொரு ஆண்டும் ஒருங்கிணைக்கும் ஆர்வலர்கள் மேற்கொள்ளும் சிரமங்கள் எளிதில் விவரிக்க முடியாதவை. ஆயிரத்துக்கும் மேலானவர்கள் கலந்து கொள்ளும் ஒரு பெரிய மாநாட்டை எந்த ஊதியமும் பெறாத தன்னார்வலர்கள் மட்டுமே ஒருங்கிணைப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல. ஒரு சில சுயதொழிலதிபர்களைத் தவிர இத்தன்னார்வலர்களில் பெரும்பாலோர் முழு நேர வேலையில் இருப்பவர்கள். அமெரிக்காவில் அலுவலக நேரத்தில் நம்முடைய அலுவலக வேலையை அதிகம் தட்டிக் கழிக்க முடியாது. முழுநேர வேலையிலிருக்கும் கணவன் மனைவி இருவருமே அனைத்து வீட்டு வேலைகளையும், குழந்தைகளைக் கவனிப்பதையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதற்கிடையே மாநாட்டை ஆகும் செலவுகளுக்காக தங்கள் சொந்தப் பணத்தை நன்கொடையாக வேறு அளிக்க வேண்டும். மாநாட்டுக்கான கட்டணச்சீட்டு வருவாயை வைத்து மாநாட்டுச் செலவில் மூன்றில் ஒரு பங்கைக் கூட ஈடு செய்ய முடியாது. அரங்கத்தை அலங்கரிப்பதில் இருந்து, உணவு பரிமாறுவது, சுத்தம் செய்வது, இந்தியாவிலிருந்து வந்திருக்கும் விருந்தினர்களை விமான நிலையத்துக்குச் சென்று காரில் அழைத்து வருவது வரை அனைத்து வேலைகளையும் என்ன படித்திருந்தாலும், எந்த பதவியிலிருந்தாலும் நாமே செய்ய வேண்டும். எனவே அமெரிக்க மண்ணில் இவ்வளவு பெரிய மாநாட்டை ஏற்பாடு செய்வது என்பது அவ்வளவு எளிதல்ல. மாநாட்டில் எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும், அதன் உள்ளடக்கத்தில் சில கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் மாநாட்டுக்காக ஒருங்கிணைப்பாளர்கள் ஆற்றி வரும் தொண்டை நெஞ்சாரப் பாராட்ட வேண்டும்.

பேரவை கடந்த காலத்தில் ஆற்றியுள்ள தொண்டு
  • பேரவையின் மாநாடுகளில் ஒரு பக்கம் வெகுமக்களின் திரைப்பட விருப்பத்தை அடிப்படையிலான நிகழ்ச்சிகள் சிறிதளவு இருந்தாலும், இன்னொரு பக்கத்தில் பாரம்பரியக் கலைகளையும், கிராமியக் கலைகளையும் ஒருங்கிணைப்பாளர்கள் துணிச்சலுடன் ஏற்பாடு செய்து வந்திருக்கின்றனர்.
  • அந்த அடிப்படையில் கடந்த பல ஆண்டுகளாக பேரவை இதைச் செய்து வந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழு, கே. ஏ. குணசேகரன் குழு, புஷ்பவனம் குப்புசாமி குழு, “நிஜ நாடக இயக்கம்” புகழ் மு. இராமசாமி குழுவினரின் "நந்தன் கதை", புதுச்சேரி ஆறுமுகம் குழுவினரின் “மதுரைவீரன் தெருக்கூத்து”, திண்டுக்கல் சக்தி தப்பாட்டக் குழு போன்ற தமிழர்களின் பாரம்பரிய கலைக் குழுக்களைத் தொடர்ந்து அழைத்து வந்து மாபெரும் வரவேற்புடன் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறது.
  • அது மட்டுமல்லாமல் விளிம்புநிலை மட்டும் ஒடுக்கப் பட்ட இனத்தவர்களின் சிக்கல்களைச் சித்தரிக்கும் கலைஞர்களை அமெரிக்க மண்ணுக்கு அழைத்து அவர்களை கௌரவித்து அனைத்துத்தரப்பு தமிழர்களும் நம் பண்டைய சமூகச் சீர்கேடுகளைக் களைந்து ஒன்றுபட்டு முன்னேற வேண்டும் என்று செயலில் காட்டி வருகிறது பேரவை. எடுத்துக்காட்டாக முன்பு அழைக்கப் பட்ட திருநங்கை நர்த்தகி நடராஜன், தலித்து எழுத்தாளர் சிவகாமி, நாட்டுப்புற இசைக்கலைஞர் மற்றும் ஆராய்ச்சியாளர் கே.ஏ.குணசேகரன், திண்டுக்கல் சக்தி தலித்து மகளிர்குழு போன்ற சிறப்பு விருந்தினர்களைக் கூறிப்பிடலாம். அமெரிக்க மண்ணில் உள்ள வேறு எந்த இந்திய இன அமைப்பும் செய்யாத சாதனையாகவும் இதைக் கூறலாம்.
  • நல்ல இலக்கியவாதிகளையும் எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், தமிழ் ஆராய்ச்சியாளர்களையும் அழைத்து கௌரவித்துள்ளது பேரவை. ஜெயகாந்தன், பிரபஞ்சன், சிவகாமி, சுஜாதா, சிவசங்கரி, கவிஞர்கள் அறிவுமதி, இன்குலாப், வைரமுத்து, மு.மேத்தா, அப்துல் இரகுமான், சிற்பி பாலசுப்பிரமணியம், தமிழன்பன், சேரன், கனிமொழி, ஜெயபாஸ்கரன், தாமரை, நா.முத்துக்குமார், தமிழாராய்ச்சியாளர்கள் கா. சிவத்தம்பி, பழனியப்பன், தமிழறிஞர்கள் தமிழண்ணல், சிலம்பொலி செல்லப்பன், மதிவாணன், ஓவியர் புகழேந்தி, அருள்மொழி, திரைப்பட இயக்குநர்கள் பாரதிராசா, சீமான், தங்கர் பச்சான், சொற்பொழிவாளர்கள் வைக்கோ, தியாகு, பர்வீன் சுல்தானா என எத்தனையோ பெயர்களைக் குறிப்பிடலாம்.
  • பேரவை இலங்கையில் ஐம்பது ஆண்டுகளாக தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக போராடி வரும் ஈழத்தமிழர்களின் துயரத்தில் பங்கு கொண்டு வந்திருக்கிறது பேரவை. ஈழத்துத் தலைவர்களையும், நாடாளுமன்றப் பிரதிநிதிகளையும், எழுத்தாளர்களையும், மலையகத்தமிழர்களின் பிரதிநிதிகளையும் வரவழைத்து அவர்களது குரலைத் தொடர்ந்து ஒலிக்கச் செய்திருக்கிறது. ஜனநாயக முறையில் அளித்து வரும் இந்த ஆதரவை வேண்டுமென்றே திரித்து பேரவை அமைப்பையே களங்கப்படுத்துவோரும் உண்டு. இருப்பினும் ஈழத்தமிழரின் உரிமைகளுக்காக எழுப்பப்படும் ஒவ்வொரு ஆதரவுக் குரலின் போதும் மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவரும் கைதட்டியும், எழுந்து நின்று மரியாதை செலுத்தியும் தங்கள் ஒருமனதான வரவேற்பைத் தெரிவித்து வந்துள்ளனர்.
  • அமெரிக்க பல்கலைக்கழகங்களில் தமிழாராய்ச்சி செய்த/செய்யும் பேராசிரியர் இராமனுஜம், ஜார்ஜ் ஹார்ட், நார்மன் கட்லர், ஜேம்ஸ் லிண்ட்ஹோம் என பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியிருக்கின்றனர். அமெரிக்க மண்ணில் பிறந்து வளர்ந்த தமிழ் இளைஞர்கள் பலர் இம்முயற்சிகளுக்கு உதவியுள்ளனர்.
  • மாட்சிமை விருது என்ற பெயரில் ஆண்டுதோறும் தமிழுக்கும், தமிழ்ச் சமூகத்துக்கும் பெரிதளவில் தொண்டு ஆற்றியவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது பேரவை. இவ்விருதினைப் பெற்றவர்களுள் முனைவர்கள் ஏ.கே.இராமானுஜம், வ.ஐ.சுப்பிரமணியம், மணவை முஸ்தபா, கா.சிவத்தம்பி, தமிழிசை ஆராய்ச்சியாளர்கள், வீ. பா. க. சுந்தரம், ந. மம்மது போன்றவர்கள் மிக முக்கியமானவர்கள்.
  • அமெரிக்க மண்ணில் நிரந்தரமாகத் தமிழாராய்ச்சியில் ஈடுபடுவதற்காக பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பீடம் ஏற்படுத்த பணம் திரட்டி உதவியது.
  • 2005ல் முதல்முறையாக அமெரிக்க மண்ணில் பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டை நடத்தியது. மேரிலாந்து மாநிலம் கொலம்பியாவில் நடந்த இந்த மாநாட்டில், திருக்குறளில் ஆராய்ச்சி செய்து வரும் அறிஞர்கள் பலர் கலந்து கொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வழங்கினர். இக்கட்டுரைகள் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தினரால் நடத்தப்படும் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டன.
  • 2003ல் முதல்முறையாக அமெரிக்க மண்ணில் தமிழ் மொழி கற்பிக்கும் கோடைகால முகாம் நடத்தப் பட்டது. மேரிலாந்து மாநிலம் கொலம்பியாவில் நடந்த இம்முகாமில் அமெரிக்கா, கனடா நாடுகளிலிருந்து மொத்தம் 22 மாணவர்கள் கலந்து கொண்டு தமிழ் கற்றனர். இதைத் தொடர்ந்து மேலும் இரண்டு முகாம்கள் வெவ்வேறு நகரங்களில் நடத்தப் பட்டுள்ளன.
  • அமெரிக்கத் தமிழ் இளைஞர் அமைப்பான NTYO இங்கு பிறந்து வளர்ந்த தமிழ்ப் பிள்ளைகளால் ஆரம்பிக்கப் பட்டது. இவர்களும் பேரவை மாநாட்டில் தனியே தங்களுக்கென்று சில நல்ல நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்கின்றனர். இவை பெரும்பாலும் ஆங்கிலமும் தமிழும் கலந்து நடத்தப் பட்டாலும், தமிழ்ப் பண்பாட்டுக்குத் தொடர்பான நிகழ்ச்சிகளே.
  • 2006ல் இரண்டு இந்து மதவாத அமைப்புகள் கலிபோர்னியா மாநில பள்ளிக்கூட வரலாற்றுப் பாட நூல்களில் இந்திய வரலாற்றை திரித்து தவறான முறையில் திணிக்க முனைந்தது. பேரவை சில அமெரிக்க வரலாற்றுப் பேராசிரியர்களுடனும் மற்ற மதசார்பற்ற இந்திய அமைப்புகளுடனும் சேர்ந்து போராடி அந்த வரலாற்றுத் திரிப்பை முறியடித்தது.
  • கணினித் தமிழின் வளர்ச்சிக்கு பேரவை அமைப்பு ரீதியாக தன்னால் இயன்ற ஆதரவை அளித்து வருகிறது. தமிழ் யுனிகோடு வரிசையில் உள்ள சிக்கல்களை சரிசெய்ய உலக யுனிகோடு நிறுவனத்துக்குப் பரிந்துரைக்க தமிழக அரசு தொழில்நுட்ப வல்லுனர்கள் அடங்கிய ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளது. பேரவை நிர்வாகக் குழுவும் தமிழக அரசின் பரிந்துரைகளை ஆதரித்து உலக யுனிகோடு நிறுவனத்துக்கு தன் கருத்துக்களை அனுப்பியுள்ளது.
  • ஆழிப்பேரலைகள் (சுனாமி) ஏற்படுத்திய மிகப் பெரும் சேதத்தின் போது தமிழ் நாட்டுக்கும், தமிழ் ஈழத்துக்கும் பொருளுதவியும், பண உதவியும் அளித்தது பேரவை. அதுமட்டுமல்லாமல் கும்பகோணத்தில் நடந்த பள்ளி தீ விபத்தின் போது உடனடியாக நிதி திரட்டி வழங்கியது. கட்ரீனா புயல் தாக்கிய அமெரிக்க நகரமான நியூஆர்லியன்ஸுக்கும் பேரவை உதவிகளை அனுப்பியது. ஆண்டு தோறும் பொங்கல் அன்று சிகாகோ நகரில் முதியோர் மற்றும் அனாதை இல்லங்களில் உணவு வழங்கி வருகிறது. இது போல் எண்ணற்ற சேவைகளில் பேரவைவும், அதன் அங்கங்களான பல தமிழ்ச் சங்கங்களும் செய்து வருகின்றன.
  • இதுதவிர கடந்த பல ஆண்டுகளாக திருமணத்துக்கான இளைஞர்கள் சந்திப்பையும் ஏற்படுத்தி வருகின்றனர். இவை சாதியை மறுத்த திருமணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நாட்டுப்பண் உயிர்த்த இடத்தில் திருவிழா!!


அமெரிக்க நாட்டுப்பண் உயிர்த்த இடத்தில் திருவிழா

இலக்கியவாதி கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன்
தமிழறிஞர் மறைமலை இலக்குவனார்
எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன்
எழுபது கவனகர் முனைவர் கலை.செழியன்
வாழும் கலைப்பயிற்சி இரவிசங்கர் அவர்கள்
பாடகி K.S.சித்ரா அவர்களின் மெல்லிசை நிகழ்ச்சி
ஐங்கரன் இசைக்குழு
பலகுரல் மன்னன் முகேசு
வித்யா, வந்தனா சகோதரிகளின் பண்ணிசை
பகடிக் கலைஞன் மதுரை முத்து
பல்சுவைக் கலைஞர் சிவகார்த்திகேயன்
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி
வீரத்தாய் வேலுநாச்சியார் நாட்டிய நாடகம்
தமிழன் - தமிழச்சி, நாடளாவிய வாகைசூடிக்கான போட்டி
முனைவர் மு.வ அவர்களின் நூற்றாண்டுச் சிறப்புரை
மு.வ அவர்களின் வழிகாட்டுதலில் அமெரிக்கத் தமிழர்
தமிழ் இலக்கியக் கூட்டம்
வலைஞர் கூடல்
தொடர் மருத்துவக் கல்வி
இலக்கிய விநாடி வினா
தொழில் முனைவோர் கூட்டம்
யோகாசனப் பாசறை
தமிழ்த்தேனீ
மாபெரும் தமிழிசை நிகழ்ச்சி
பல்கலைக்கழக முன்னாள் மாணவர் கூட்டங்கள்
பாட்டரங்கம்
பட்டி மண்டபம்
உரைவீச்சு
வெள்ளி விழா மலர் வெளியீடு
பேரவை இதழான அருவி ஆசிரியர் குழுவின் சொல்வீச்சு
தமிழ்ச்சங்கங்களின் கலை நிகழ்ச்சிகள்
இன்னும் பல நிகழ்ச்சிகள்


Register early before it gets full. It happened in FeTNA 2009! Register Now!!

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை


பெட்னா என்பது வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (Federation of Tamil Sangams of North America, FeTNA). இந்த அமைப்பு கடந்த சுமார் இருபது ஆண்டுகளாக, வட அமெரிக்காவிலிருக்கும் தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து, ஆண்டுதோறும் ஒரு பெரும் தமிழர் திருவிழாவினை நடத்தி வருகின்றது. இதன்போது தமிழகம் உள்ளிட்ட உலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழறிஞர்களும், கலைஞர்களும் வருகை தந்து நம் கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தளிப்பர். அமெரிக்கா மற்றும் கனடா நாட்டுத் தமிழ்ச் சங்கக் கலைஞர்களுக்கும் தம் திறமையை வெளிக்கொணர இதுவொரு நல்ல வாய்ப்பு. 

இந்த ஆண்டு ஜூலை மாதம் 6 முதல் 8 ஆம் நாள் வரை இத் திருவிழா வாசிங்டன் அருகே பால்டிமோர் மாநகரில் நடக்கவுள்ளது. இதனைக் குறித்த மேல் விபரங்கள் இந்த வலைப்பதிவில் வெளியிடப்படும். அத்துடன் பேரவை அமெரிக்க மண்ணில் செய்துவரும் சாதனைகளையும் பட்டியலிட்டுச் சொல்லும் ஒரு வாய்ப்பாக இதைப் பயன்படுத்தவிருக்கிறோம் 

உங்கள் அனைவரையும் விரைவில் பால்டிமோரில் சந்திக்கக் காத்திருக்கிறோம்!