Wednesday, June 25, 2008

பேரவைத் திருவிழாவில் கலைமாமணி நர்த்தகி நடராஜ்


தமிழர்களின் பழம்பெரும் நாட்டிய முறையாகிய சதிர் (பரத நாட்டியம்) நமது விழாக்கள் அனைத்துக்கும் அழகு சேர்ப்பவை. வட அமெரிக்காவில் இருக்கும் தமிழ்ச் சங்கங்களின் கலை நிகழ்ச்சிகளில் சதிராட்டம் இல்லாத ஒரு நிகழ்வைக் காண்பது அரிது எனும் அளவுக்கு இங்கிருக்கும் மக்களிடையே இந்நடனம் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. வளர்ந்து வரும் தலைமுறையினர் இந்நடனத்தை வாழ்வின் பல்வேறு உணர்வுகளையும் எடுத்துக் காட்டுவதற்குப் பயன்படுத்துவது போற்றத் தக்கது. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் நிகழ்வுகளில் கலையம்சத்துடன், இலக்கியமும், சமூக நோக்கும் சேர்ந்து அழகு செய்யும் சதிராட்ட நிகழ்வுகளைச் செறிவாக இரசிக்கலாம்.

இவ்வகையில் இவ்வாண்டின் திருவிழாவில் பல்வேறு நடன நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிடத் தகுந்தது தமிழகத்திலிருந்து வருகை தரவிருக்கும் கலைமாமணி நர்த்தகி நடராஜ் அவர்களின் "சிலம்பும் தமிழும்" நாட்டிய நிகழ்ச்சி. இந்திய அரசின் வெளியுறவுத் துறையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர் எனவும், தமிழ்நாட்டு அரசினால் கலைமாமணி எனவும், திருமுறை நாட்டியச் சுடர், நற்றமிழ் நடனமணி எனவும் புகழ் பெற்றிருக்கும் நர்த்தகி அவர்கள் மூன்றாவது முறையாகப் பேரவையின் நிகழ்வுக்காக வருகை தருவது குறிப்பிடத் தக்கது. மேலும் இவர் வாய்ப்பு கிடைக்கும்போது அமெரிக்காவில் தங்கி, பல இடங்களில் நாட்டியப் பயிற்சிகளையும் அளித்து வருகிறார்.

தஞ்சையில் 17ஆம் நூற்றாண்டிலிருந்து புகழ் பெற்று விளங்கும் "தஞ்சை நால்வர்" வழியில் வந்த பெருமகனார் கே.பி. கிட்டப்பா பிள்ளை அவர்களிடம் சீடராகச் சேர்ந்து, சுமார் 15 வருடங்கள் அவரிடமிருந்து நடன நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார். மாநில மற்றும் நடுவணரசிடமிருந்து பல விருதுகளைப் பெற்றிருக்கும் நர்த்தகி அவர்கள் தன்னம்பிக்கைக்கும், தளரா உழைப்புக்கும் பெண்டிர், திருநங்கையர், ஆடவர் ஆகிய எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டு. திருநங்கை நர்த்தகி நடராஜ் அவர்களது வலைத் தளத்தினைக் காண இங்கே சொடுக்கவும்.

இவரது ஆடல், ஓர்லாண்டோவின் புகழ்பெற்ற பாப் கார் அரங்கின் அழகில் நிகழவிருக்கிறது. வந்து கண்டு களியுங்கள்! விபரங்களுக்கு பேரவையின் இணையத் தளத்தைப் பார்க்கவும்.

Monday, June 23, 2008

ஆவலைத் தூண்டும் பெட்னா நிகழ்வுகள்

அமெரிக்க, கனேடியத் தமிழர்களில் எண்ணற்றோர் ஒவ்வொரு ஆண்டும் கலந்துகொள்ள எதிர்நோக்கும் ஒரு விழா பேரவையின் தமிழ்த் திருவிழா. சென்ற ஆண்டுகளில் விழாவினைக் காண வாய்ப்பில்லாதவர்கள் இதோ, சென்ற ஆண்டு வட கரோலைனா ராலே நகரில் நிகழ்ந்த பேரவை நிகழ்ச்சிகளின் சில கீற்றுகளை இங்கே கண்டு களியுங்கள்!
http://www.youtube.com/watch?v=Y5H-Lw8jNc8
http://www.youtube.com/watch?v=tlKYYkHcmi4
http://www.youtube.com/watch?v=dSyrpYSSFhU
http://www.youtube.com/watch?v=0oDZmcdXfFk

இந்த ஆண்டு ஜூலை 4-6ல் ஓர்லாண்டோ நகரில் நடக்க இருக்கும் விழாவினைப் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

Saturday, June 21, 2008

அனுபவம் புதுமை!

இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள்! இனிய மெல்லிய இசை, மனதைக் கவரும் குரல்கள், எல்லாவற்றையும் இணைக்கும் ஒத்திசைவு! இந்த ஐங்கரன் & அனிதா குழு பெட்னா திருவிழாவில் உங்களை இசை மழையில் நனைய வைக்கப் போகிறது!

பெட்னா திருவிழாவில் இன்னும் நிறைய புதுமையான அனுபவங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. அந்நிகழ்ச்சிகளின் விவரங்களை http://www.fetna.org/ என்ற இணையத் தளத்தில் நீங்கள் காணலாம்.

Friday, June 20, 2008

பெட்னா திருவிழாவுக்கு மேதகு அப்துல் கலாம் வாழ்த்து!

ஓர்லாண்டோவில் நடக்க இருக்கும் பெட்னா திருவிழாவினை வாழ்த்தி, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் அனுப்பியிருக்கும் வாழ்த்துச் செய்தி. ஜூலை 4, 5, 6 ஆகிய நாட்களில், புளோரிடாவில் நடக்க இருக்கும் இந்தத் தமிழர் விழாவினைப் பற்றிய விபரங்களை http://www.fetna.org/ என்ற வலைப்பக்கத்தில் நீங்கள் காணலாம்.

வாழ்த்து மடல்
- Dr. A.P.J. அப்துல் கலாம்


வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 21 வது தமிழ் விழா கொண்டாடும் இச்சமயத்தில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 21வது தமிழ் விழா கொண்டாடுவது என்றால் என்ன? வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கம், 20 முறை சூரியனைச் சுற்றிவிட்டு, 21வது வட்டத்தில் நீங்கள் அடி எடுத்து வைத்திருக்கிறீர்கள் என்று பொருள். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற வரிகளுக்கு இணங்க வட அமெரிக்காவிற்கு வந்து உங்கள் திறமையால், அறிவால் உழைத்து நம் நாட்டிற்குப் பெருமை சேர்த்த உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். உங்களுக்கு என் வேண்டுகோள்ள் ஒன்றே ஒன்றுதான். நீங்கள் எந்த நாட்டில் இருக்கின்றீர்களோ, அந்த நாட்டிற்கு உங்களது 100 சதவீத உழைப்பைத் தாருங்கள். தமிழனாகக் கூடி இந்தியனாகப் பரிணமித்து அறிவார்ந்த விழிப்புணர்ச்சி பெற்ற உலகக் குடிமகனாக நீங்கள் மாறி இருக்கிறீர்கள். ஏனென்றால் இந்தியாவுடனான உங்களது தொப்புள் கொடி உறவு மிகப் பெரிய ஆன்ம பலம் பொருந்தியது. 54 கோடி இந்திய இளைஞர்களுக்கு நல் வழிப்பாதையைக் காட்டி, அவர்களது கற்பனைத் திறனை வளர்த்து, என்னால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்க்கும் பணியில் உங்களது அறிவைத் தாருங்கள். உங்களது அனுபவத்தைத் தாருங்கள். வாருங்கள், உங்கள் வருங்கால சந்ததி வளர்ந்த இந்தியாவில் அடி எடுத்து வைக்க வளமான இந்தியாவை 2020 க்குள் உருவாக்குவோம்!

Dr. A.P.J. அப்துல் கலாம்
முன்னாள் குடியரசுத் தலைவர்