Thursday, May 31, 2007

பெட்னாவில் பிள்ளைத் தமிழுக்குப் பரிசு!

இவ்வாண்டு பெட்னா திருவிழாவில் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன. அவற்றுள் கீழ்க்கண்ட வினா-விடை, தமிழ்த் தேனீ போட்டிகளும் அடங்கும். உங்கள் பிள்ளைகளும் (அல்லது நீங்களும்) கீழே குறிப்பிடப்பட்ட வயது வரம்பின்படி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம், பரிசைத் தட்டிச் செல்லலாம்! வினா-விடைக்கான கேள்விகள் கீழ்க்கண்டவற்றிலிருந்துதான் கேட்கப்படும். கலந்துகொள்ள வாருங்கள் என அன்புடன் அழைக்கிறோம்! கேள்விகளுக்கு எம்மை fetna.malar@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளலாம். நன்றி!









உங்க எழுத்து பெட்னா மலரில் வரணுமா?


வலைப்பதிவர்களுக்கு வணக்கம்!
ஒவ்வொரு ஆண்டுவிழாவின்போதும் பெட்னா ஒரு மலரை வெளியிடுகிறது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து புகழ்பெற்ற எழுத்தாளர்களும், அக, அயலக நண்பர்களும் எழுதுவது வழக்கம். இவ்வாண்டு முதன்முறையாக வலைப்பதிவர்களாகிய உங்களது படைப்புக்களையும் மலரில் இணைக்க விரும்புகிறோம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது அதிகமில்லை. கீழ்க்கண்ட மையக் கருத்தினை ஒட்டிய உங்கள் படைப்புகளை எங்களுக்கு அனுப்பி வைக்கவும், அவ்வளவுதான்!

திருவிழாவின் மையக்கருத்து: தமிழால் இணைவோம்! தமிழராய் வெல்வோம்!

படைப்புகளுக்கான உத்தேசமான கருப்பொருட்கள்:
தமிழ் மொழி, சமூகம், பண்பாடு, இன மேம்பாடு மற்றும் அதற்கான திட்டங்கள், பன்னாட்டுத் தமிழர்களின் வாழ்க்கை முறை, மொழிப்பற்று, பேச்சு வழக்கு, பழந்தமிழ்க் கலைகள், அக்கலைகளில் பயிற்சி மற்றும் அதற்கான வளர்ச்சித் திட்டங்கள், கலைச் சின்னங்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு, இளைய தலைமுறையினரின் மொழி இன ஈடுபாடு மற்றும் அதற்கான திட்டங்கள், இன்றைய கணினி அறிவியல் உலகில் தமிழ் மொழியின் நிலை மற்றும் அதற்கான வளர்ச்சித் திட்டங்கள் முதலானவை.

படைப்புகளின் வடிவம்: கதை, கட்டுரை, கவிதை (நிறைய கவிதைகள் வருவதனால் எல்லாவற்றையும் சேர்த்துக்கொள்ள இயலாது!)உரையாடல், நேர்காணல், துணுக்கு ஆகியன. தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு இவற்றை வெளிப்படுத்தும் சீர்மிகு ஓவியங்களும் மற்றும் புதிர்கள், விளையாட்டுக்கள் போன்றவையும் வரவேற்கப்படுகின்றன.

பக்க அளவு: A-4 தாளில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல்

கடைசி நாள்:
தயவு செய்து ஜூன் 6 ஆம் தேதிக்குள் எங்களுக்கு அனுப்பவும்!

அனுப்ப வேண்டிய முகவரி:
fetna.malar@gmail.com

உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் இங்கே பின்னூட்டத்தில் கேட்கலாம் அல்லது மின்னஞ்சலிலும் கேட்கலாம்.

விரைந்து உங்களது படைப்புகளை எங்களுக்கு அனுப்புங்கள்! நன்றி!

Tuesday, May 29, 2007

பெட்னா திருவிழாவில் நீங்கள் எப்படிப் பங்குபெறலாம்?

பெட்னா திருவிழாவில் நீங்கள் பலவிதமான வழிகளில் ஈடுபடலாம். உதாரணத்துக்குச் சிலவற்றைக் கீழே தருகிறோம்:

1. விருந்தினராக வந்து கலந்துகொண்டு, நல்ல உணவு, உறையுள் வசதியுடன், அனைத்துக் கலைகளையும் கண்டு களிக்கலாம். இதற்கான அனைத்துச் சிறப்பு ஏற்பாடுகளும் ராலேயில் செய்யப் பட்டுள்ளன.

2. நீங்கள் தொழில் புரிபவராக இருந்தால் உங்கள் நிறுவனத்தினைப் பற்றி விழாவில் விளம்பரம் செய்யலாம். ஏதேனும் ஒரு நிகழ்ச்சியை வழங்குபவராகவோ, அல்லது பொதுவான கொடையாளராகவோ நீங்கள் இருக்கலாம். உங்களது நிறுவனத்தின் விளம்பரத்தைக் குறைந்த கட்டணத்தில் அதிகமான தமிழர்களைச் சென்றடையுமாறு, "விழா மலரில்" வெளியிடலாம்.

3. நீங்கள் கட்டுரை, கவிதை, நாடகம், பத்தி (column) என்று எழுதித் தள்ளும் திறமை கொண்டவராக இருந்தால், உங்கள் எழுத்துத் திறனை விழா மலரில் காட்டலாம். அதற்கு ஜூன் 6க்குள் உங்கள் படைப்புக்களை அனுப்ப வேண்டும்.

4. கலைத்திறன் மிக்கவரா நீங்கள்? ஆமென்றால் உடனடியாக உங்கள் பகுதி தமிழ்ச்சங்கத்தோடு அல்லது எங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் ஆற்றலை மேடையேற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டு விழா ஒரு நல்ல இடம்.

5. "பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை" என்பது வள்ளுவரின் வாக்கு. அதே போல், பொருளில்லாமல் எந்த விழாவும் நடப்பதில்லை. இந்தத் தமிழ்விழா பொலிவுற உங்கள் வள்ளண்மையைக் காட்ட ஒரு வாய்ப்பும் இருக்கிறது. நீங்கள் வள்ளல், அல்லது கொடைவள்ளல் போன்ற தகுதியுடன் விழாவில் முக்கிய உறுப்பினராகக் கலந்துகொள்ளலாம். இதன் மூலம் குடும்பத்துக்கான முன்னிருக்கை நுழைவுச் சீட்டுகள், கலைஞர்களுடன் விருந்து போன்ற சிறப்புகளைப் பெறலாம்.

உங்களை வரவேற்கக் காத்திருக்கிறோம்!
விபரங்களுக்கு: www.fetna.org

Monday, May 28, 2007

திருவிழா ஏன்?

ஒவ்வொரு மனிதருக்கும் மிகவும் முக்கியமாகக் கருதப்படுவது தாய்மொழி. உலகிலுள்ள சுமார் ஆறாயிரம் மொழிகளுள் தொன்மையான மொழிகளுள் ஒன்றாகக் கருதப்படுவது நம் தமிழ் மொழி. ஐ.நா . சபையின் மொழி ஆராய்ச்சியின்படி, பெரும்பாலான மொழிகள் வேகமாக அழிவடைந்து வருகின்றன. ஆகவே ஐ.நா, ஒவ்வொரு தாய்மொழிக் குழுவையும், தங்கள் தாய்மொழியைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியதை வலியுறுத்துகிறது.

இன்னொரு புறம் அண்மைய அறிவியல் ஆய்வுகள் மொழியைப் பற்றி ஒரு முக்கியமான செய்தியை நமக்குச் சொல்கின்றன. நமக்குத் தெரியும், அல்சைமர் நோய் (Alzheimer's disease) நமது மூளையைத் திறனிழக்கச் செய்யும் ஒரு நோய் என்பதும், அது பலரையும் தாக்கக் கூடியது என்றும். இவ்வியாதியை ஆராய்ந்த அறிஞர்கள் சொல்வது என்னவென்றால், ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைச் சரளமாகப் பேசக் கூடியவர்களுக்கு அல்சைமர் நோய் வருவதில்லை! ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் உண்மைதான் இது. மேலும் நாம் மருத்துவர்களிடம் நம் பிள்ளைகளைக் காட்டச் செல்லும்போது அவர்கள் மொழியைப் பற்றிச் சொல்லும் முக்கியமான அறிவுரை, "உங்கள் தாய்மொழியிலேயே வீட்டில் பேசுங்கள், உங்கள் பிள்ளைக்கு உங்கள் மொழியைக் கற்றுக் கொடுங்கள்" என்பது. சீன, பிரெஞ்சு, ஜப்பானிய, ஹிஸ்பானிய மக்களைப் பார்த்தால் அவர்கள் தம் தாய்மொழியின் மீது அளவற்ற பற்றுள்ளவர்களாகவும், அதனைப் பேசுவதிலும் கற்றுக் கொள்வதிலும் பெருமை கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். நமக்கும் அந்த மாதிரி பெருமைப்பட்டுக் கற்றுக் கொள்ளும் பக்குவம் வர வேண்டும். அதற்குப் பெற்றோர்கள் உழைக்க வேண்டும்.

பெற்றோர்களுக்குத் தமிழுணர்வு மேம்படுவதற்கு இன்றைய இணைய உலகில் எவ்வளவோ உதவிகள் கிடைக்கின்றன. பலரோடு கருத்தாடல்களை மேம்படுத்திக் கொள்வதும், கலைகளைக் கண்ணுறுவதும், பிள்ளைகளுக்குக் காட்டுவதும் நமது கற்றலையும், பிள்ளைகளது கற்றலையும் மேம்படுத்தும். நாம் அனுபவித்திராத தமிழ் உலகின் கதவுகளை அவர்கள் என்றேனும் திறக்கக் கூடும். இவற்றுக்கு ஒரு வாய்ப்பாக அமைவதுதான் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு விழா. கடந்த சில ஆண்டுகளாக, பங்குபெறும் குழந்தைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருவது நமக்குப் பெரும் நம்பிக்கையை ஊட்டுகிறது. வரும் காலங்களில் குழந்தைகளும் பெரியோர்களும் நன்கு கலந்துறவாடி, தமிழையும், நம் தமிழறிவையும் தொடர்ந்து வளரச் செய்ய வேண்டுவதே இவ்விழாக்களின் நோக்கம்.

இவ்வாண்டின் ஃபெட்னா திருவிழாவைக் குறித்த விபரங்களுக்கு: www.fetna.org

Friday, May 25, 2007

பெட்னாவில் விளம்பரம் செய்யுங்கள்!


வணிகம் புரியும் தமிழரா நீங்கள்? வட அமெரிக்கத் தமிழர்களிடையே உங்களது வணிகத்தை அறிமுகப்படுத்தவும், மேம்படுத்தவும் பெட்னா திருவிழாவும், பெட்னாவின் மலரும் நல்ல வாய்ப்புக்கள். ஆயிரக்கணக்கான தமிழர்கள்
திரளும் இடத்தில் உங்கள் வணிகம் புலப்பட வேண்டுமா? எங்களைத் தொடர்புகொள்ளுங்கள். தொடர்புகளுக்கு இங்கே சொடுக்கவும்!

விளம்பரதாரர்களுக்கு தமிழ் நெஞ்சங்களின் அன்பான நன்றிகள்!

முன் பதிவுக்குச் சிறப்புத் தள்ளுபடி!

ஜூலை 4ம் தேதியை ஒட்டிய வாரக் கடைசியானது அமெரிக்க விடுதலை நாளையொட்டி நீண்ட விடுமுறையாக இருக்கும். இதன்போதே ஃபெட்னா திருவிழா ஏற்பாடாகிறது. இவ்வாண்டு கொண்டாட்டத்தைப் பற்றிச் சில குறிப்புகள்:

எங்கே: Progress Energy Center for the Performing Arts, Raleigh, North Carolina

எப்போது: ஜூலை 7, 8 மற்றும் 9, 2007.

முக்கியமான விருந்தினர்கள்:
நீங்கள், பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், இயக்குனர் சேரன், இறையன்பு, இ.ஆ.ப, திண்டுக்கல் லியோனி, இசையமைப்பாளர் பரத்வாஜ், முனைவர் இளங்குமரனார், முனைவர் மருதநாயகம், நித்யஸ்ரீ மகாதேவன் இன்னும் பலர்.

முக்கியமான நிகழ்ச்சிகள்: சிறப்புக் கவியரங்கம், பட்டிமன்றம், இசையரங்கம், லக்ஷ்மண் சுருதியின் இன்னிசை மழை, இலக்கியக் கருத்தரங்கம், பாப் ஷாலினியின் திரையிசைக் கொண்டாட்டம், தமிழ்ச் சங்கங்களின் நிகழ்ச்சிகள், இன்னும் பல.

உடனே பதிவு செய்துகொள்ளுங்கள். முன்னதாகச் செய்யப்படும் பதிவுகளுக்கும், குழுப் பதிவுகளுக்கும் சிறப்புத் தள்ளுபடி உண்டு. அரிய வாய்ப்பு, விரைந்து வாருங்கள். தமிழின் செம்மையையும், தமிழரின் செழுமையையும் கொண்டாட இணையுங்கள்!

விபரங்களுக்கு: ஃபெட்னாவின் இணையத் தளம்.


Thursday, May 24, 2007

பெட்னா திருவிழாவைப் பற்றி

பெட்னா என்பது வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (Federation of Tamil Sangams of North America, FeTNA). இந்த அமைப்பு கடந்த சுமார் இருபது ஆண்டுகளாக, வட அமெரிக்காவிலிருக்கும் தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து, ஆண்டுதோறும் ஒரு பெரும் தமிழர் திருவிழாவினை நடத்தி வருகின்றது. இதன்போது தமிழகம் உள்ளிட்ட உலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழறிஞர்களும், கலைஞர்களும் வருகை தந்து நம் கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தளிப்பர். அமெரிக்கா மற்றும் கனடா நாட்டுத் தமிழ்ச் சங்கக் கலைஞர்களுக்கும் தம் திறமையை வெளிக்கொணர இதுவொரு நல்ல வாய்ப்பு.

இந்த ஆண்டு ஜூலை மாதம் 7 முதல் 9ஆம் தேதி வரை இத் திருவிழா வட கரோலைனாவின் ராலே மாநகரில் நடக்கவுள்ளது. இதனைக் குறித்த மேல் விபரங்கள் இந்த வலைப்பதிவில் வெளியிடப்படும். உங்கள் அனைவரையும் ராலேயில் சந்திக்கக் காத்திருக்கிறோம்!