Thursday, March 31, 2011

பேரவை விழா 2011 சிறப்பு விருந்தினர்கள் - நடிகர் நாசர்

நாசர், செங்கற்பட்டுக்கருகில் ஒரு கிராமத்தில் நகை மெருகூட்டும் தொழிலாளரின் மூத்த மகனாகப் பிறந்தவர். இளமையிலிருந்தே நடிப்பில் ஆர்வம் செலுத்தத் தூண்டியது தந்தையின் உந்துதல். மருத்துவராக்க வேண்டுமென்பது தந்தையின் விருப்பம். ஆனால் பி.யு.சியில் தோல்வி. குடும்பச் சூழல் ஏதேனும் ஒரு வேலையில் சேரத் தூண்ட விமானப்படையில் சேர்ந்தார். அது தந்தைக்குப் பிடிக்கவில்லை. நடிக்கப் பயில் என்ற தந்தை, நாசர் நடிப்புக் கல்லூரியில் சேர்வதற்குப் பெரும் கஷ்டத்துடன் உதவினார். நாசர் நடிப்பை ஒரு பாடமாகப் படிக்கத் தொடங்குகிறார். ஓராண்டின் பின் அந்தக் கல்லூரி மூடப்பட, வருமானத்துக்காக தாஜ் கோரமண்டல் விடுதியில் சிப்பந்தியாகிறார். அங்கிருந்த மூன்றாண்டுகளில் இடையிடையே நாடகக் குழுக்களோடு பரிச்சயமும், சில மேடை நாடகங்களையும், சில சிறு பாத்திரங்களையும் ஏற்று திரையிலும், தொலைக்காட்சியிலும் நடிக்கிறார். நடிப்பின் மேலிருந்த தீவிர ஈடுபாட்டால் வேலையை விட்டுவிட்டுத் தமிழக அரசுத் திரைப்படக் கல்லூரியில் சேர்கிறார். வகுப்பறை கற்றுத் தந்ததை விட அதிகமாக நண்பர் குழாத்துடன் சேர்ந்து வீதிகளையும், வெளியையும் மேடைகளாக்கி அவற்றிலேயே நடிக்கப் பழகுகிறார்கள் நண்பர்கள். நாடகத்துக்கும், திரைக்குமிடையே இருக்கும் இடைவெளி தமிழ்த் திரையுலகில் அதிகம். இந்த இடைவெளியை முதலில் அறிதல் கடினம், நோய்நாடி என்பது போல். அந்த இடைவெளியை நிரப்புதல் நோயைக் குணமாக்கல் போலத்தான். நாடக உலகில் பேரவாக் கொண்டிருந்த நாசருக்குத் வெள்ளித்திரையோடு இயங்குவதையே ஒரு கலையாகப் பயிலவேண்டியிருந்தது. வாய்ப்புக்களைத் தேடி இயக்குனர்களின் வீட்டுவாசல்களில் தவமிருந்தார் சில காலம். பிறகு வாய்ப்பு நம்மைத் தேடித்தான் வரவேண்டும் என்ற படிப்பினையை ஒரு உறவினர் கொடுக்க, வாய்ப்புக்குத் தகுதியுள்ளவராய் மேலும் ஆக்கிக் கொள்ளும் உரையாடல்களிலும் குழுச் செயற்பாடுகளிலும் ஈடுபடுகிறார். கல்யாண அகதிகள் என்ற படத்தில் வாய்ப்பு கிடைக்கிறது. அதன் பிறகு நாயகன் ஒரு திருப்புமுனை. இதற்கிடையில் பல வெற்றி தோல்விகளைப் படங்களின் வாயிலாகச் சந்திக்கிறார். அதிர்ஷ்டம் என்பதை விட தான் கற்ற கல்வியே தன் வாழ்வை வடிவமைப்பதாகச் சொல்கிறார். இந்தக் காலகட்டத்தில் இவரது போராட்டங்களையும், மன உளைச்சலையும், அவற்றை எதிர்கொண்டு ஆராய்ந்து களையும் நெஞ்சுறுதியும் இளைஞர்களுக்கு வேண்டும். இவர் வெல்லும் போது ஊழையும் உப்பக்கம் காண்பர் உழைவின்றித் தாளாது உஞற்றுபவர் என்ற வள்ளுவம் நினைவுக்கு வரும். இப்போராட்டத்தினிடையே தனது வாழ்க்கைத் துணையைக் காண்கிறார். கமீலா ஒரு குடும்ப நல மனோவியலாளர். இவரது தொழிலில் ஈடுபடும் நேரத்தையும் வாய்ப்பையும் தன்னால் வழங்க முடியவில்லையே என்ற ஏக்கம் நாசருக்கு உண்டு. ஏனெனில் நடிப்பைத் தவிர ஏனைய நாசரின் பெரும் வேலைப் பாரங்களைச் சமாளிப்பவர் கமீலாவே.

நாடகங்களிலிருக்கும் உயிர்ப்புத் தன்மையினைத் திரைக்குக் கொண்டு வருவதில் அவர் காட்டிய முனைப்பும், நாசரிடம் இருந்த படைப்பூக்கமும் அவரை ஒரு இயக்குநராகப் பரிணமிக்க வைத்திருந்தது. தேவதை, அவதாரம், பாப்கார்ன், மாயன் போன்ற படங்களை இயக்குகிறார். சிறந்த படங்கள் என்று பலரால் பாராட்டப்பட்டபோதிலும் பொருளாதார ரீதியில் அவருக்கு இப்படங்கள் ஒரு பின்னடைவையே தந்தன. இப்பின்னடைவிலிருந்தும், அதனைச் சூழ்ந்திருந்த உணர்வுப் போராட்டங்களிலிருந்தும் அவர் விடுபடுவதற்குக் கமீலாவுடன் சேர்ந்து மீண்ட விதம் பாராட்டுக்குரியது. குடும்பங்களுக்குள் நிகழும் தொழில் சார்ந்த இத்தகைய பிணக்குகள் தாங்கவியலாத் துயரத்தையும், சில நேரங்களில் பெரும் விரிசல்களையும் ஏற்படுத்துவதைப் பார்க்கிறோம். இச்சூழலில் நாசர்-கமீலா இணையர் புரிந்துணர்வுடன் செயலாற்றிய விதம் இளந்தம்பதியர்க்கு ஒரு மணவாழ்க்கைப் பாடம். இவர்களுக்கு மூன்று மகன்கள். சென்னையில் வசிக்கிறார்கள். நாசரின் வீட்டில் அவராலேயே வடிவமைக்கப்பட்ட கலைப்பொருட்கள் நிறைய. சென்ற இடங்களில் வாங்கி வைத்தவையும், அவற்றைக் கொண்டு உருவாக்கியவையுமாக இவ்வீடு ஒரு கலைக்கூடமாக இருக்க வேண்டுமென்ற கற்பனை எழுகிறது.

நாசர் தன்னுடைய கலைத் தேடலின்போது கிடைத்த ஆதரவை அல்லது கிடைக்காதுபோன ஆதரவைத் தன்னுடைய இளைய சகாக்களுக்கு வழங்கி அவர்கள் மேலேறி வர உதவுகிறார். இவரால் அறிமுகம் செய்யப்பட்ட பசுபதி, சண்முகராஜன் போன்ற சிறந்த நாடக நடிகர்கள் இன்று திரையிலும் மிளிர்வதற்கு நாசர் தன்னாலான உதவிகளைச் செய்கிறார். தங்களது அடவு நிறுவனத்தின் மூலம் நாசர்-கமீலா பல கலைஞர்களுக்கு நாடகப் பயிற்சியளித்து உதவிவருகிறார்கள். அடவு நிறுவனம் நலிந்த கலைகளுக்கும், நலிந்த கலைஞர்களுக்கும் முன்னுரிமை அளித்து இக்கலைகளும் கலைஞர்களும் மேம்பட உதவுகின்றது.

நேர்காணல் என்ற பத்திரிகை ஒன்று வெளிவருகிறது. அதில் நாசரின் விரிவான (42 பக்கங்கள்!) நேர்காணலும், அவரைப் பற்றி அவரை அறிந்த இதர கலைஞர்கள், நண்பர்களின் பகிர்வுகளோடு வந்திருக்கிறது. நேர்காணல் என்ற பெயர்களில் ஒன்றரைப் பக்கத்தில் வருகின்றவை ஒருவரின் ஒரு பொருளைப் பற்றிய கருத்தையறிய உதவுகின்றன. ஆனால் இதனைப் போன்ற விரிவான நேர்காணலே ஒரு மனிதரின் பலவிதமான முகங்களைக் காட்டி அவரிடமிருந்து கற்பதற்கான தெளிந்த சூழலை ஒரு வாசகருக்கு ஏற்படுத்தித் தருகிறது. இத்தகைய நேர்காணலைப் படித்தபிறகு, இதுவரை திரையில் கண்டுவந்த நாசர் என்ற நடிகனின் பின்னாலிருக்கும் விடாமுயற்சியுள்ள மனிதனும், தாகங்கொண்ட ஒரு மாணவனும் தென்படுகிறார்கள். விரிகின்ற காட்சிகளால் அதிசயப்படுவதும் கற்றுக்கொள்வதும்தானே வாழ்வின் சுவையான தருணங்கள்!

இத்தகைய அரிய கலைஞர் பேரவை விழாவுக்கு வருகிறார். இவரோடு நிச்சயம் பேசுவதற்கும், கேட்டுத் தெளிவு பெறுவதற்கும் உங்களிடம் கேள்விகள் இருக்கலாம். பெரும்பாலான நட்சத்திரக் கேள்வி நேரங்கள் அர்த்தமில்லாத, நகைச்சுவை என்ற பெயரால் அபத்தமான கேள்விகளாலும் நிறைந்துவிடுவதைப் பார்த்திருக்கிறோம். நாசருடனான கேள்வி நேரம் இவ்வாறு இருக்க வேண்டாம் என நாம் முடிவு செய்துகொள்வோம். ஒரு சிறந்த நடிப்பு அறிஞரிடமிருந்து கலையைப் பற்றிய கேள்விகளைக் கேட்டு, பேரவைக்கும், நாசருக்கும், அமெரிக்கத் தமிழர்களுக்கும் பெருமையைக் கூட்டுவோம்!