Saturday, June 30, 2007

பேரவையில் வலைப்பதிவர் கருத்தரங்கம் - எப்போது?

அன்பு வலை நண்பர்களே,
வணக்கம்!
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையில் தமிழ்மணம் முதன் முறையாக வலைப்பதிவர் கருத்தரங்கை நடத்தவிருக்கின்றது. இதற்கான நேரம் இப்போது தெரியவந்துள்ளது.

8ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை, காலை 9.30 முதல் 11.30 வரை இரண்டு மணி நேரங்கள் இதற்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதன் போது வலைப்பதிவர்களின் சந்திப்பும் அத்துடன் கருத்தரங்கமும் நடக்கவிருக்கின்றன. வட அமெரிக்கா வாழ் வலைப்பதிவர்களையும், வலைப்பதிவில் ஆர்வமுள்ள யாவரையும் கலந்துகொள்ளவும், உரையாற்றவும் அன்புடன் அழைக்கின்றோம்.

அன்புடன்
ஒருங்கிணைப்பாளர்கள்

முந்தைய பதிவு

ஒருங்கிணைப்பாளர் தொடர்பு:
பாஸ்டன் பாலாஜி (bsubra at gmail dot com)
மயிலாடுதுறை சிவா (sivaakumar at gmail dot com)
இலவசக் கொத்தனார் (elavasam at gmail dot com)
சுந்தரவடிவேல் (sundara at gmail dot com)
சங்கரபாண்டி (sornam at gmail dot com)

Friday, June 22, 2007

சிவகுமாரெல்லாம் வந்து என்ன செய்யப் போறாரு?

நிகழ்ச்சி ஏற்பாட்டுக்காகப் பல மக்களைச் சந்திக்கிறோம். அவங்க கேட்குற முக்கியமான கேள்வி, "யாரெல்லாம் வர்றது?"
ஒரு சில பேருக்கு ஜார்ஜ் ஹார்ட் வர்றாருன்னா ஆர்வமாயிருக்கு. சில பேருக்கு நித்யஸ்ரீ மகாதேவன்னு சொன்னா அப்படியான்னு கிளம்புறாங்க. சில பேர் கேக்குறாங்க "சினிமா நடிகருங்க யாரும் வரலையா?" அதுக்கும்தான் பதில் வச்சிருக்கோமே! "ஆமா, வர்றாங்க, சிவகுமாரும் அவரோட மகன் கார்த்தியும் வர்றாங்க". "கார்த்தி யாரு? இந்த பருத்திவீரன்ல நடிச்ச பையனா? அடடே...அது சரி, ஆனா அவங்க அப்பா என்னத்துக்கு, அவரு அந்தகாலத்து ஆளாச்சே...அவரு வந்து என்ன பண்ணப் போறாரு?" இப்படியும் சிலர் கேட்குறாங்க. அவங்களுக்காக இந்தப் பதிவு. சிவகுமாரிடம் ஒரு நடிகர்ங்கறதத் தவிர என்ன திறமையெல்லாம் இருக்கு, அவர் அமெரிக்காவுக்கு வர்ற நோக்கம் என்ன அப்படின்னு பாப்போம்.

மோட்டார் சுந்தரம் பிள்ளையில் நுழைந்த அவர், சொல்லத்தான் நினைக்கிறேன், சிந்து பைரவி, வண்டிச்சக்கரம், ஆட்டுக்கார அலமேலு, பௌர்ணமி அலைகள், இனி ஒரு சுதந்திரம், மறுபக்கம் முதலான படங்களில் திறம்பட நடித்த ஒரு தேர்ந்த நடிகர் என்பது உங்களுக்குத் தெரியும்.
சிவகுமார் ஒரு ஓவியர் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதுவரையில் அவர் 48 ஓவியங்களை வரைந்திருக்கிறார். அவற்றை வைத்து கண்காட்சியும் நடத்தியிருக்கிறார். சிறந்த நுணுக்கங்களைப் பயன்படுத்தி, உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வண்ணம் ஒவ்வொரு கோட்டையும் தீட்டியிருக்கிறார். இவரது ஓவியங்களில் சிலவற்றைத்தான் இங்கே நீங்கள் பார்க்கிறீர்கள் (நன்றி: தட்ஸ்தமிழ்.காம்). இவ்வோவியங்களை நேரில் பார்க்கும்போது அவற்றிலிருக்கும் சிறு சிறு விபரங்கள் உங்களை வியப்பிலாழ்த்தும். ஒவ்வொரு ஓவியத்துக்குமான சில பின்னணிச் செய்திகளை வைத்திருப்பார். இவரது ஓவியங்களில் சிலவற்றை இப்போது எடுத்து வந்து அவற்றை நமக்குக் காட்சிப்படுத்த இருக்கிறார். உங்களுக்குத் தெரியுமா? மறைந்த நடிகை பத்மினியை இவர் வரைந்து அவரிடம் காட்டியபோது, அவ்வோவியத்தின் அழகை வியந்தாராம் பத்மினி. பின்னொரு முறை தான் இறந்தபிறகு தன் உடலருகே இந்தப் படத்தைத்தான் வைக்கவேண்டுமென்று கேட்டுக் கொண்டாராம். அதன்படியே அண்மையில் பத்மினியின் மறைவின்போது சிவகுமாரும் சென்று அப்படத்தை வைத்திருக்கிறார்.

சிவகுமார் மனிதர்களின் உருவங்களை நன்கு அறிந்து வைத்திருப்பவர் என்பதை அவரிடம் நீங்கள் பேசினால் புரிந்துகொள்ளலாம். அழகான உருவம் எது, ஏன் குழந்தைகள் அழகாக இருக்கிறார்கள், காந்தியார் இளமையில் இருந்ததற்கும், முதுமையிலிருந்ததற்கும் ஒரு ஓவியனின் பார்வையில் என்னென்ன மாற்றங்கள், இரட்டைக் குழந்தைகளினிடையே ஓவிய ரீதியில் என்னென்ன மாற்றங்கள் என்று உடல் அழகியலை மிக நுட்பமாக அறிந்து வைத்திருக்கிறார். பேரவைத் திருவிழாவின்போது இவரது ஓவியக்கலைத் திறமையை நீங்கள் நேரில் அறியவும், அவரோடு இது குறித்து உரையாடவும் உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும்.

சிவகுமார் ஒரு எழுத்தாளர் என்பது நிறைய பேருக்கு இன்னும் தெரியாது. "இது ராஜபாட்டை அல்ல" என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். இவர் அமைதியான, எளிய குணமும், தனிமனித ஒழுக்கமும் கொண்ட மனிதர். அது இவரது எழுத்துக்களில் பளிச்சிடும். இவர் ஒரு நாட்குறிப்பை வைத்திருக்கிறார். தான் ஒரு ஓவியனாக, நடிகனாக, வாழ்வில் சந்தித்த அனுபவங்களை, மனிதர்களைப் பதிந்து வைத்திருக்கிறார். இவர்களுள் அன்றாட மனிதர்களிலிருந்து பிரபலங்கள் வரை அடக்கம். தானறிந்த பிரபலங்களையும் பற்றி சிவகுமார் நம்முடன் பகிர்ந்துகொள்வார். மேலும், இவர் ஒரு தீவிர படிப்பாளி. நல்ல பல இலக்கியங்களைக் கற்றிருக்கிறார். அவற்றைக் குறித்து மேலும் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் உண்டு. எனவே இலக்கிய வாசகர்களுக்கும் சிவகுமார் ஒரு நல்ல அறிமுகமாக இருப்பார்.


பேரவையில் சிவகுமார் கலந்துகொள்ளும்/வழங்கும் நிகழ்ச்சிகள்:

1. ஜூலை ஆறாம் தேதி வெள்ளிக்கிழமை இரவு: வள்ளல்கள், கொடை வள்ளல்கள் மற்றும் பெருங்கொடை வள்ளல்கள் ஆகியோருடன் ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். இதன்போது அவருடைய ஓவியங்களையும், தனது திரைத்துறை அனுபவங்களையும் பற்றிக் கலந்துரையாடுகின்றார். சுமார் இரண்டு மூன்று மணி நேரங்கள் நிகழவிருக்கும் இவ்விருந்தில் நீங்களும் பங்குபெறலாம். இது வள்ளல்கள், கொடைவள்ளல்கள் மற்றும் பெருங்கொடை வள்ளல்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி. நீங்களும் வள்ளல், கொடைவள்ளல், பெருங்கொடை வள்ளல் என்ற முறையில் பங்கு கொள்ளும் விபரங்களை பேரவையின் இணையத் தளத்தில் காணலாம்.

2. சனிக்கிழமையன்று சிவகுமார் "தமிழ்த் திரையில் தமிழ்" என்பது குறித்து உரையாற்ற இருக்கிறார். அதன்போது அவரிடம் கேள்வி நேரமும் இருக்கும்.

3. ஞாயிறன்று சிவகுமாரும் கார்த்தியும் சேர்ந்து ஒரு சிறு நிகழ்ச்சியையும் (சஸ்பென்ஸ்!) அதன் பின்னொரு கலந்துரையாடலையும் செய்ய இருக்கிறார்கள்.

சிவகுமாருடன் பேசியபோது, அவர் திரைப்பட நுட்பங்களையும், ஓவிய நுணுக்கங்களையும், தான் வாழ்வில் கண்டுணர்ந்த பாடங்களையும் நம்மோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே அவர் இங்கு வரும் நோக்கம் என்று குறிப்பிட்டார். சிவகுமாரும், கார்த்தியும் நிகழ்ச்சிகள் நடக்கும் நான்கு நாட்களும் நம்முடனேயே இருப்பார்கள். அவர்களைக் கண்டு அளவளாவ இது ஒரு நல்ல வாய்ப்பு.

குழந்தை வளர்ப்பைப் பற்றி அவரிடம் கேட்கவேண்டும் என்று உங்களுக்கே தோன்றும், இதைப் படித்தால்.

ஒரு பெருமைக்குரிய செய்தி!

அன்புத் தமிழ் நெஞ்சங்களே!
வருகின்ற பேரவைத் திருவிழாவை முன்னிட்டு ராலே நகர மேயர் தமிழர்கள் பெருமிதம் கொள்ளும் ஒரு மகிழ்வான செய்தியைத் தந்திருக்கிறார்கள். அது என்னவென்றால், திருவிழா நிகழவிருக்கும் வாரயிறுதியை "தமிழ்ச்சங்கங்களின் வாரயிறுதி (Tamil Sangams Weekend)" என்று அறிவித்திருக்கிறார்.

தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையிலும், தமிழர்களையும், அவர்தம் திருவிழாவையும் அங்கீகரிக்கும் நோக்கிலும் வெளிவந்திருக்கும் அவரது சிறப்பு அறிக்கையை உங்களோடு மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறோம். சிறப்பாக ஒழுங்கு செய்யப்படும் விழாவினில் கலந்துகொண்டு இன்புறுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். பேரவையின் விழா குறித்த விபரங்களை எங்களது இணையத்தளத்தில் காணலாம்.

ராலே நகர மேயரின் அறிக்கை கீழே:

Wednesday, June 20, 2007

பேரவைத் திருவிழாவில் Bone Marrow Drive!

கடந்த சில ஆண்டுகளைப் போலவே, இவ்வாண்டும், பேரவைத் திருவிழாவின்போது, நோயுற்றவர்களுக்கு உதவ முன்வரும் கொடையாளர்களின் பட்டியலைத் தயாரிக்கத் தன்னார்வலர்கள் வருகிறார்கள். இவர்கள் ஒரு சிறு பஞ்சில் உங்களது
கன்னத்தின் உட்புறத்தில் ஒரு தடவு தடவி அதைச் சேகரித்துக் கொள்வார்கள். இதனைக் கொண்டு, எலும்பு மச்சை தேவைப்படுவோருக்கு நீங்கள் உதவக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

எலும்பு மச்சை என்று சொல்லப்படும் bone marrow மிகவும் முக்கியமான உறுப்பு. நம் உடலுக்குத் தேவையான இரத்த வெள்ளை மற்றும் சிவப்பு அணுக்கள் இங்கே உற்பத்தி செய்யப்படுகின்றன. சில எலும்பு மச்சை நோய்களாலும், புற்று
நோயாலும் சிலருக்கு இரத்த அணுக்கள் குறைவாகவோ அல்லது சரியாக வேலை செய்யாமலோ போகலாம். இதனைச் சரிசெய்ய இன்னொருவரிடமிருந்து எலும்பு மச்சையிலிருந்து மூலச் செல்கள் (stem cells) பிரித்தெடுக்கப்பட்டு, நோயுற்றவரின் உடலுக்குள் செலுத்தப்படுகின்றன (இதனால் கொடுப்பவருக்கு பெரும் பாதிப்பில்லை; இரத்த தானம் போலவே இதுவும் மீண்டுவிடக் கூடியது). மச்சையை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாமென்றாலும், கொடுப்பவரும் பெறுபவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவராக இருப்பது பல வழிகளில் நல்லது. அமெரிக்காவில் இருக்கும் தெற்காசியர்களுக்கு எலும்பு மச்சை சம்பந்தமான நோய்கள் வந்தால், அவர்களுக்கு, தெற்காசியர்களிடமிருந்து எலும்பு மச்சை எடுத்தால்தான் பொருந்திவரும் வாய்ப்பு அதிகம். எனவே நோயில் வாடும் நம்மவர்களுக்கு உதவும் நோக்கில் இந்தக் கொடையாளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

முக்கியம்: பேரவைத் திருவிழாவின்போது உங்கள் மச்சையை எடுக்கமாட்டார்கள். இதன்போது உங்கள் ஒப்புதலும், கன்னத்திலிருந்து பஞ்சால் எடுக்கப்படும் மாதிரியுமே. அதனால் இதில் இணைந்து உங்களது சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு உதவுங்கள் என்று பேரவை அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
வினய் என்ற இந்த இளைஞரின் வாழ்வைப் பாருங்கள், இவரைப் போன்றவர்களின் உயிரைக் காக்க உங்களாலும் உதவ முடியும்!
பாஸ்டனில் நடந்த கொடையாளர் சேர்ப்பு பற்றிய பதிவர் பாஸ்டன் பாலாவின் பதிவை இங்கே காணலாம்.

Tuesday, June 19, 2007

பருத்தி வீரனைப் பாக்க வாரீயளா?!

பேரவையின் திருவிழாவில் பங்கேற்க வருகிறார் பருத்தி வீரன்! கார்த்தி கலந்துகொள்ளும் செய்தி உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும். முதல் படத்திலேயே தனது நடிப்புத்திறனை நன்கு வெளிப்படுத்திப் புகழ்ப் பாதையில் நடைபோடத் துவங்கியிருக்கும் பருத்தி வீரன் கார்த்தியை இவ்வாண்டு திருவிழாவில் சிறப்பு விருந்தினர்களுள் ஒருவராக அழைத்திருக்கிறோம். அவரைப் பற்றி அறியாதவர்களுக்காக இந்தப் பதிவு.

வலைப்பதிவுகளில் பருத்திவீரனைப் பற்றிய செறிவான, ஆக்கபூர்வமான, பயன்கருதி இடித்துரைக்கும் விதமான விமரிசனங்கள் வந்திருந்ததை நீங்கள் படித்திருப்பீர்கள். பத்திரிகைச் செய்திகளைப் பார்க்காத பதிவர்களுக்காக இது.

பருத்தி வீரன் திரைப்படத்தில் அவரது நடிப்பினைப் புகழ்ந்த சில பத்திரிகைச் செய்திகளைக் கீழே காணலாம்:

No hero in the recent past has done such a heavy role in his debut. The actor handles it with the expertise of a seasoned artist. Callous and cantankerous, caring and comical, Karthi gets into the skin of the character convincingly.
-The Hindu

In a role which not many heavyweights would have dared to attempt, debutant Karthi ambles his way to instant fame.
- News Today

Karthi as Veeran is outstanding, making it quite hard to believe that this is his debut film. His characterization of Veeran - a ruffian on the outside with a heart of gold – is depicted with the expertise and grace of a veteran actor.
- Deccan Chronicle.

It is a powerful performance from Karthi as Veeran. A challenging role, it’s not just about getting the dialect and intonation correct, but also about the varied expressions and whole body language. His is one of the most brilliant debuts one has seen in recent times.
- The Indian Express

The strength of the film however, lies in Karthi, as Paruthiveeran. This is surely one of the best performances by a debutante seen in recent times. Karthi has faced the ordeal ‘with fire’ and has come out unscathed. He adds his own breed of style and exuberance to the character.
- Economic Times

ஆச்சர்ய அறிமுகம் கார்த்தி. முதல் மேட்சிலேயே சதம் அடிப்பது மாதிரி கலக்கல் விளாசல். கண்களில் வழியும் சிரிப்பும் ஆடிக்கொண்டே அலைகிற திமிரும் வேலி ஓணானுக்கு வெட்கம் வந்தது போல திரிகிற இயல்புமாக இது ஒரு பிரமாத ஓப்பனிங்.
-ஆனந்த விகடன்

முதல் ஆச்சர்யம்! பட நாயகன் கார்த்தி. முதல் படமாம். நம்ப முடியவில்லை. கிராமத்து தறுதலைக்குரிய அத்தனை நடை உடை பாவனையும், வசன உச்சரிப்பும் அப்படியே...
கலக்கிபுட்ட புள்ள!
- குமுதம்

பேரவையினருக்கும், வந்து கலந்துகொள்ளப் போகும் அத்தனைத் தமிழர்களுக்கும் பகிர்ந்துகொள்ளுமாறு கார்த்தி நமக்கு பருத்திவீரனிலிருந்து சில காட்சிகளை ஒளிக்கோப்பாக அனுப்பியிருக்கிறார். அதனை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பேரவை மகிழ்ச்சி கொள்கிறது. இந்த இளங்கலைஞர் தன் கலைப்பயணத்தில் மேலும் வெற்றி பெறவும், தமிழ்த் திரைப்படங்களின் தரத்தை இவரைப் போன்றோர் உயர்த்தவும் வாழ்த்துவோம், வாருங்கள் பேரவையின் விழாவுக்கு! வந்து கார்த்தியைச் சந்தியுங்கள்!!

பருத்திவீரனின் படத்தைப் பார்க்க கீழே சொடுக்குக.



பருத்தி வீரனையே பார்க்க இங்கே சொடுக்குக!
விரைந்து முன்பதிவு செய்துகொள்ளுங்கள்!!

Thursday, June 7, 2007

பேரவை மாநாட்டில் வலைப்பதிவர் கருத்தரங்கம்!

Blogs என அழைக்கப்படும் வலைப்பதிவுகள் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகின்றன. இந்த வலைப்பதிவுகளால் பல சமூக, அறிவியல், கல்வி, தனிமனிதவுரிமை முதலான பல தளங்களிலும் விரைந்த மாறுதல்கள் ஏற்படுகின்றன. தமிழில் தற்போது இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் வலைப்பதியலாம் என நம்பப்படுகிறது. வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களும் பெரும் எண்ணிக்கையில் வலைப்பதிகிறார்கள். வலைப்பதிவர்களை ஒரே இடத்தில் சந்திக்கச் செய்யும் வலைத்திரட்டிகளுள் (blog aggregators) முன்மாதிரியாக விளங்குவது தமிழ்மணம் (www.thamizmanam.com). இவ்வாண்டு பேரவையின் மாநாட்டில் தமிழ்மணம் ஒரு வலைப்பதிவர் கருத்தரங்கை ஏற்பாடு செய்கின்றது. இது பேரவைக்கு வருகை தரும் வலைப்பதிவர்களையும், வலைப்பதிவில் ஆர்வம் உள்ளவர்களையும் ஒருங்கிணைக்க உதவும் என நம்புகிறோம். தமிழ்மணத்தின் அறிவிப்பும், தொடர்பு முகவரியும் கீழே தரப்பட்டுள்ளன. தயவு செய்து நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

தமிழ் வலைப்பதிவர்களுக்கிடையே நேரடி அறிமுகத்தினை ஏற்படுத்தவும் , கருத்தாடல்களுக்கு வழிவகுக்கவும், புதிதாக வலைப்பதிய விரும்புபவர்களுக்கு பயிற்சியளிக்கவும் அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையுடன் (Federation of Tamil Sangams of North America, FeTNA) இணைந்து பேரவையின் ஆண்டுவிழாவின்போது ஒரு வலைப்பதிவர் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்ய தமிழ்மணம் விழைகின்றது. இம்முயற்சியின் தொடக்கமாக, இவ்வாண்டு, அமெரிக்காவின் வடக்கு கரோலைனா மாநிலத்தில் அமைந்திருக்கும் ராலே நகரில் (Raleigh, NC) ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நிகழவிருக்கும் பேரவை நிகழ்வுகளின்போது முதலாவது வலைப்பதிவர் கருத்தரங்கினை ஏற்பாடு செய்கிறது. இந்தக் கருத்தரங்கத்தின் உத்தேசமான வடிவம் கீழே தரப்பட்டுள்ளது :
  • வலைப் பதிவர்கள், பதியாதவர்கள், பதிய விரும்புவோர், வாசிப்போர், யார் வேண்டுமானாலும் பங்குபெறலாம்.
  • கருத்தரங்கம் சுமார் 1-2 மணி நேரங்கள் நடக்கும் .
  • ஒருங்கிணைப்பாளர்/ மட்டுறுத்துனரின் அறிமுக உரை இருக்கும்.
  • புதிதாக வலைப்பதிய விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் ஒரு செயல் விளக்கம் இருக்கும்.
  • ஒவ்வொரு வலைப்பதிவரும் தான் விரும்பும் தலைப்பில் (குறிப்பாக வலைப்பதிவு; மற்றபடி தமிழ், சமூகம் உள்ளிட்ட பல கருத்துக்களில்) உரையாற்றலாம், உரை வாசிக்கலாம், அல்லது தம் வெவ்வேறு விதமான கலைத் திறன்களை வெளிக்காட்டலாம். ஒருவருக்கு சுமார் பத்து நிமிடங்கள் ஒதுக்கப்படும். வரும் வலைப்பதிவர்களின் தொகையினைப் பொறுத்து இக் கால அளவு மாறுபடும்.
  • ஒவ்வொரு பதிவரின் நிகழ்ச்சிக்குப் பின்னும், அவரிடம் , பார்வையாளர்கள் பொதுவில் கேள்வி கேட்பதற்கு (அல்லது கருத்துக் கூறுவதற்கு), இரண்டு நிமிடங்கள் ஒதுக்கப்படும் .
  • அரங்கத்தில் நவீன ஒலி/ ஒளி, திரை/ projector வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே powerpointஐப் பயன்படுத்தி உரை நிகழ்த்துவது வரவேற்கப்படுகிறது .
  • பேரவையின் விழாவுக்கு வருகை தரும் ஒரு சிறப்பு விருந்தினரும் நமது கருத்தரங்கில் வந்து கலந்து கொள்வார்.

இக்கருத்தரங்கை மேம்படுத்த வலைப்பதிவர்கள் தங்கள் கருத்துக்களையும் , யோசனைகளையும் கூறி நிகழ்ச்சி சிறக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அனைத்து அமெரிக்க வலைப்பதிவர்களையும் பங்குபெற அழைக்கிறோம். பங்கு பெற விரும்பும் வலைப்பதிவர்கள்/மற்றவர்கள் தங்கள் விருப்பத்தினைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். மேலும் இக்கருத்தரங்கினை ஒருங்கிணைக்க கீழ்க்கண்ட வலைப்பதிவர்கள் இசைந்துள்ளார்கள். அவர்களில் யாரையேனும் பதிவர்கள் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

பாஸ்டன் பாலாஜி (bsubra at gmail dot com)
மயிலாடுதுறை சிவா (sivaakumar at gmail dot com)
இலவசக் கொத்தனார் (elavasam at gmail dot com)
சுந்தரவடிவேல் (sundara at gmail dot com)
சங்கரபாண்டி (sornam at gmail dot com)

அனைத்து வலைப்பதிவு ஆர்வலர்களையும் வரவேற்கிறோம்!

Tuesday, June 5, 2007

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மாநாடு (FETNA) தேவைதானா?-3

முக்கியமான, நிறைவுப் பகுதி!
பாகம் மூன்று – பேரவை கடந்த காலத்தில் ஆற்றியுள்ள தொண்டு
  • பேரவையின் மாநாடுகளில் வெகுஜன சினிமாக் கலாச்சார மோகம் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கத்தில் பாரம்பரியக் கலைகளையும், கிராமியக் கலைகளையும் ஒருங்கிணைப்பாளர்கள் துணிச்சலுடன் ஏற்பாடு செய்து வந்திருக்கின்றனர்.
  • அந்த அடிப்படையில் கடந்த பல ஆண்டுகளாக பேரவை இதைச் செய்து வந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, விஜயலட்சுமி நவனீதகிருஷ்ணன் குழு, கே. ஏ. குணசேகரன் குழு, புஷ்பவனம் குப்புசாமி குழு, “நிஜ நாடக இயக்கம்” புகழ் மு. இராமசாமி குழுவினரின் "நந்தன் கதை" போன்ற தமிழர்களின் பாரம்பரிய கலைக் குழுக்களைத் தொடர்ந்து அழைத்து வந்து அமோக வரவேற்புடன் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறது.
  • அது மட்டுமல்லாமல் விளிம்புநிலை மட்டும் ஒடுக்கப் பட்ட இனத்தவர்களின் பிரதிநிதிகளை அமெரிக்க மண்ணுக்கு அழைத்து அவர்களை கௌரவித்து அனைத்துத்தரப்பு தமிழர்களும் நம் பண்டைய சமூகச் சீர்கேடுகளைக் களைந்து ஒன்றுபட்டு முன்னேற வேண்டும் என்று செயலில் காட்டி வருகிறது பேரவை. எடுத்துக்காட்டாக முன்பு அழைக்கப் பட்ட திருநங்கை நர்த்தகி நடராஜன், தலித்து எழுத்தாளர் சிவகாமி, நாட்டுப்புற இசைக்கலைஞர் மற்றும் ஆராய்ச்சியாளர் கே.ஏ.குணசேகரன் போன்ற சிறப்பு விருந்தினர்களைக் கூறிப்பிடலாம். அமெரிக்க மண்ணில் உள்ள வேறு எந்த இந்திய இன அமைப்பும் செய்யாத சாதனையாக இதைக் கூறலாம்.
  • நல்ல இலக்கியவாதிகளையும் எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், தமிழ் ஆராய்ச்சியாளர்களையும் அழைத்து கௌரவித்துள்ளது பேரவை. ஜெயகாந்தன், பிரபஞ்சன், சிவகாமி, கவிஞர்கள் அறிவுமதி, இன்குலாப், வைரமுத்து, மு.மேத்தா, அப்துல் இரகுமான், சிற்பி பாலசுப்பிரமணியம், தமிழன்பன், சேரன், சுஜாதா, சிவசங்கரி, கா. சிவத்தம்பி, தமிழண்ணல், சிலம்பொலி செல்லப்பன், மதிவாணன், ஓவியர் புகழேந்தி, அருள்மொழி, கனிமொழி, தியாகு, தாமரை என எத்தனையோ பெயர்களைக் குறிப்பிடலாம்.
  • பேரவை இலங்கையில் ஐம்பது ஆண்டுகளாக தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக போராடி வரும் ஈழத்தமிழர்களின் துயரத்தில் பங்கு கொண்டு வந்திருக்கிறது பேரவை. ஈழத்துத் தலைவர்களையும், நாடாளுமன்றப் பிரதிநிதிகளையும், எழுத்தாளர்களையும், மலையகத்தமிழர்களின் பிரதிநிதிகளையும் வரவழைத்து அவர்களது குரலைத் தொடர்ந்து ஒலிக்கச் செய்திருக்கிறது. ஜனநாயக முறையில் அளித்து வரும் இந்த ஆதரவை வேண்டுமென்றே திரித்து பேரவை அமைப்பையே களங்கப்படுத்துவோரும் உண்டு. இருப்பினும் ஈழத்தமிழரின் உரிமைகளுக்காக எழுப்பப்படும் ஒவ்வொரு ஆதரவுக் குரலின் போதும் மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவரும் கைதட்டியும், எழுந்து நின்று மரியாதை செலுத்தியும் தங்கள் ஒருமனதான வரவேற்பைத் தெரிவித்து வந்துள்ளனர்.
  • அமெரிக்க பல்கலைக்கழகங்களில் தமிழாராய்ச்சி செய்த/செய்யும் பேராசிரியர் இராமனுஜம், ஜார்ஜ் ஹார்ட், நார்மன் கட்லர், ஜேம்ஸ் லிண்ட்ஹோம் என பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியிருக்கின்றனர். அமெரிக்க மண்ணில் பிறந்து வளர்ந்த தமிழ் இளைஞர்கள் பலர் இம்முயற்சிகளுக்கு உதவியுள்ளனர்.
  • மாட்சிமை விருது என்ற பெயரில் ஆண்டுதோறும் தமிழுக்கும், தமிழ்ச் சமூகத்துக்கும் பெரிதளவில் தொண்டு ஆற்றியவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது பேரவை. இவ்விருதினைப் பெற்றவர்களுள் முனைவர்கள் ஏ.கே.இராமானுஜம், வ.ஐ.சுப்பிரமணியம், மணவை முஸ்தபா, கா.சிவத்தம்பி போன்றவர்கள் மிக முக்கியமானவர்கள்.
  • அமெரிக்க மண்ணில் நிரந்தரமாகத் தமிழாராய்ச்சியில் ஈடுபடுவதற்காக பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பீடம் ஏற்படுத்த பணம் திரட்டி உதவியது.
  • 2005ல் முதல்முறையாக அமெரிக்க மண்ணில் பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டை நடத்தியது. மேரிலாந்து மாநிலம் கொலம்பியாவில் நடந்த இந்த மாநாட்டில், திருக்குறளில் ஆராய்ச்சி செய்து வரும் அறிஞர்கள் பலர் கலந்து கொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வழங்கினர். இக்கட்டுரைகள் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தினரால் நடத்தப்படும் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டன.
  • இந்த ஆண்டு பேரவை மாநாட்டில் “பழந்தமிழ் இலக்கியம் காட்டும் தமிழர் பண்பாடு” என்ற பொருளில் இலக்கியக் கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது. இது அடுத்த ஆண்டில், பேரவை டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்தப் போகும் ஆராய்ச்சி மாநாட்டுக்குக் கட்டியம் சொல்வது போல அமைகிறது.
  • 2003ல் முதல்முறையாக அமெரிக்க மண்ணில் தமிழ் மொழி கற்பிக்கும் கோடைகால முகாம் நடத்தப் பட்டது. மேரிலாந்து மாநிலம் கொலம்பியாவில் நடந்த இம்முகாமில் அமெரிக்கா, கனடா நாடுகளிலிருந்து மொத்தம் 22 மாணவர்கள் கலந்து கொண்டு தமிழ் கற்றனர். இதைத் தொடர்ந்து மேலும் இரண்டு முகாம்கள் வெவ்வேறு நகரங்களில் நடத்தப் பட்டுள்ளன.
  • அமெரிக்கத் தமிழ் இளைஞர் அமைப்பான NTYO இங்கு பிறந்து வளர்ந்த தமிழ்ப் பிள்ளைகளால் ஆரம்பிக்கப் பட்டது. இவர்களும் பேரவை மாநாட்டில் தனியே தங்களுக்கென்று சில நல்ல நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்கின்றனர். இவை பெரும்பாலும் ஆங்கிலமும் தமிழும் கலந்து நடத்தப் பட்டாலும், தமிழ்க் கலாச்சாரத்துக்குத் தொடர்பான நிகழ்ச்சிகளே.
  • கடந்த ஆண்டு இரு இந்து மதவாத அமைப்புகள் கலிபோர்னியா மாநில பள்ளிக்கூட வரலாற்றுப் பாட நூல்களில் இந்திய வரலாற்றை திரித்து தவறான முறையில் திணிக்க முனைந்தது. பேரவை சில அமெரிக்க வரலாற்றுப் பேராசிரியர்களுடனும் மற்ற மதசார்பற்ற இந்திய அமைப்புகளுடனும் சேர்ந்து போராடி அந்த வரலாற்றுத் திரிப்பை முறியடித்தது.
  • கணினித் தமிழின் வளர்ச்சிக்கு பேரவை அமைப்பு ரீதியாக தன்னால் இயன்ற ஆதரவை அளித்து வருகிறது. தமிழ் யுனிகோடு வரிசையில் உள்ள சிக்கல்களை சரிசெய்ய உலக யுனிகோடு நிறுவனத்துக்குப் பரிந்துரைக்க தமிழக அரசு தொழில்நுட்ப வல்லுனர்கள் அடங்கிய ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளது. பேரவை நிர்வாகக் குழுவும் தமிழக அரசின் பரிந்துரைகளை ஆதரித்து உலக யுனிகோடு நிறுவனத்துக்கு தன் கருத்துக்களை அனுப்பியுள்ளது.ஆழிப்பேரலைகள் (சுனாமி) ஏற்படுத்திய மிகப் பெரும் சேதத்தின் போது தமிழ் நாட்டுக்கும், தமிழ் ஈழத்துக்கும் பொருளுதவியும், பண உதவியும் அளித்தது பேரவை. அதுமட்டுமல்லாமல் கும்பகோணத்தில் நடந்த பள்ளி தீ விபத்தின் போது உடனடியாக நிதி திரட்டி வழங்கியது. கட்ரீனா புயல் தாக்கிய அமெரிக்க நகரமான நியூஆர்லியன்ஸுக்கும் பேரவை உதவிகளை அனுப்பியது. ஆண்டு தோறும் பொங்கல் அன்று சிகாகோ நகரில் முதியோர் மற்றும் அனாதை இல்லங்களில் உணவு வழங்கி வருகிறது. இது போல் எண்ணற்ற சேவைகளில் பேரவைவும், அதன் அங்கங்களான பல தமிழ்ச் சங்கங்களும் செய்து வருகின்றன.
  • இதுதவிர கடந்த சில ஆண்டுகளாக திருமணத்துக்கான இளைஞர்கள் சந்திப்பையும் ஏற்படுத்தி வருகின்றனர். இவை சாதியை மறுத்த திருமணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி எண்ணற்ற சாதனைகளை பல்வித இன்னல்களுக்கு இடையே செய்து வரும் பேரவை மாநாட்டிற்கு அவசியம் வந்து தங்கள் ஆதரவைத் தர வேண்டியது அமெரிக்கத் தமிழர்களின் கடமை.

Monday, June 4, 2007

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) மாநாடு தேவைதானா? - 2

பாகம் இரண்டு - பேரவையினால் அமெரிக்கத் தமிழர்க்கு என்ன பயன்?

தமிழ்ச்சங்கங்களின் வெளிப்படையாக நம்பப் படும் பயன்
தமிழ்ச்சங்கங்களில் உறுப்பினராகச் சேர்ந்து கலந்து கொள்வதன் மூலமோ அல்லது பொறுப்புகளிலும், நிகழ்ச்சிகளிலும் தீவிர பங்கேற்பதன் மூலமோ நம் குழந்தைகளுக்கு நம்முடைய கலாச்சாரத்தோடும், மொழியோடும் தொடர்புடன் இருப்பதற்கு உதவும்.

இதில் ஓரளவு உண்மையுண்டு. தமிழ்ப் பண்பாட்டை நாம் வீட்டில் திணிக்கும் பொழுது, இயல்பான எதிர் வினையாக நம் குழந்தை அதிலிருந்து மீற நினைக்கும். ஆனால் தன்னையொத்த மற்றக் குழந்தைகளும், இளைஞர்களும் வெளிப்படுத்தும் கலாச்சாரக் கூறுகளை இயல்பாக உள்வாங்கிக் கொள்ளும்.
இருந்தாலும் இது முழுக்க வெற்றியில் போய் முடியும் என்று சொல்ல முடியாது. அதனால்தான் சிறுவர்களாக இருக்கும் பொழுது தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் கலந்து கொள்ள நினைப்பவர்கள், இளைஞர்களாகும் பொழுது விலகிப் போய் விடுகிறார்கள். இதற்கு விதி விலக்காகவும் ஒரு சில இளைஞர்கள் உண்டு, அதற்குக் காரணம் அவர்களின் வீட்டிலும் குழந்தைகளுக்குப் பண்பாட்டையும், மொழியையும் இயல்பாகக் கற்றுத்தர பெற்றோர் முயற்சி செய்கின்றனர்.

வெளியே பேசப்படாத ஆனால் மிக முக்கியமான பயன்
இந்த நாட்டில் நாமெல்லாம் குடியேறியவர்கள். எவ்வளவு திறமையிருந்தாலும், குடியுரிமை வாங்கி நீண்ட காலம் வசித்தாலும், இரண்டாவது தலைமுறையாக நம் குழந்தைகள் இருந்தாலும் வேற்று இனத்தவர்களாகத்தான் கருதப்படுகிறோம். அமெரிக்காவின் செல்வச்செழிப்பு குன்றாத வரையிலும், வேலை வாய்ப்புகள் ஓரளவு இருக்கும் வரையிலும் இந்த வேற்று இன மனப்பான்மையால் நமக்கு எந்தச் சிக்கலும் வராது.
திண்டாட்ட சூழ்நிலை உருவானால்தான் ஐரோப்பியத் தோற்றமில்லாதவர்கள் எல்லோரையும் வேற்று இனம் மட்டுமல்லாது வெளியேற்ற வேண்டிய இனம் என்று கருதும் மனப்பான்மை வரக்கூடும். இது வரலாற்றில் காலங்காலமாக எல்லா நாடுகளிலும் ஏற்பட்டு வந்துள்ள நிலைமை. இதில் கறுப்பு, வெளுப்பு என்றெல்லாம் பேதம் கிடையாது. மலேயாவும், பர்மாவும், உகாண்டாவும் உணர்த்தும் பாடம் இது.

மக்களாட்சிக் குடியரசு இல்லாத நாடுகளில் வெளியேற்றத்தையும், வன்முறையையும் நேரடியாகச் செயல் படுத்துவர். மக்களாட்சிக் குடியரசும், சட்டதிட்டங்களும் உள்ள நாடுகளில் முதலில் சட்டப் பூர்வமான மாற்றங்களைக் கொண்டு வர நினைக்கும் பெரும்பான்மை பலம் கொண்ட அரசு. அப்படிப் பட்ட சூழ்நிலைகளில் நம் தாய் நாடு நம்மைப் பாதுகாக்குமா என்றால் உறுதியாகச் சொல்ல முடியாது. சமகாலக் கட்ட உலக அரசியல் நிர்ப்பந்தங்களின் அடிப்படையிலும் சுயநலத்தின் அடிப்படையிலும்தான் ஒவ்வொரு நாடும், இன்னொரு நாட்டுடன் முறித்துக் கொள்வதும், சேர்ந்து கொள்வதும் நடந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தாய் நாட்டை ஆள்வோர் நாணயமில்லாத அரசியல்வாதியாக இருந்தால், தங்களுக்கு வேண்டிய சிலரின் நன்மைக்காக மற்ற அனைவர் நலத்தையும் காவு கொடுக்கவும் செய்வர்.

ஒரே வழி - சிறுபான்மை சமூகங்கள் ஒற்றுமையாக, ஒரு அமைப்பாக தங்களின் இருப்பை உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கான நடை முறைகள் - தமிழ்ச்சங்கங்களை நல்ல முறையில் கட்டிக் காப்பது, பல்வித கலாச்சார நிகழ்ச்சிகள் , மாநாடுகள் போன்றவற்றை நடத்திக் கொண்டே இருப்பது.

எனவே தனிப்பட்ட சுயநலங்களையும், விருப்பு வெறுப்புகளையும் ஒதுக்கி வைத்து நம்முடைய சந்ததியினரின் ஒட்டு மொத்த சமுதாயத்தின் சுயநலம் கருதி தமிழ்ச்சங்கத்தையும், பேரவையும் நல்ல முறையில் நடத்த முன்வர வேண்டும். பல்வித வேலைகளுக்கும், இடர்ப்பாடுகளுக்கும் இடையில் நமக்குக் கிடைக்கும் சிறு ஓய்வு நேரத்தை எப்படிப் பயனுள்ளதாகச் செய்ய முடியும் என்று சிந்திப்போம்.

அடுத்த, நிறைவுப் பாகத்தில் பெட்னா இதுவரை ஆற்றியுள்ள தொண்டை மிகச் சுருக்கமாகக் காண்போம்.

Sunday, June 3, 2007

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) தேவைதானா ?-1

பாகம் ஒன்று - பேரவையின் தமிழர் மாநாடு என்றால் என்ன?

இருபத்தைந்து முப்பது வருடங்களுக்கு முன் அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த நகரங்களிலோ அல்லது மாநிலங்களிலோ தமிழ்ச் சங்கங்களைத் தோற்றுவித்தார்கள். உதாரணமாக நியூயார்க், வாசிங்டன், நியூ ஜெர்ஸி, பிலடெல்பியா, சிகாகோ, சான்பிரான்சிஸ்கோ போன்ற நகரங்களில் தமிழ்ச் சங்கங்கள் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக நடந்து வருகின்றன. ஆரம்ப காலங்களில் தமிழ்ச்சங்கங்கள் தமிழர்கள் ஒன்று கூடிக் களிக்கும் அமைப்புகளாக இருந்தாலும், காலப் போக்கில் கலை நிகழ்ச்சிகளையும், தமிழ்ப் பள்ளிகளையும், போட்டிகளையும், சிறப்பு உரைகளையும், அச்சிதழ்களையும் நடத்த ஆரம்பித்தனர். பெருநகரங்களில் இருந்த தமிழ்ச் சங்கங்கள் பின்னால் ஒன்று கூடி வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) என்ற கூட்டமைப்பையும் ஏற்படுத்தி ஆண்டுக்கு ஒருமுறை கோடை விடுமுறையில் தமிழர் விழாக்களை ஒருங்கிணைத்தனர். முதலில் நானூறு அல்லது ஐநூறு பேர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டுக்கு கடந்த சில ஆண்டுகளாக சுமார் ஆயிரத்து ஐநூறு பேர்கள் வரை வருகின்றனர். அமெரிக்காவில் அதிகம் தமிழர்கள் கூடும் ஒரே நிகழ்வு இந்த பேரவை அல்லது பெட்னா மாநாடு.

இந்த மாநாட்டை ஒவ்வொரு ஆண்டும் ஒருங்கிணைக்கும் ஆர்வலர்கள் மேற்கொள்ளும் சிரமங்கள் எளிதில் விவரிக்க முடியாதவை. ஆயிரத்துக்கும் மேலானவர்கள் கலந்து கொள்ளும் ஒரு பெரிய மாநாட்டை எந்த ஊதியமும் பெறாத தன்னார்வலர்கள் மட்டுமே ஒருங்கிணைப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல. ஒரு சில சுயதொழிலதிபர்களைத் தவிர இத்தன்னார்வலர்களில் பெரும்பாலோர் முழு நேர வேலையில் இருப்பவர்கள். அமெரிக்காவில் அலுவலக நேரத்தில் நம்முடைய அலுவலக வேலையை அதிகம் தட்டிக் கழிக்க முடியாது. முழுநேர வேலையிலிருக்கும் கணவன் மனைவி இருவருமே அனைத்து வீட்டு வேலைகளையும், குழந்தைகளைக் கவனிப்பதையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதற்கிடையே மாநாட்டை ஆகும் செலவுகளுக்காக தங்கள் சொந்தப் பணத்தை நன்கொடையாக வேறு அளிக்க வேண்டும். மாநாட்டுக்கான கட்டணச்சீட்டு வருவாயை வைத்து மாநாட்டுச் செலவில் மூன்றில் ஒரு பங்கைக் கூட ஈடு செய்ய முடியாது. உதாரணமாக, பால்டிமோரில் நடந்த மாநாட்டுக்குத் தன்னார்வலராகப் பணிசெய்ய ஆரம்பித்த அன்றே (மாநாட்டுக்கு ஏழு மாதங்களுக்கு முன்பு) அனைவரும் குறைந்தபட்சம் ஐநூறு அமெரிக்க டாலர்களாவது நன்கொடை அளித்தனர். மேலும் பலர் ஆயிரத்துக்கு மேலும், ஒரு சிலர் ஐயாயிரத்துக்கு மேலும் நன்கொடை அளித்து வேலையும் செய்து வருகின்றனர். அரங்கத்தை அலங்கரிப்பதில் இருந்து, உணவு பரிமாறுவது, சுத்தம் செய்வது, இந்தியாவிலிருந்து வந்திருக்கும் விருந்தினர்களை விமான நிலையத்துக்குச் சென்று காரில் அழைத்து வருவது வரை அனைத்து வேலைகளையும் என்ன படித்திருந்தாலும், எந்த பதவியிலிருந்தாலும் நாமே செய்ய வேண்டும்.

எனவே அமெரிக்க மண்ணில் இவ்வளவு பெரிய மாநாட்டை ஏற்பாடு செய்வது என்பது அவ்வளவு எளிதல்ல. மாநாட்டில் எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும், அதன் உள்ளடக்கத்தில் சில கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் மாநாட்டுக்காக ஒருங்கிணைப்பாளர்கள் ஆற்றி வரும் தொண்டை நெஞ்சாரப் பாராட்ட வேண்டும்.

அவ்வளவு சிரமப்பட்டு இப்படி ஒரு பெரிய மாநாட்டை ஒழுங்கு செய்வதில் யாருக்கு என்ன இலாபம்? இது அடிக்கடிப் பலரால் கேட்கப் படும் கேள்வி. இந்தக் கேள்விக்கும், தமிழ் சங்கங்களை ஏன் இன்னும் நடத்தி வருகிறோம் என்ற கேள்விக்கும் விடையை அடுத்த பாகத்தில் ஆராய்வோம்.

Saturday, June 2, 2007

நடிகர்கள் சிவகுமாரும், கார்த்தி சிவகுமாரும் திருவிழாவில்!

"ரோசாப்பூ ரவிக்கைக்காரி" புகழ் நடிகர் சிவகுமாரும், "பருத்தி வீரன்" கார்த்தி் சிவகுமாரும் இவ்வாண்டு பெட்னா திருவிழாவின் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கிறார்கள்! இயக்குனர் சேரனுக்குப் பதிலாக இவர்களும், பட்டிமன்றக் கலைஞர்களில் திண்டுக்கல் லியோனிக்குப் பதில் திண்டுக்கல் முல்லை நடவரசு ஆகியோரும் வருகை தருகிறார்கள். தமிழ்ச் சூழலில் கலைஞர்களைப் பதிவு செய்வதும், அவர்களை நிகழ்ச்சிக்குக் குறித்த நேரத்தில் கொண்டு வருவதும் பெரும்பாடு என்பதை அனைவரும் புரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நன்றி!

கலந்துகொள்ளும் மற்ற கலைஞர்கள் குழுவிலும், தமிழறிஞர் குழுவிலும் மாற்றங்கள் ஏதுமில்லை.

நீங்கள் உடனே செய்ய வேண்டியவை:
  • திருவிழாவுக்கு முன்பதிவு செய்தல்
  • உங்கள் படைப்புகளை பெட்னா மலருக்கு அனுப்புதல்
  • உங்கள் தொழிலை பெட்னாவில் விளம்பரம் செய்தல்
  • உங்கள் வட்டாரத் தமிழ்ச்சங்கத்துடன் தொடர்புகொண்டு நிகழ்ச்சிகளை வழங்க, நடத்த உதவுதல்.
புதிய நிகழ்ச்சி நிரல் கீழே (பெரிதாகப் பார்க்க, படத்தின் மேல் சொடுக்குக!):விபரங்களுக்கு: www.fetna.org
தொடர்புக்கு: fetna.malar@gmail.com

வருக! அன்புடன் சந்திக்கக் காத்திருக்கிறோம்!

Thursday, May 31, 2007

பெட்னாவில் பிள்ளைத் தமிழுக்குப் பரிசு!

இவ்வாண்டு பெட்னா திருவிழாவில் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன. அவற்றுள் கீழ்க்கண்ட வினா-விடை, தமிழ்த் தேனீ போட்டிகளும் அடங்கும். உங்கள் பிள்ளைகளும் (அல்லது நீங்களும்) கீழே குறிப்பிடப்பட்ட வயது வரம்பின்படி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம், பரிசைத் தட்டிச் செல்லலாம்! வினா-விடைக்கான கேள்விகள் கீழ்க்கண்டவற்றிலிருந்துதான் கேட்கப்படும். கலந்துகொள்ள வாருங்கள் என அன்புடன் அழைக்கிறோம்! கேள்விகளுக்கு எம்மை fetna.malar@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளலாம். நன்றி!









உங்க எழுத்து பெட்னா மலரில் வரணுமா?


வலைப்பதிவர்களுக்கு வணக்கம்!
ஒவ்வொரு ஆண்டுவிழாவின்போதும் பெட்னா ஒரு மலரை வெளியிடுகிறது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து புகழ்பெற்ற எழுத்தாளர்களும், அக, அயலக நண்பர்களும் எழுதுவது வழக்கம். இவ்வாண்டு முதன்முறையாக வலைப்பதிவர்களாகிய உங்களது படைப்புக்களையும் மலரில் இணைக்க விரும்புகிறோம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது அதிகமில்லை. கீழ்க்கண்ட மையக் கருத்தினை ஒட்டிய உங்கள் படைப்புகளை எங்களுக்கு அனுப்பி வைக்கவும், அவ்வளவுதான்!

திருவிழாவின் மையக்கருத்து: தமிழால் இணைவோம்! தமிழராய் வெல்வோம்!

படைப்புகளுக்கான உத்தேசமான கருப்பொருட்கள்:
தமிழ் மொழி, சமூகம், பண்பாடு, இன மேம்பாடு மற்றும் அதற்கான திட்டங்கள், பன்னாட்டுத் தமிழர்களின் வாழ்க்கை முறை, மொழிப்பற்று, பேச்சு வழக்கு, பழந்தமிழ்க் கலைகள், அக்கலைகளில் பயிற்சி மற்றும் அதற்கான வளர்ச்சித் திட்டங்கள், கலைச் சின்னங்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு, இளைய தலைமுறையினரின் மொழி இன ஈடுபாடு மற்றும் அதற்கான திட்டங்கள், இன்றைய கணினி அறிவியல் உலகில் தமிழ் மொழியின் நிலை மற்றும் அதற்கான வளர்ச்சித் திட்டங்கள் முதலானவை.

படைப்புகளின் வடிவம்: கதை, கட்டுரை, கவிதை (நிறைய கவிதைகள் வருவதனால் எல்லாவற்றையும் சேர்த்துக்கொள்ள இயலாது!)உரையாடல், நேர்காணல், துணுக்கு ஆகியன. தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு இவற்றை வெளிப்படுத்தும் சீர்மிகு ஓவியங்களும் மற்றும் புதிர்கள், விளையாட்டுக்கள் போன்றவையும் வரவேற்கப்படுகின்றன.

பக்க அளவு: A-4 தாளில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல்

கடைசி நாள்:
தயவு செய்து ஜூன் 6 ஆம் தேதிக்குள் எங்களுக்கு அனுப்பவும்!

அனுப்ப வேண்டிய முகவரி:
fetna.malar@gmail.com

உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் இங்கே பின்னூட்டத்தில் கேட்கலாம் அல்லது மின்னஞ்சலிலும் கேட்கலாம்.

விரைந்து உங்களது படைப்புகளை எங்களுக்கு அனுப்புங்கள்! நன்றி!

Tuesday, May 29, 2007

பெட்னா திருவிழாவில் நீங்கள் எப்படிப் பங்குபெறலாம்?

பெட்னா திருவிழாவில் நீங்கள் பலவிதமான வழிகளில் ஈடுபடலாம். உதாரணத்துக்குச் சிலவற்றைக் கீழே தருகிறோம்:

1. விருந்தினராக வந்து கலந்துகொண்டு, நல்ல உணவு, உறையுள் வசதியுடன், அனைத்துக் கலைகளையும் கண்டு களிக்கலாம். இதற்கான அனைத்துச் சிறப்பு ஏற்பாடுகளும் ராலேயில் செய்யப் பட்டுள்ளன.

2. நீங்கள் தொழில் புரிபவராக இருந்தால் உங்கள் நிறுவனத்தினைப் பற்றி விழாவில் விளம்பரம் செய்யலாம். ஏதேனும் ஒரு நிகழ்ச்சியை வழங்குபவராகவோ, அல்லது பொதுவான கொடையாளராகவோ நீங்கள் இருக்கலாம். உங்களது நிறுவனத்தின் விளம்பரத்தைக் குறைந்த கட்டணத்தில் அதிகமான தமிழர்களைச் சென்றடையுமாறு, "விழா மலரில்" வெளியிடலாம்.

3. நீங்கள் கட்டுரை, கவிதை, நாடகம், பத்தி (column) என்று எழுதித் தள்ளும் திறமை கொண்டவராக இருந்தால், உங்கள் எழுத்துத் திறனை விழா மலரில் காட்டலாம். அதற்கு ஜூன் 6க்குள் உங்கள் படைப்புக்களை அனுப்ப வேண்டும்.

4. கலைத்திறன் மிக்கவரா நீங்கள்? ஆமென்றால் உடனடியாக உங்கள் பகுதி தமிழ்ச்சங்கத்தோடு அல்லது எங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் ஆற்றலை மேடையேற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டு விழா ஒரு நல்ல இடம்.

5. "பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை" என்பது வள்ளுவரின் வாக்கு. அதே போல், பொருளில்லாமல் எந்த விழாவும் நடப்பதில்லை. இந்தத் தமிழ்விழா பொலிவுற உங்கள் வள்ளண்மையைக் காட்ட ஒரு வாய்ப்பும் இருக்கிறது. நீங்கள் வள்ளல், அல்லது கொடைவள்ளல் போன்ற தகுதியுடன் விழாவில் முக்கிய உறுப்பினராகக் கலந்துகொள்ளலாம். இதன் மூலம் குடும்பத்துக்கான முன்னிருக்கை நுழைவுச் சீட்டுகள், கலைஞர்களுடன் விருந்து போன்ற சிறப்புகளைப் பெறலாம்.

உங்களை வரவேற்கக் காத்திருக்கிறோம்!
விபரங்களுக்கு: www.fetna.org

Monday, May 28, 2007

திருவிழா ஏன்?

ஒவ்வொரு மனிதருக்கும் மிகவும் முக்கியமாகக் கருதப்படுவது தாய்மொழி. உலகிலுள்ள சுமார் ஆறாயிரம் மொழிகளுள் தொன்மையான மொழிகளுள் ஒன்றாகக் கருதப்படுவது நம் தமிழ் மொழி. ஐ.நா . சபையின் மொழி ஆராய்ச்சியின்படி, பெரும்பாலான மொழிகள் வேகமாக அழிவடைந்து வருகின்றன. ஆகவே ஐ.நா, ஒவ்வொரு தாய்மொழிக் குழுவையும், தங்கள் தாய்மொழியைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியதை வலியுறுத்துகிறது.

இன்னொரு புறம் அண்மைய அறிவியல் ஆய்வுகள் மொழியைப் பற்றி ஒரு முக்கியமான செய்தியை நமக்குச் சொல்கின்றன. நமக்குத் தெரியும், அல்சைமர் நோய் (Alzheimer's disease) நமது மூளையைத் திறனிழக்கச் செய்யும் ஒரு நோய் என்பதும், அது பலரையும் தாக்கக் கூடியது என்றும். இவ்வியாதியை ஆராய்ந்த அறிஞர்கள் சொல்வது என்னவென்றால், ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைச் சரளமாகப் பேசக் கூடியவர்களுக்கு அல்சைமர் நோய் வருவதில்லை! ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் உண்மைதான் இது. மேலும் நாம் மருத்துவர்களிடம் நம் பிள்ளைகளைக் காட்டச் செல்லும்போது அவர்கள் மொழியைப் பற்றிச் சொல்லும் முக்கியமான அறிவுரை, "உங்கள் தாய்மொழியிலேயே வீட்டில் பேசுங்கள், உங்கள் பிள்ளைக்கு உங்கள் மொழியைக் கற்றுக் கொடுங்கள்" என்பது. சீன, பிரெஞ்சு, ஜப்பானிய, ஹிஸ்பானிய மக்களைப் பார்த்தால் அவர்கள் தம் தாய்மொழியின் மீது அளவற்ற பற்றுள்ளவர்களாகவும், அதனைப் பேசுவதிலும் கற்றுக் கொள்வதிலும் பெருமை கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். நமக்கும் அந்த மாதிரி பெருமைப்பட்டுக் கற்றுக் கொள்ளும் பக்குவம் வர வேண்டும். அதற்குப் பெற்றோர்கள் உழைக்க வேண்டும்.

பெற்றோர்களுக்குத் தமிழுணர்வு மேம்படுவதற்கு இன்றைய இணைய உலகில் எவ்வளவோ உதவிகள் கிடைக்கின்றன. பலரோடு கருத்தாடல்களை மேம்படுத்திக் கொள்வதும், கலைகளைக் கண்ணுறுவதும், பிள்ளைகளுக்குக் காட்டுவதும் நமது கற்றலையும், பிள்ளைகளது கற்றலையும் மேம்படுத்தும். நாம் அனுபவித்திராத தமிழ் உலகின் கதவுகளை அவர்கள் என்றேனும் திறக்கக் கூடும். இவற்றுக்கு ஒரு வாய்ப்பாக அமைவதுதான் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு விழா. கடந்த சில ஆண்டுகளாக, பங்குபெறும் குழந்தைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருவது நமக்குப் பெரும் நம்பிக்கையை ஊட்டுகிறது. வரும் காலங்களில் குழந்தைகளும் பெரியோர்களும் நன்கு கலந்துறவாடி, தமிழையும், நம் தமிழறிவையும் தொடர்ந்து வளரச் செய்ய வேண்டுவதே இவ்விழாக்களின் நோக்கம்.

இவ்வாண்டின் ஃபெட்னா திருவிழாவைக் குறித்த விபரங்களுக்கு: www.fetna.org

Friday, May 25, 2007

பெட்னாவில் விளம்பரம் செய்யுங்கள்!


வணிகம் புரியும் தமிழரா நீங்கள்? வட அமெரிக்கத் தமிழர்களிடையே உங்களது வணிகத்தை அறிமுகப்படுத்தவும், மேம்படுத்தவும் பெட்னா திருவிழாவும், பெட்னாவின் மலரும் நல்ல வாய்ப்புக்கள். ஆயிரக்கணக்கான தமிழர்கள்
திரளும் இடத்தில் உங்கள் வணிகம் புலப்பட வேண்டுமா? எங்களைத் தொடர்புகொள்ளுங்கள். தொடர்புகளுக்கு இங்கே சொடுக்கவும்!

விளம்பரதாரர்களுக்கு தமிழ் நெஞ்சங்களின் அன்பான நன்றிகள்!

முன் பதிவுக்குச் சிறப்புத் தள்ளுபடி!

ஜூலை 4ம் தேதியை ஒட்டிய வாரக் கடைசியானது அமெரிக்க விடுதலை நாளையொட்டி நீண்ட விடுமுறையாக இருக்கும். இதன்போதே ஃபெட்னா திருவிழா ஏற்பாடாகிறது. இவ்வாண்டு கொண்டாட்டத்தைப் பற்றிச் சில குறிப்புகள்:

எங்கே: Progress Energy Center for the Performing Arts, Raleigh, North Carolina

எப்போது: ஜூலை 7, 8 மற்றும் 9, 2007.

முக்கியமான விருந்தினர்கள்:
நீங்கள், பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், இயக்குனர் சேரன், இறையன்பு, இ.ஆ.ப, திண்டுக்கல் லியோனி, இசையமைப்பாளர் பரத்வாஜ், முனைவர் இளங்குமரனார், முனைவர் மருதநாயகம், நித்யஸ்ரீ மகாதேவன் இன்னும் பலர்.

முக்கியமான நிகழ்ச்சிகள்: சிறப்புக் கவியரங்கம், பட்டிமன்றம், இசையரங்கம், லக்ஷ்மண் சுருதியின் இன்னிசை மழை, இலக்கியக் கருத்தரங்கம், பாப் ஷாலினியின் திரையிசைக் கொண்டாட்டம், தமிழ்ச் சங்கங்களின் நிகழ்ச்சிகள், இன்னும் பல.

உடனே பதிவு செய்துகொள்ளுங்கள். முன்னதாகச் செய்யப்படும் பதிவுகளுக்கும், குழுப் பதிவுகளுக்கும் சிறப்புத் தள்ளுபடி உண்டு. அரிய வாய்ப்பு, விரைந்து வாருங்கள். தமிழின் செம்மையையும், தமிழரின் செழுமையையும் கொண்டாட இணையுங்கள்!

விபரங்களுக்கு: ஃபெட்னாவின் இணையத் தளம்.


Thursday, May 24, 2007

பெட்னா திருவிழாவைப் பற்றி

பெட்னா என்பது வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (Federation of Tamil Sangams of North America, FeTNA). இந்த அமைப்பு கடந்த சுமார் இருபது ஆண்டுகளாக, வட அமெரிக்காவிலிருக்கும் தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து, ஆண்டுதோறும் ஒரு பெரும் தமிழர் திருவிழாவினை நடத்தி வருகின்றது. இதன்போது தமிழகம் உள்ளிட்ட உலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழறிஞர்களும், கலைஞர்களும் வருகை தந்து நம் கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தளிப்பர். அமெரிக்கா மற்றும் கனடா நாட்டுத் தமிழ்ச் சங்கக் கலைஞர்களுக்கும் தம் திறமையை வெளிக்கொணர இதுவொரு நல்ல வாய்ப்பு.

இந்த ஆண்டு ஜூலை மாதம் 7 முதல் 9ஆம் தேதி வரை இத் திருவிழா வட கரோலைனாவின் ராலே மாநகரில் நடக்கவுள்ளது. இதனைக் குறித்த மேல் விபரங்கள் இந்த வலைப்பதிவில் வெளியிடப்படும். உங்கள் அனைவரையும் ராலேயில் சந்திக்கக் காத்திருக்கிறோம்!