Sunday, December 21, 2014

பேரவையின் தமிழ் விழா ஒரு அறிமுகம்



வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை என்பது  வட அமெரிக்காவில் உள்ள பற்பல தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகும்.  ஒவ்வொரு ஆண்டும் இந்த பேரவையின் ஆண்டு விழாவை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு தமிழ்ச் சங்கம் பொறுப்பேற்று தங்களது நகரத்தில் நடத்தி வருகிறது. உலகெங்கிலுமிருந்து இயல், இசை, நாடகம் மற்றும் சினிமா துறையை சார்ந்த பல்வேறு கலைஞர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு முத்தமிழில் இனிமையான விருந்து படைப்பர். வட அமெரிக்காவின் பல பகுதியிலிருந்தும் தமிழர்கள்  இந்த நிகழ்ச்சியை கண்டு களிப்பதோடு , தமிழ்ச் சொந்தங்களோடு உறவாடவும் ஒரு வாய்ப்பாகவும் கருதி தொடர்ந்து வரும் வண்ணம் உள்ளனர். பேரவையின் வரலாற்றில் முதல் முதலாக பேரவையின்  ஆண்டு  விழாவை நமது வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம், தமிழ்நாடு அறகட்டளையுடன் சேர்ந்து மேற்கு கடற்கரையோரம்  சான் ஓசே நகரில்  2015ம் ஆண்டு ஜூலை மாதம் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை   நடத்த முடிவு செய்து அதற்கான பணிகள் தன்னார்வ தொண்டர்களால் முன்னெடுக்கப்பட்டு நடந்து வருகிறது.

தமிழ்நாடு அறகட்டளை  (TNF -Tamilnadu Foundation) மற்றும்  அமெரிக்க தமிழர் மருத்துவர் அமைப்பு (ATMA - American Tamil medical Association) ஆகியோரும் இவ்விழாவினை கலந்து சிறப்பிக்க  முன்வந்துள்ளனர்.இந்த விழாவில் கிடைக்கும் லாபத்தின் ஒரு முக்கிய பகுதி நமது வளைகுடா பகுதி தமிழ் மன்றத்தின் தமிழ்ப் பண்பாட்டு மையம் தொடங்க  பயன்பட போகிறது என்பதும் குறிப்பிட தக்கது.

விழாவின்  அமைப்பு

இரண்டு நாட்கள் முழுமையாகவும் முதல் நாள் மற்றும் கடைசி நாள் பகுதி பொழுதிலும் இந்த விழா நடைபெறும். ஜூலை மாதம் 2ம் தேதி மாலை  உலகெங்கிலுமிருந்து வந்திருக்கும்  சிறப்பு விருந்தினருடன் இரவு சிறப்பு விருந்து  மற்றும் அளவளாவல் நடைபெறும். இந்த விருந்தில் விழாவிற்கு நன்கொடை அளித்த அனைவரும் இலவசமாக  கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ள பிறர் சிறப்பு கட்டணம் கொடுத்து அனுமதி சீட்டு வாங்கி கொள்ளலாம். ஜூலை மாதம் 3 மற்றும் 4 தேதிகளில் சான் ஒசே நகரிலுள்ள சிவிக் அரங்கில் காலை முதல்  இரவு வரை  முழுமையாக முதன்மை மற்றும் இணை அரங்குகளில் அனைத்து தரப்பு மக்களின் ரசனைகளையும் நிறைவுச் செய்யும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஜூலை 5 ம் தேதி சிறப்பு விருந்தினர்களுடன் இலக்கியச் சந்திப்பு நடைபெறும். இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம். தமிழகத்திலிருந்து வந்திருந்த பெரும்பான்மையான கலஞர்களும், அறிஞர்களும் தமிழுக்காக இலக்கியத் தரம் மற்றும் மனதைக் கவரும் நிகழ்ச்சிகளை கொண்டு நடைபெறும் இது போன்ற நிகழ்ச்சி உலகில், ஏன் தமிழத்தில் கூட நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது,

விழாவின் சிறப்பு

பொதுவாக அமெரிக்காவில் நடக்கும் தமிழ் நிகழ்ச்சிகள் ஒரு சில மணி நேரங்கள் நடந்து   இலக்கியம், இசை, சினிமா என எதாவது ஒரு விருப்பத்தை நிறைவுச் செய்வதாகவே இருக்கும். அவ்விழாவிற்கான சிறப்பு விருந்தினரும் ஒரு சிலரே இருப்பர். குடும்பத்தோடு விழாவிற்கு செல்லும் போது அந்த நிகழ்ச்சியும் குடும்பத்தில் ஒரு சிலரின் விருப்பத்தை மட்டும்  நிறைவுச் செய்வதால் அந்த நிகழ்ச்சியில் விருப்பம் இல்லாதவர்கள் மற்றவர்களின் விருப்பத்திற்காகச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால் பேரவை  விழா என்பது தமிழ் இலக்கியம், தமிழ் இசை,  கர்நாடக (தமிழ்) இசை, ஆன்மீகம்,தொல் தமிழ் இசை (பறை போன்றவை), பரத நாட்டியம், தொல் தமிழ் கலைகள், நவீன நாடகம் மற்றும் தொல் தமிழ் நாடகம் (கூத்து,நாட்டிய நாடகம் போன்றவை), தமிழ் ஆர்வலர் மற்றும் உணர்வாளர்   சார்ந்த நிகழ்ச்சி, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான நிகழ்ச்சி, தொழில் முனைவோர்களுக்கான நிகழ்ச்சி  , திரைப்பட ஆர்வலர்களுக்கான நிகழ்ச்சி என அனைத்து தரப்பு மக்களின் விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் விதத்தில் சுமார் 80 மணி நேரத்திற்கும் மேலான நிகழ்ச்சி நடைபெறும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் முக்கிய மற்றும் பல இணை அரங்குகளில்  ஒரே நேரத்தில் இணையாக நடந்து கொண்டிருப்பதால் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சியை தேர்வு செய்து  விருப்பமான நிகழ்ச்சியை மட்டும் கண்டுகளிக்களாம். பெரும்பான்மையான நிகழ்ச்சிகள் ஒரே அரங்கில் வெவ்வேறு அறைகளில் நடைபெறுவதால் ஒரே குடும்பம் அல்லது குழுவை சேர்ந்தவரக்ள் தங்களுக்கு பிடித்து அரங்குகளில் என்று நிகழ்ச்சியை பார்த்து விட்டு பிறகு எளிதில் ஒன்று கூடி விடலாம்.தமிழகம் மற்றும் உலகெங்கிலிருந்து தமிழ் இலக்கியம்  மற்றும் திரைபடத்துறை  சார்த்த பல்வேறு பிரபலங்கள்  மிக பெரிய அளவில் வந்து கலந்து கொள்வார்கள்.

கடந்த விழாக்களில் கலந்து கொண்ட சிலர்: நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், நாசர், விக்ரம், கார்த்தி, சிவகுமார், மனோரமா; இசையமைப்பாளர்கள் இளையராஜா, பரத்வாஜ், பாடகர்கள், TM சௌந்திரராஜன், சுசீலா, வாணி ஜெயராம், SP பாலசுப்ரமணியம், சங்கர் மகாதேவன், கிரிஷ், சின்மன்யி போன்ற பலர்;  பாடலாசிரியர்கள் தாமரை, குட்டிரேவதி, வைரமுத்து, அறிஞர் பெருமக்கள் பிரபஞ்சன், இளங்குமரனார் அய்யா; 2003 விழாவைத் துவக்கி வைத்தவர் இந்திய குடியரசு தலைவர் மேதகு முனைவர் அப்துல் கலாம் அவர்கள். அரசியல்வாதிகளான அய்யா நல்லகண்ணு, மகேந்திரன், இயக்குநர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான், சீமான், மேலும் பலர் பேரவை விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

அது மட்டுமன்றி புலம் பெயர்ந்து அமெரிக்காவில் குடியேறி அறிவியல்,தொழில் நுட்பம், தொழில் மற்றும்  கலை துறைகளில் சாதனை படைத்த தமிழர்களை சிறப்பிப்பதோடு அவர்கள் மூலம் இளம் தலைமுறையினருக்கு சாதனைகள் செய்ய ஊக்க படுத்தவும் படுகிறது. உலகில் பெரும்பான்மையான  மாபெரும் தொழில் நுட்ப நிறுவனங்களை விதையாக இடபட்டு ஆலமரமாக வளர்ந்திருக்கும் சிலிக்கன் பள்ளத்தாக்கில் நடைபெறும் இந்த விழாவில் தொழில் முனைவோர்களுக்காவும் , தொடக்க நிலை தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்களுக்கும், உயர்நிலை பள்ளி மற்றும் கல்லூரி இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ஊக்குவிப்பதோடு அதற்கு தேவையான தகவல்களை தரவும் , முன்னனி தொழில் நிறுவனங்களின் உயரதிகாரிகள் ,ஸ்டான்போர்டு போன்ற பலகலை கழக பேராசிரியர்கள், முதலீட்டாளர்கள், வெற்றிகரமாக தொழில் தொடங்கி நடத்தி வருபவரகள்  என அனைத்து தரப்பினர்களையும் கொண்டு ஒரு நாள் முழுக்க நிகழ்ச்சி நடத்துவதோடு Busines Networking செய்யவும் திட்டமிடபட்டுள்ளது. நீங்கள் தொழில் முனைவோராகவோ  , துவக்க நிலை தொழில் தொடங்குவோராகவோ, அதை விட முக்கியமாக இடைநிலை/உயர் பள்ளி அல்லது பல்கலைகழகம் படிக்கும் குழந்தைகளின் பெற்றோராக இருந்தால், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு  நிச்சயமாக இந்த நிகழ்ச்சியில்   கலந்து கொள்ளவேண்டும்.

பொதுவாக வளைகுடா பகுதியில் ஒருசில மணிநேரம்  நடைபெறும் மெல்லிசை நிகழ்ச்சியை காண மிக பெரிய அளவில் பொருள் செலவு செய்து செல்கிறோம். இந்த பேரவை விழாவிலோ 80 மணி நேரத்துக்கும் அதிகமான நிகழ்ச்சிகளை கொண்டு அனைத்து தரப்பு மக்களையும் திருப்தி செய்வதோடு மட்டும்  அல்லாமல் ஜூலை மாதம் 4ம் தேதி மாலையிலிருந்து நள்ளிரவு வரை தமிழகத்திலிருந்து வரும் பிரபலமான பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களை கொண்டு மாபெரும் மெல்லிசை விருந்தும் படைக்க பட உள்ளது. விழாவிற்கான டிக்கெட்டின் விலையிலேயே இந்த மெல்லிசை நிகழ்ச்சிக்கான அனுமதியும் இலவசம். இத்தனை சிறப்பான நிகழ்ச்சிகளையும் குறைந்த விலையிலேயே காண உடனே ஜூலை மாதம்  3 மற்றும் 4 ம் தேதியை உங்கள் காலண்டரில் இப்போதே குறித்து வைத்து கொள்ளுங்கள்.

இவ்விழாவிற்கான டிக்கெட்டுகளை வாங்க, இந்த விழா பற்றிய குறிப்புகள் மற்றும் கலந்து கொள்ளவுள்ள பிரபலங்கள் பெயர்களை அறியவும் அவ்வப்போது www.fetna2015.org  என்ற வலை தளத்துக்கும் என்ற  www.fetna2015.blogspot.com வலைமனையிற்கும் அடிக்கடி வருகை தாருங்கள்.

இவ்வளவு பெரிய விழாவை நடத்துவதற்கு  டிக்கெட் வாங்குவதற்கு பதில் சிறிது அதிகம் பணம் கொடுத்து நன்கொடையாளராக இருந்து விழாவை வெற்றிகரமாக நடத்த  உதவி செய்வதோடு நன்கொடையாளர்களுக்கான சிறப்பு  சலுகையான பிரபலங்களோடான இரவு விருந்து போன்ற சலுகைகளையும் அனுபவிக்க தவறாதீர்கள்.

இந்த ஒரு அரிய வாய்ப்பு இது வரை மேற்கு கடற்கரையில் வாழும் தமிழர்களுக்கு கிட்டவில்லை. எனவே இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, உங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் இணைந்து இவ்விழாவை வெற்றியடைய அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.