Wednesday, June 25, 2008

பேரவைத் திருவிழாவில் கலைமாமணி நர்த்தகி நடராஜ்


தமிழர்களின் பழம்பெரும் நாட்டிய முறையாகிய சதிர் (பரத நாட்டியம்) நமது விழாக்கள் அனைத்துக்கும் அழகு சேர்ப்பவை. வட அமெரிக்காவில் இருக்கும் தமிழ்ச் சங்கங்களின் கலை நிகழ்ச்சிகளில் சதிராட்டம் இல்லாத ஒரு நிகழ்வைக் காண்பது அரிது எனும் அளவுக்கு இங்கிருக்கும் மக்களிடையே இந்நடனம் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. வளர்ந்து வரும் தலைமுறையினர் இந்நடனத்தை வாழ்வின் பல்வேறு உணர்வுகளையும் எடுத்துக் காட்டுவதற்குப் பயன்படுத்துவது போற்றத் தக்கது. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் நிகழ்வுகளில் கலையம்சத்துடன், இலக்கியமும், சமூக நோக்கும் சேர்ந்து அழகு செய்யும் சதிராட்ட நிகழ்வுகளைச் செறிவாக இரசிக்கலாம்.

இவ்வகையில் இவ்வாண்டின் திருவிழாவில் பல்வேறு நடன நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிடத் தகுந்தது தமிழகத்திலிருந்து வருகை தரவிருக்கும் கலைமாமணி நர்த்தகி நடராஜ் அவர்களின் "சிலம்பும் தமிழும்" நாட்டிய நிகழ்ச்சி. இந்திய அரசின் வெளியுறவுத் துறையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர் எனவும், தமிழ்நாட்டு அரசினால் கலைமாமணி எனவும், திருமுறை நாட்டியச் சுடர், நற்றமிழ் நடனமணி எனவும் புகழ் பெற்றிருக்கும் நர்த்தகி அவர்கள் மூன்றாவது முறையாகப் பேரவையின் நிகழ்வுக்காக வருகை தருவது குறிப்பிடத் தக்கது. மேலும் இவர் வாய்ப்பு கிடைக்கும்போது அமெரிக்காவில் தங்கி, பல இடங்களில் நாட்டியப் பயிற்சிகளையும் அளித்து வருகிறார்.

தஞ்சையில் 17ஆம் நூற்றாண்டிலிருந்து புகழ் பெற்று விளங்கும் "தஞ்சை நால்வர்" வழியில் வந்த பெருமகனார் கே.பி. கிட்டப்பா பிள்ளை அவர்களிடம் சீடராகச் சேர்ந்து, சுமார் 15 வருடங்கள் அவரிடமிருந்து நடன நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார். மாநில மற்றும் நடுவணரசிடமிருந்து பல விருதுகளைப் பெற்றிருக்கும் நர்த்தகி அவர்கள் தன்னம்பிக்கைக்கும், தளரா உழைப்புக்கும் பெண்டிர், திருநங்கையர், ஆடவர் ஆகிய எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டு. திருநங்கை நர்த்தகி நடராஜ் அவர்களது வலைத் தளத்தினைக் காண இங்கே சொடுக்கவும்.

இவரது ஆடல், ஓர்லாண்டோவின் புகழ்பெற்ற பாப் கார் அரங்கின் அழகில் நிகழவிருக்கிறது. வந்து கண்டு களியுங்கள்! விபரங்களுக்கு பேரவையின் இணையத் தளத்தைப் பார்க்கவும்.

No comments: