Monday, May 28, 2007

திருவிழா ஏன்?

ஒவ்வொரு மனிதருக்கும் மிகவும் முக்கியமாகக் கருதப்படுவது தாய்மொழி. உலகிலுள்ள சுமார் ஆறாயிரம் மொழிகளுள் தொன்மையான மொழிகளுள் ஒன்றாகக் கருதப்படுவது நம் தமிழ் மொழி. ஐ.நா . சபையின் மொழி ஆராய்ச்சியின்படி, பெரும்பாலான மொழிகள் வேகமாக அழிவடைந்து வருகின்றன. ஆகவே ஐ.நா, ஒவ்வொரு தாய்மொழிக் குழுவையும், தங்கள் தாய்மொழியைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியதை வலியுறுத்துகிறது.

இன்னொரு புறம் அண்மைய அறிவியல் ஆய்வுகள் மொழியைப் பற்றி ஒரு முக்கியமான செய்தியை நமக்குச் சொல்கின்றன. நமக்குத் தெரியும், அல்சைமர் நோய் (Alzheimer's disease) நமது மூளையைத் திறனிழக்கச் செய்யும் ஒரு நோய் என்பதும், அது பலரையும் தாக்கக் கூடியது என்றும். இவ்வியாதியை ஆராய்ந்த அறிஞர்கள் சொல்வது என்னவென்றால், ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைச் சரளமாகப் பேசக் கூடியவர்களுக்கு அல்சைமர் நோய் வருவதில்லை! ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் உண்மைதான் இது. மேலும் நாம் மருத்துவர்களிடம் நம் பிள்ளைகளைக் காட்டச் செல்லும்போது அவர்கள் மொழியைப் பற்றிச் சொல்லும் முக்கியமான அறிவுரை, "உங்கள் தாய்மொழியிலேயே வீட்டில் பேசுங்கள், உங்கள் பிள்ளைக்கு உங்கள் மொழியைக் கற்றுக் கொடுங்கள்" என்பது. சீன, பிரெஞ்சு, ஜப்பானிய, ஹிஸ்பானிய மக்களைப் பார்த்தால் அவர்கள் தம் தாய்மொழியின் மீது அளவற்ற பற்றுள்ளவர்களாகவும், அதனைப் பேசுவதிலும் கற்றுக் கொள்வதிலும் பெருமை கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். நமக்கும் அந்த மாதிரி பெருமைப்பட்டுக் கற்றுக் கொள்ளும் பக்குவம் வர வேண்டும். அதற்குப் பெற்றோர்கள் உழைக்க வேண்டும்.

பெற்றோர்களுக்குத் தமிழுணர்வு மேம்படுவதற்கு இன்றைய இணைய உலகில் எவ்வளவோ உதவிகள் கிடைக்கின்றன. பலரோடு கருத்தாடல்களை மேம்படுத்திக் கொள்வதும், கலைகளைக் கண்ணுறுவதும், பிள்ளைகளுக்குக் காட்டுவதும் நமது கற்றலையும், பிள்ளைகளது கற்றலையும் மேம்படுத்தும். நாம் அனுபவித்திராத தமிழ் உலகின் கதவுகளை அவர்கள் என்றேனும் திறக்கக் கூடும். இவற்றுக்கு ஒரு வாய்ப்பாக அமைவதுதான் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு விழா. கடந்த சில ஆண்டுகளாக, பங்குபெறும் குழந்தைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருவது நமக்குப் பெரும் நம்பிக்கையை ஊட்டுகிறது. வரும் காலங்களில் குழந்தைகளும் பெரியோர்களும் நன்கு கலந்துறவாடி, தமிழையும், நம் தமிழறிவையும் தொடர்ந்து வளரச் செய்ய வேண்டுவதே இவ்விழாக்களின் நோக்கம்.

இவ்வாண்டின் ஃபெட்னா திருவிழாவைக் குறித்த விபரங்களுக்கு: www.fetna.org