Sunday, June 10, 2012

வெள்ளி விழாக் காணும் பேரவை


வண்ணப் பூவும் மணமும் போலே, மகர யாழும் இசையும் போலே, கண்ணும் ஒளியும் போலே, நமது கன்னல் தமிழும் நாமும் அன்றோ? உடலோடு உயிர் ஒன்றியிருப்பது போலே, நம் மனமும் தமிழும் இரண்டறக் கலந்து வாழ்கிறது என்பதுதானே மெய்? தமிழ் என்றால், மொழியென மட்டுமே கணக்கில் கொள்ளலாகாது.மொழியூட்டும் அறிவு; மொழி கொடுக்கும் கலை; மொழி வகுக்கும் தொன்மை; மொழி படைக்கும் பண்பாடு; மொழி வளர்க்கும் சிந்தனை. இப்படியான கூறுகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டதுதான் தாய்மொழி என்பதாகும். அதனடிப்படையில், தமிழுக்காகவும் தமிழனுக்காகவும் கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாய்க் கடமையாற்றிச் செம்மாந்து நிற்கும் ஒரு கட்டமைப்புதான் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை என்பதாகும்.

ஆரிசுபர்க், வாசிங்டன் வட்டாரம், டெலாவேர், நியூயார்க், இலங்கைத் தமிழ்ச்சங்கம் என ஐந்து சங்கங்கள் இணைந்து, “ஆங்காங்கே இருந்த தமிழர்களை எல்லாம் ஒரு இடத்தில், ஒரே கூட்டமாகக் கொண்டு வந்து சேர்ப்பதுதான் அன்றைய தேவையாக எங்களுக்கு இருந்தது.” என்கிறார் வட அமெரிக்க கூட்டுத் தமிழ்ச்சங்கத்தை தோற்றுவித்தவர்களுள் ஒருவரும், முதல் தலைவருமான முனைவர்.முத்தரசன் அவர்கள்,அப்படிக் கூட்டிய கூட்டத்தில், வந்திருப்போருக்கு தமிழ்க்கலையை ஊட்டுவதும், தமிழ்க்கல்வியை வலியுறுத்துவதும், பண்பாட்டைப் பேணுவதுமே குறிக்கோளாக இருந்தது என்றும் கூறுகிறார் தலைவர் முனைவர் முத்தரசன் அவர்கள். அவர் கூற்றுக்கொப்ப, அதன் குறிக்கோளில் இருந்து நழுவாதும் வழுவாதும் தன் வழியில் செம்மையாகச் சென்று, இருபத்து ஐந்து ஆண்டுகளைக் கடந்து வந்திருப்பதுதான் பின்னாளில் பெயர் மாற்றம் கண்ட, வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையாகும்.

பேரவையானது தன் கடமைகளையும் பொறுப்புகளையும் நாளுக்கு நாள் கூட்டிக் கொண்டே போகிறது என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.அறப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டும், வட அமெரிக்கத் தமிழர்கள் என்பதையும் கடந்து உலகத் தமிழர்கள் என்கிற வரையறையையும் தேவைக்கொப்ப பாவனைக்குக் கொள்கிறது. எடுத்துக்காட்டாக, கும்பகோணத்தில் தீ விபத்தில் சிக்குண்டும் புண்பட்டும் போன தமிழ்ச்சிறார்களுக்கு உதவிக் கரம் நீட்டவும் மறந்து விடவில்லை; இலங்கையில் மனித உரிமைகள் நசுக்கப்பட்ட போதும் வாளாது இருந்துவிடவில்லை; ஆழிப்பேரலையில் தமிழர்கள் அல்லலுற்ற போதும் தன் கடமையைச் செய்யாமல் இருக்கவில்லை வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை. வட அமெரிக்கத் தமிழர்களின் வாழ்வியல் முன்னேற்றங்களுக்கும், விழுமியச் செம்மைப்படுத்தலுக்குமாக, அமெரிக்கச் சட்டதிட்டங்களுக்குள் இயங்கி, தமிழ் விழுமியக் கூறுகளை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறது பேரவை.

தமிழ்நாட்டில் இருந்து தன் தொழில்முறைப் பயணமாக தமிழரொருவர் அமெரிக்க நகர் ஒன்றுக்கு வருகிறார். வந்த இடத்தில் காலனின் சூழ்ச்சிக்குப் பலியாகி மரணித்து விடுகிறார் அவர். அவருக்கான ஈமச்சடங்குகள் தமிழ் முறைப்படி செய்தாக வேண்டும். அதற்கான பொருளியல் கூறுகளையும் கவனித்தாக வேண்டும். விபரம் நமது பேரவை முன்னோடிகளுக்குத் தெரிய வருகிறது. ஓடோடிச் சென்று கடமையாற்றித் திரும்புகிறார்கள். உள்ளூர் மற்றும் வெளியூர்த் தமிழ்ச்சங்கத்தினர். இது எப்படி இயன்றதாகிப் போனது? உள்ளூர் மற்றும் வெளியூர்த் தமிழர்களைப் பிணைத்தது எது?? பிணைத்த பெருமை பேரவையைச் சேராதா??

இப்படியானதொரு பிணைப்பைத்தானே, இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர்நிறுவனத் தலைவர் முனைவர் முத்தரசன் அவர்கள் மனத்துள் கொண்டதாகக் கூறினார்? இப்படியான இக்கட்டான நேரங்களில், ஆங்காங்கே இருக்கும் தமிழர்களைக் கொண்டு வந்து சேர்ப்பதும் பேரவையின் வெற்றியாகும்!இருபத்து நான்கு ஆண்டுகளாய்த் தொடர்ந்து விழாக் கண்டிருக்கிறது பேரவை. இதோ, வெள்ளி விழாவும், முனைவர் மு.வரதராசனார் ஆண்டு விழாவாக மலரவிருக்கிறது.

விழாக்களை நடத்துவதால் என்ன பயன் என எவரும் வினவலாம். பண்டைய காலந்தொட்டு, ஊர்கூடித் தேர் இழுப்பதும், கலை விழாக்கள் இடம் பெறுவதும் மரபாக இருந்து வருகிறது. விழாக்களின் மூலம் சமூகத்துள் இணக்கம் பிறந்து ஒற்றுமை ஓங்குகிறது. வாழ்வியல் கூறுகள் செம்மைப்படுகிறது. இளைய தலைமுறையினர், மூத்தவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள ஏதுவாகிறது. சிந்தனை வயப்பட்டு மனம் மறுமலர்ச்சி கொள்கிறது. இன்றைய நவீன காலத்தில், தொடர்பு எல்லை பெருகிப் பொருளியல் வளர்ச்சிக்கும் வித்திடுகிறது. எனவேதான் தொன்றுதொட்டு  கடைப்பிடிக்கப்பட்டு வரும் விழாக்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணமே உள்ளன.ஆண்டுதோறும் பேரவை நடத்தும் அமெரிக்க தமிழ்த் திருவிழாவில், அப்படி என்னதான் இடம் பெறுகிறது?

உள்ளூர்க் கலைஞர்களைக் கொண்டு, நம் வீட்டுப் பிள்ளைகளைக் கொண்டு கலை, இலக்கிய, நாடக, நாட்டியங்கள் இடம் பெறுகின்றன. இதன் வாயிலாக, நம் வீட்டுப் பிள்ளைகள் கலைப் பயிற்சி பெற்றுச் சிறக்கிறார்கள். நமக்கான கலைகள் நம்மைவிட்டு அகலாது பேணிப் பாதுகாக்கப்படுகின்றன. காலத்தின் தேவைக்கொப்ப புதுமையைப் புகுத்தி மேம்பாடு காணச் செய்யப்படுகின்றன. காண்போருக்குக் களிப்பையூட்டிப் பேரின்பத்தை உண்டு செய்கிறது. மொழித்திறன் வளர்க்கும் போட்டிகள் பல நடத்தப்படுகின்றன. மொழியறிவு கூடியும், அறியாமை நீங்கவும் இவை வழிவகுக்கின்றன. அறநெறி சார்ந்த நூல்களைக் கற்று இளந்தலைமுறையினர் தத்தம் வாழ்வை நல்வழிப்படுத்துகிறார்கள்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் துவக்கநாள் முதல் ஆதரவளித்தும், விழாக்களுக்கு வருகையளித்துக் கொண்டும் இருப்பவர் டாக்டர்.M.N..கிருஷ்ணன் அவர்கள். நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக , ஆலோசராக  பல தமிழ்ப்பணிகளில் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறார். சென்ற ஆண்டு விழாவொன்றின் போது அவர் பகிர்ந்து கொண்ட அவர்தம் அனுபவம் கீழே வருமாறு:.                                     

"நான் நியூயார்க் நகரைச் சார்ந்தவன். தற்போது என்னுடன் இருப்பவர் என் மனைவி மருத்துவர் சசிகலா கிருஷ்ணன். நான், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை தோன்றிய காலத்திலிருந்தே பிணைப்புக் கொண்டவன். பேரவை ஆர்வலன். இதுவரைக்கும் பார்த்தோமானால், பேரவையானது முன்னேற்றம் கண்டு வளர்ச்சிப் பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்கத் தமிழர்களைப் பொறுத்த மட்டும், எண்ணிக்கையில் மட்டுமல்லாது, அனைவரும் வந்திருந்து தத்தம் குழந்தைகளோடு இருந்து பார்க்கும் தரமான  விழா என்றால், இது ஒன்றுதான்.வந்திருந்து, இனிமை போற்றி, இன்புற்றுச் செல்லக்கூடிய விழாக்கள் இவை. தமிழர்கள் எல்லாம் இன்னும் கூடுதலாய் வந்திருந்து சிறப்பெய்த வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஒருதடவை வந்தால், நீங்கள் திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருப்பீர்கள். இந்த விழாவில் உங்களையெல்லாம் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நாங்க இன்னும் அடுத்தடுத்த விழாக்களுக்கு வருவோம். Many more to come. Thank you!!"




1 comment:

'பசி'பரமசிவம் said...

வெள்ளி விழாக் காணும் பேரவை, தொய்வின்றி இன்னும் சிறப்பாகச் செயல்பட்டு, வளர்ந்து சிறக்க என் மனப்பூர்வ வாழ்த்துகள்.

விழா பற்றிய அறிவிப்பை வெளியிட்டதற்கு மிக்க நன்றி.