Friday, June 22, 2007

சிவகுமாரெல்லாம் வந்து என்ன செய்யப் போறாரு?

நிகழ்ச்சி ஏற்பாட்டுக்காகப் பல மக்களைச் சந்திக்கிறோம். அவங்க கேட்குற முக்கியமான கேள்வி, "யாரெல்லாம் வர்றது?"
ஒரு சில பேருக்கு ஜார்ஜ் ஹார்ட் வர்றாருன்னா ஆர்வமாயிருக்கு. சில பேருக்கு நித்யஸ்ரீ மகாதேவன்னு சொன்னா அப்படியான்னு கிளம்புறாங்க. சில பேர் கேக்குறாங்க "சினிமா நடிகருங்க யாரும் வரலையா?" அதுக்கும்தான் பதில் வச்சிருக்கோமே! "ஆமா, வர்றாங்க, சிவகுமாரும் அவரோட மகன் கார்த்தியும் வர்றாங்க". "கார்த்தி யாரு? இந்த பருத்திவீரன்ல நடிச்ச பையனா? அடடே...அது சரி, ஆனா அவங்க அப்பா என்னத்துக்கு, அவரு அந்தகாலத்து ஆளாச்சே...அவரு வந்து என்ன பண்ணப் போறாரு?" இப்படியும் சிலர் கேட்குறாங்க. அவங்களுக்காக இந்தப் பதிவு. சிவகுமாரிடம் ஒரு நடிகர்ங்கறதத் தவிர என்ன திறமையெல்லாம் இருக்கு, அவர் அமெரிக்காவுக்கு வர்ற நோக்கம் என்ன அப்படின்னு பாப்போம்.

மோட்டார் சுந்தரம் பிள்ளையில் நுழைந்த அவர், சொல்லத்தான் நினைக்கிறேன், சிந்து பைரவி, வண்டிச்சக்கரம், ஆட்டுக்கார அலமேலு, பௌர்ணமி அலைகள், இனி ஒரு சுதந்திரம், மறுபக்கம் முதலான படங்களில் திறம்பட நடித்த ஒரு தேர்ந்த நடிகர் என்பது உங்களுக்குத் தெரியும்.
சிவகுமார் ஒரு ஓவியர் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதுவரையில் அவர் 48 ஓவியங்களை வரைந்திருக்கிறார். அவற்றை வைத்து கண்காட்சியும் நடத்தியிருக்கிறார். சிறந்த நுணுக்கங்களைப் பயன்படுத்தி, உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வண்ணம் ஒவ்வொரு கோட்டையும் தீட்டியிருக்கிறார். இவரது ஓவியங்களில் சிலவற்றைத்தான் இங்கே நீங்கள் பார்க்கிறீர்கள் (நன்றி: தட்ஸ்தமிழ்.காம்). இவ்வோவியங்களை நேரில் பார்க்கும்போது அவற்றிலிருக்கும் சிறு சிறு விபரங்கள் உங்களை வியப்பிலாழ்த்தும். ஒவ்வொரு ஓவியத்துக்குமான சில பின்னணிச் செய்திகளை வைத்திருப்பார். இவரது ஓவியங்களில் சிலவற்றை இப்போது எடுத்து வந்து அவற்றை நமக்குக் காட்சிப்படுத்த இருக்கிறார். உங்களுக்குத் தெரியுமா? மறைந்த நடிகை பத்மினியை இவர் வரைந்து அவரிடம் காட்டியபோது, அவ்வோவியத்தின் அழகை வியந்தாராம் பத்மினி. பின்னொரு முறை தான் இறந்தபிறகு தன் உடலருகே இந்தப் படத்தைத்தான் வைக்கவேண்டுமென்று கேட்டுக் கொண்டாராம். அதன்படியே அண்மையில் பத்மினியின் மறைவின்போது சிவகுமாரும் சென்று அப்படத்தை வைத்திருக்கிறார்.

சிவகுமார் மனிதர்களின் உருவங்களை நன்கு அறிந்து வைத்திருப்பவர் என்பதை அவரிடம் நீங்கள் பேசினால் புரிந்துகொள்ளலாம். அழகான உருவம் எது, ஏன் குழந்தைகள் அழகாக இருக்கிறார்கள், காந்தியார் இளமையில் இருந்ததற்கும், முதுமையிலிருந்ததற்கும் ஒரு ஓவியனின் பார்வையில் என்னென்ன மாற்றங்கள், இரட்டைக் குழந்தைகளினிடையே ஓவிய ரீதியில் என்னென்ன மாற்றங்கள் என்று உடல் அழகியலை மிக நுட்பமாக அறிந்து வைத்திருக்கிறார். பேரவைத் திருவிழாவின்போது இவரது ஓவியக்கலைத் திறமையை நீங்கள் நேரில் அறியவும், அவரோடு இது குறித்து உரையாடவும் உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும்.

சிவகுமார் ஒரு எழுத்தாளர் என்பது நிறைய பேருக்கு இன்னும் தெரியாது. "இது ராஜபாட்டை அல்ல" என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். இவர் அமைதியான, எளிய குணமும், தனிமனித ஒழுக்கமும் கொண்ட மனிதர். அது இவரது எழுத்துக்களில் பளிச்சிடும். இவர் ஒரு நாட்குறிப்பை வைத்திருக்கிறார். தான் ஒரு ஓவியனாக, நடிகனாக, வாழ்வில் சந்தித்த அனுபவங்களை, மனிதர்களைப் பதிந்து வைத்திருக்கிறார். இவர்களுள் அன்றாட மனிதர்களிலிருந்து பிரபலங்கள் வரை அடக்கம். தானறிந்த பிரபலங்களையும் பற்றி சிவகுமார் நம்முடன் பகிர்ந்துகொள்வார். மேலும், இவர் ஒரு தீவிர படிப்பாளி. நல்ல பல இலக்கியங்களைக் கற்றிருக்கிறார். அவற்றைக் குறித்து மேலும் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் உண்டு. எனவே இலக்கிய வாசகர்களுக்கும் சிவகுமார் ஒரு நல்ல அறிமுகமாக இருப்பார்.


பேரவையில் சிவகுமார் கலந்துகொள்ளும்/வழங்கும் நிகழ்ச்சிகள்:

1. ஜூலை ஆறாம் தேதி வெள்ளிக்கிழமை இரவு: வள்ளல்கள், கொடை வள்ளல்கள் மற்றும் பெருங்கொடை வள்ளல்கள் ஆகியோருடன் ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். இதன்போது அவருடைய ஓவியங்களையும், தனது திரைத்துறை அனுபவங்களையும் பற்றிக் கலந்துரையாடுகின்றார். சுமார் இரண்டு மூன்று மணி நேரங்கள் நிகழவிருக்கும் இவ்விருந்தில் நீங்களும் பங்குபெறலாம். இது வள்ளல்கள், கொடைவள்ளல்கள் மற்றும் பெருங்கொடை வள்ளல்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி. நீங்களும் வள்ளல், கொடைவள்ளல், பெருங்கொடை வள்ளல் என்ற முறையில் பங்கு கொள்ளும் விபரங்களை பேரவையின் இணையத் தளத்தில் காணலாம்.

2. சனிக்கிழமையன்று சிவகுமார் "தமிழ்த் திரையில் தமிழ்" என்பது குறித்து உரையாற்ற இருக்கிறார். அதன்போது அவரிடம் கேள்வி நேரமும் இருக்கும்.

3. ஞாயிறன்று சிவகுமாரும் கார்த்தியும் சேர்ந்து ஒரு சிறு நிகழ்ச்சியையும் (சஸ்பென்ஸ்!) அதன் பின்னொரு கலந்துரையாடலையும் செய்ய இருக்கிறார்கள்.

சிவகுமாருடன் பேசியபோது, அவர் திரைப்பட நுட்பங்களையும், ஓவிய நுணுக்கங்களையும், தான் வாழ்வில் கண்டுணர்ந்த பாடங்களையும் நம்மோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே அவர் இங்கு வரும் நோக்கம் என்று குறிப்பிட்டார். சிவகுமாரும், கார்த்தியும் நிகழ்ச்சிகள் நடக்கும் நான்கு நாட்களும் நம்முடனேயே இருப்பார்கள். அவர்களைக் கண்டு அளவளாவ இது ஒரு நல்ல வாய்ப்பு.

குழந்தை வளர்ப்பைப் பற்றி அவரிடம் கேட்கவேண்டும் என்று உங்களுக்கே தோன்றும், இதைப் படித்தால்.

4 comments:

உண்மைத்தமிழன் said...

ஸார்.. சிவக்குமார் ஓவியர், நடிகர் என்ற பரிமாணத்தையும் தாண்டி திரையுலகில் இருக்கும் ஒரு சில நல்ல மனிதர்களில் ஒருவர் என்பதுதான் இங்கிருக்கும் அனைவரின் கருத்து.

கருத்துப் பேதமில்லாமல் அனைத்துத் தரப்பினரிடையும் அவருக்கு இருக்கும் நல்ல பெயரை தமிழ்நாடே அறிந்துள்ளது. அதற்கு அவர் கொடுத்துள்ள விலைதான் மிக உயர்வானது.

இவரால் தமிழ்த் திரையுலகில் ஒரு தயாரிப்பாளர் அல்லது ஒரு இயக்குநர் பாதிக்கப்பட்டார்கள் என்ற பேச்சே இதுவரையிலும் எழுந்ததில்லை. அவ்வளவு நல்ல மனிதர். என்றும் மார்க்கண்டேயன் என்று பட்டப் பெயருடன் அவர் தமிழ்த் திரையுலகில் உலா வருவது ஏதோ ஒரு பெருமைக்காக அல்ல. ஒழுக்கத்தையும், அன்பையும், பாசத்தையும் ஒருங்கே தன்னுள் வைத்திருக்கும் ஒரு அற்புத மனிதர் இவர்.

இவருடைய இது ராஜபாட்டை அல்ல என்பது ஒரு நூல் அல்ல. ஒரு வழிகாட்டி. அதைப் படித்துப் பார்த்தவர்களுக்கு அது புரியும்.. தன் அம்மா மீதும், தன்னைப் பெற்றெடுத்த மண் மீதும் அவருக்கு இருந்த பாசத்தையும், நேசத்தையும் அதில் கொட்டியிருந்தார். தாழ்ந்த நிலையிலிருந்து உயர்ந்தவர்கள் தன் சமூகம் மீது காட்டும் போலித்தனமான நட்பை இதில் துளியும் காட்டிக் கொள்ளாமல் தன்னை வளர்த்த சமூகத்தையும் பாராட்டியும் உள்ளார். அதிலே வீட்டில் உணவுப் பொருள் இல்லாத பஞ்சமிருக்கும் காலங்களில் காடுகளுக்குச் சென்று ஒரு வகை கிழங்குகளை ஏதோ விலங்குகள் போல தேடிச் சென்று கண்டுபிடித்து அதைச் சாப்பிடும் அந்த ஊர் மக்களைப் பற்றி எழுதியிருக்கிறார். இதைப் படிக்கும் உண்மையான இந்தியர்கள், தமிழர்கள் நிச்சயம் வெட்கப்பட வேண்டும். இது ராஜபாட்டை அல்ல என்பது ஒரு தரமான தமிழர்களின் வாழ்வியல் இலக்கிய நூல்..

அவர் மிகச் சிறந்த ஓவியர் என்பதுடன் அந்த ஓவியக் கலையை கற்றுக் கொள்ள அவர் பட்ட பாட்டையும் அதிலே எழுதியிருக்கிறார். சும்மா கிடைத்துவிடாது உயர்வு. உழைத்தால்தான் உயர்வு வரும்.. கடின உழைப்பே வெற்றிக்கு ஒரே வழி என்று செல்கின்ற டங்களிலெல்லாம் சொல்வார் திரு.சிவக்குமார்.

அவர் உங்களுடைய சங்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உங்களை சிறப்பிப்பது போல.. வாழ்த்துக்கள் நண்பரே..

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம்ம்ம்"தாயே உனக்காக" தான் சிவகுமார் நடிச்ச முதல் படம்னு நினைச்சேன். மற்றபடி அவரோட திறமைகள் பத்தித் தான் தமிழ் வாரப் பத்திரிகைகளிலே வந்துட்டு இருக்கு! ரொம்ப நன்றி தகவல்களுக்கு,

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை said...

அடேங்கப்பா, உண்மைத் தமிழன் இப்படிப் போட்டு வாங்குறீங்க! நன்றி, இவ்வளோத்தையும் எங்களுக்கு சொன்னதுக்கு!

கீதா, சிவகுமார்கிட்டயே கேட்டுடுவோமா?:))

Geetha Sambasivam said...

சிவக்குமார் வந்ததும் கேட்டுடுங்க. எனக்குப் பிடிச்ச நடிகர்களில் அவரும் ஒருவர். :)