Sunday, June 3, 2007

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) தேவைதானா ?-1

பாகம் ஒன்று - பேரவையின் தமிழர் மாநாடு என்றால் என்ன?

இருபத்தைந்து முப்பது வருடங்களுக்கு முன் அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த நகரங்களிலோ அல்லது மாநிலங்களிலோ தமிழ்ச் சங்கங்களைத் தோற்றுவித்தார்கள். உதாரணமாக நியூயார்க், வாசிங்டன், நியூ ஜெர்ஸி, பிலடெல்பியா, சிகாகோ, சான்பிரான்சிஸ்கோ போன்ற நகரங்களில் தமிழ்ச் சங்கங்கள் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக நடந்து வருகின்றன. ஆரம்ப காலங்களில் தமிழ்ச்சங்கங்கள் தமிழர்கள் ஒன்று கூடிக் களிக்கும் அமைப்புகளாக இருந்தாலும், காலப் போக்கில் கலை நிகழ்ச்சிகளையும், தமிழ்ப் பள்ளிகளையும், போட்டிகளையும், சிறப்பு உரைகளையும், அச்சிதழ்களையும் நடத்த ஆரம்பித்தனர். பெருநகரங்களில் இருந்த தமிழ்ச் சங்கங்கள் பின்னால் ஒன்று கூடி வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) என்ற கூட்டமைப்பையும் ஏற்படுத்தி ஆண்டுக்கு ஒருமுறை கோடை விடுமுறையில் தமிழர் விழாக்களை ஒருங்கிணைத்தனர். முதலில் நானூறு அல்லது ஐநூறு பேர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டுக்கு கடந்த சில ஆண்டுகளாக சுமார் ஆயிரத்து ஐநூறு பேர்கள் வரை வருகின்றனர். அமெரிக்காவில் அதிகம் தமிழர்கள் கூடும் ஒரே நிகழ்வு இந்த பேரவை அல்லது பெட்னா மாநாடு.

இந்த மாநாட்டை ஒவ்வொரு ஆண்டும் ஒருங்கிணைக்கும் ஆர்வலர்கள் மேற்கொள்ளும் சிரமங்கள் எளிதில் விவரிக்க முடியாதவை. ஆயிரத்துக்கும் மேலானவர்கள் கலந்து கொள்ளும் ஒரு பெரிய மாநாட்டை எந்த ஊதியமும் பெறாத தன்னார்வலர்கள் மட்டுமே ஒருங்கிணைப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல. ஒரு சில சுயதொழிலதிபர்களைத் தவிர இத்தன்னார்வலர்களில் பெரும்பாலோர் முழு நேர வேலையில் இருப்பவர்கள். அமெரிக்காவில் அலுவலக நேரத்தில் நம்முடைய அலுவலக வேலையை அதிகம் தட்டிக் கழிக்க முடியாது. முழுநேர வேலையிலிருக்கும் கணவன் மனைவி இருவருமே அனைத்து வீட்டு வேலைகளையும், குழந்தைகளைக் கவனிப்பதையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதற்கிடையே மாநாட்டை ஆகும் செலவுகளுக்காக தங்கள் சொந்தப் பணத்தை நன்கொடையாக வேறு அளிக்க வேண்டும். மாநாட்டுக்கான கட்டணச்சீட்டு வருவாயை வைத்து மாநாட்டுச் செலவில் மூன்றில் ஒரு பங்கைக் கூட ஈடு செய்ய முடியாது. உதாரணமாக, பால்டிமோரில் நடந்த மாநாட்டுக்குத் தன்னார்வலராகப் பணிசெய்ய ஆரம்பித்த அன்றே (மாநாட்டுக்கு ஏழு மாதங்களுக்கு முன்பு) அனைவரும் குறைந்தபட்சம் ஐநூறு அமெரிக்க டாலர்களாவது நன்கொடை அளித்தனர். மேலும் பலர் ஆயிரத்துக்கு மேலும், ஒரு சிலர் ஐயாயிரத்துக்கு மேலும் நன்கொடை அளித்து வேலையும் செய்து வருகின்றனர். அரங்கத்தை அலங்கரிப்பதில் இருந்து, உணவு பரிமாறுவது, சுத்தம் செய்வது, இந்தியாவிலிருந்து வந்திருக்கும் விருந்தினர்களை விமான நிலையத்துக்குச் சென்று காரில் அழைத்து வருவது வரை அனைத்து வேலைகளையும் என்ன படித்திருந்தாலும், எந்த பதவியிலிருந்தாலும் நாமே செய்ய வேண்டும்.

எனவே அமெரிக்க மண்ணில் இவ்வளவு பெரிய மாநாட்டை ஏற்பாடு செய்வது என்பது அவ்வளவு எளிதல்ல. மாநாட்டில் எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும், அதன் உள்ளடக்கத்தில் சில கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் மாநாட்டுக்காக ஒருங்கிணைப்பாளர்கள் ஆற்றி வரும் தொண்டை நெஞ்சாரப் பாராட்ட வேண்டும்.

அவ்வளவு சிரமப்பட்டு இப்படி ஒரு பெரிய மாநாட்டை ஒழுங்கு செய்வதில் யாருக்கு என்ன இலாபம்? இது அடிக்கடிப் பலரால் கேட்கப் படும் கேள்வி. இந்தக் கேள்விக்கும், தமிழ் சங்கங்களை ஏன் இன்னும் நடத்தி வருகிறோம் என்ற கேள்விக்கும் விடையை அடுத்த பாகத்தில் ஆராய்வோம்.

No comments: