Wednesday, June 20, 2007

பேரவைத் திருவிழாவில் Bone Marrow Drive!

கடந்த சில ஆண்டுகளைப் போலவே, இவ்வாண்டும், பேரவைத் திருவிழாவின்போது, நோயுற்றவர்களுக்கு உதவ முன்வரும் கொடையாளர்களின் பட்டியலைத் தயாரிக்கத் தன்னார்வலர்கள் வருகிறார்கள். இவர்கள் ஒரு சிறு பஞ்சில் உங்களது
கன்னத்தின் உட்புறத்தில் ஒரு தடவு தடவி அதைச் சேகரித்துக் கொள்வார்கள். இதனைக் கொண்டு, எலும்பு மச்சை தேவைப்படுவோருக்கு நீங்கள் உதவக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

எலும்பு மச்சை என்று சொல்லப்படும் bone marrow மிகவும் முக்கியமான உறுப்பு. நம் உடலுக்குத் தேவையான இரத்த வெள்ளை மற்றும் சிவப்பு அணுக்கள் இங்கே உற்பத்தி செய்யப்படுகின்றன. சில எலும்பு மச்சை நோய்களாலும், புற்று
நோயாலும் சிலருக்கு இரத்த அணுக்கள் குறைவாகவோ அல்லது சரியாக வேலை செய்யாமலோ போகலாம். இதனைச் சரிசெய்ய இன்னொருவரிடமிருந்து எலும்பு மச்சையிலிருந்து மூலச் செல்கள் (stem cells) பிரித்தெடுக்கப்பட்டு, நோயுற்றவரின் உடலுக்குள் செலுத்தப்படுகின்றன (இதனால் கொடுப்பவருக்கு பெரும் பாதிப்பில்லை; இரத்த தானம் போலவே இதுவும் மீண்டுவிடக் கூடியது). மச்சையை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாமென்றாலும், கொடுப்பவரும் பெறுபவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவராக இருப்பது பல வழிகளில் நல்லது. அமெரிக்காவில் இருக்கும் தெற்காசியர்களுக்கு எலும்பு மச்சை சம்பந்தமான நோய்கள் வந்தால், அவர்களுக்கு, தெற்காசியர்களிடமிருந்து எலும்பு மச்சை எடுத்தால்தான் பொருந்திவரும் வாய்ப்பு அதிகம். எனவே நோயில் வாடும் நம்மவர்களுக்கு உதவும் நோக்கில் இந்தக் கொடையாளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

முக்கியம்: பேரவைத் திருவிழாவின்போது உங்கள் மச்சையை எடுக்கமாட்டார்கள். இதன்போது உங்கள் ஒப்புதலும், கன்னத்திலிருந்து பஞ்சால் எடுக்கப்படும் மாதிரியுமே. அதனால் இதில் இணைந்து உங்களது சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு உதவுங்கள் என்று பேரவை அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
வினய் என்ற இந்த இளைஞரின் வாழ்வைப் பாருங்கள், இவரைப் போன்றவர்களின் உயிரைக் காக்க உங்களாலும் உதவ முடியும்!
பாஸ்டனில் நடந்த கொடையாளர் சேர்ப்பு பற்றிய பதிவர் பாஸ்டன் பாலாவின் பதிவை இங்கே காணலாம்.

1 comment:

பத்மா அர்விந்த் said...

//எலும்பு மச்சை என்று சொல்லப்படும் bone marrow மிகவும் முக்கியமான உறுப்பு// Bone Marrow is not an organ. Please check this out