Tuesday, June 5, 2007

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மாநாடு (FETNA) தேவைதானா?-3

முக்கியமான, நிறைவுப் பகுதி!
பாகம் மூன்று – பேரவை கடந்த காலத்தில் ஆற்றியுள்ள தொண்டு
  • பேரவையின் மாநாடுகளில் வெகுஜன சினிமாக் கலாச்சார மோகம் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கத்தில் பாரம்பரியக் கலைகளையும், கிராமியக் கலைகளையும் ஒருங்கிணைப்பாளர்கள் துணிச்சலுடன் ஏற்பாடு செய்து வந்திருக்கின்றனர்.
  • அந்த அடிப்படையில் கடந்த பல ஆண்டுகளாக பேரவை இதைச் செய்து வந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, விஜயலட்சுமி நவனீதகிருஷ்ணன் குழு, கே. ஏ. குணசேகரன் குழு, புஷ்பவனம் குப்புசாமி குழு, “நிஜ நாடக இயக்கம்” புகழ் மு. இராமசாமி குழுவினரின் "நந்தன் கதை" போன்ற தமிழர்களின் பாரம்பரிய கலைக் குழுக்களைத் தொடர்ந்து அழைத்து வந்து அமோக வரவேற்புடன் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறது.
  • அது மட்டுமல்லாமல் விளிம்புநிலை மட்டும் ஒடுக்கப் பட்ட இனத்தவர்களின் பிரதிநிதிகளை அமெரிக்க மண்ணுக்கு அழைத்து அவர்களை கௌரவித்து அனைத்துத்தரப்பு தமிழர்களும் நம் பண்டைய சமூகச் சீர்கேடுகளைக் களைந்து ஒன்றுபட்டு முன்னேற வேண்டும் என்று செயலில் காட்டி வருகிறது பேரவை. எடுத்துக்காட்டாக முன்பு அழைக்கப் பட்ட திருநங்கை நர்த்தகி நடராஜன், தலித்து எழுத்தாளர் சிவகாமி, நாட்டுப்புற இசைக்கலைஞர் மற்றும் ஆராய்ச்சியாளர் கே.ஏ.குணசேகரன் போன்ற சிறப்பு விருந்தினர்களைக் கூறிப்பிடலாம். அமெரிக்க மண்ணில் உள்ள வேறு எந்த இந்திய இன அமைப்பும் செய்யாத சாதனையாக இதைக் கூறலாம்.
  • நல்ல இலக்கியவாதிகளையும் எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், தமிழ் ஆராய்ச்சியாளர்களையும் அழைத்து கௌரவித்துள்ளது பேரவை. ஜெயகாந்தன், பிரபஞ்சன், சிவகாமி, கவிஞர்கள் அறிவுமதி, இன்குலாப், வைரமுத்து, மு.மேத்தா, அப்துல் இரகுமான், சிற்பி பாலசுப்பிரமணியம், தமிழன்பன், சேரன், சுஜாதா, சிவசங்கரி, கா. சிவத்தம்பி, தமிழண்ணல், சிலம்பொலி செல்லப்பன், மதிவாணன், ஓவியர் புகழேந்தி, அருள்மொழி, கனிமொழி, தியாகு, தாமரை என எத்தனையோ பெயர்களைக் குறிப்பிடலாம்.
  • பேரவை இலங்கையில் ஐம்பது ஆண்டுகளாக தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக போராடி வரும் ஈழத்தமிழர்களின் துயரத்தில் பங்கு கொண்டு வந்திருக்கிறது பேரவை. ஈழத்துத் தலைவர்களையும், நாடாளுமன்றப் பிரதிநிதிகளையும், எழுத்தாளர்களையும், மலையகத்தமிழர்களின் பிரதிநிதிகளையும் வரவழைத்து அவர்களது குரலைத் தொடர்ந்து ஒலிக்கச் செய்திருக்கிறது. ஜனநாயக முறையில் அளித்து வரும் இந்த ஆதரவை வேண்டுமென்றே திரித்து பேரவை அமைப்பையே களங்கப்படுத்துவோரும் உண்டு. இருப்பினும் ஈழத்தமிழரின் உரிமைகளுக்காக எழுப்பப்படும் ஒவ்வொரு ஆதரவுக் குரலின் போதும் மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவரும் கைதட்டியும், எழுந்து நின்று மரியாதை செலுத்தியும் தங்கள் ஒருமனதான வரவேற்பைத் தெரிவித்து வந்துள்ளனர்.
  • அமெரிக்க பல்கலைக்கழகங்களில் தமிழாராய்ச்சி செய்த/செய்யும் பேராசிரியர் இராமனுஜம், ஜார்ஜ் ஹார்ட், நார்மன் கட்லர், ஜேம்ஸ் லிண்ட்ஹோம் என பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியிருக்கின்றனர். அமெரிக்க மண்ணில் பிறந்து வளர்ந்த தமிழ் இளைஞர்கள் பலர் இம்முயற்சிகளுக்கு உதவியுள்ளனர்.
  • மாட்சிமை விருது என்ற பெயரில் ஆண்டுதோறும் தமிழுக்கும், தமிழ்ச் சமூகத்துக்கும் பெரிதளவில் தொண்டு ஆற்றியவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது பேரவை. இவ்விருதினைப் பெற்றவர்களுள் முனைவர்கள் ஏ.கே.இராமானுஜம், வ.ஐ.சுப்பிரமணியம், மணவை முஸ்தபா, கா.சிவத்தம்பி போன்றவர்கள் மிக முக்கியமானவர்கள்.
  • அமெரிக்க மண்ணில் நிரந்தரமாகத் தமிழாராய்ச்சியில் ஈடுபடுவதற்காக பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பீடம் ஏற்படுத்த பணம் திரட்டி உதவியது.
  • 2005ல் முதல்முறையாக அமெரிக்க மண்ணில் பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டை நடத்தியது. மேரிலாந்து மாநிலம் கொலம்பியாவில் நடந்த இந்த மாநாட்டில், திருக்குறளில் ஆராய்ச்சி செய்து வரும் அறிஞர்கள் பலர் கலந்து கொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வழங்கினர். இக்கட்டுரைகள் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தினரால் நடத்தப்படும் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டன.
  • இந்த ஆண்டு பேரவை மாநாட்டில் “பழந்தமிழ் இலக்கியம் காட்டும் தமிழர் பண்பாடு” என்ற பொருளில் இலக்கியக் கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது. இது அடுத்த ஆண்டில், பேரவை டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்தப் போகும் ஆராய்ச்சி மாநாட்டுக்குக் கட்டியம் சொல்வது போல அமைகிறது.
  • 2003ல் முதல்முறையாக அமெரிக்க மண்ணில் தமிழ் மொழி கற்பிக்கும் கோடைகால முகாம் நடத்தப் பட்டது. மேரிலாந்து மாநிலம் கொலம்பியாவில் நடந்த இம்முகாமில் அமெரிக்கா, கனடா நாடுகளிலிருந்து மொத்தம் 22 மாணவர்கள் கலந்து கொண்டு தமிழ் கற்றனர். இதைத் தொடர்ந்து மேலும் இரண்டு முகாம்கள் வெவ்வேறு நகரங்களில் நடத்தப் பட்டுள்ளன.
  • அமெரிக்கத் தமிழ் இளைஞர் அமைப்பான NTYO இங்கு பிறந்து வளர்ந்த தமிழ்ப் பிள்ளைகளால் ஆரம்பிக்கப் பட்டது. இவர்களும் பேரவை மாநாட்டில் தனியே தங்களுக்கென்று சில நல்ல நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்கின்றனர். இவை பெரும்பாலும் ஆங்கிலமும் தமிழும் கலந்து நடத்தப் பட்டாலும், தமிழ்க் கலாச்சாரத்துக்குத் தொடர்பான நிகழ்ச்சிகளே.
  • கடந்த ஆண்டு இரு இந்து மதவாத அமைப்புகள் கலிபோர்னியா மாநில பள்ளிக்கூட வரலாற்றுப் பாட நூல்களில் இந்திய வரலாற்றை திரித்து தவறான முறையில் திணிக்க முனைந்தது. பேரவை சில அமெரிக்க வரலாற்றுப் பேராசிரியர்களுடனும் மற்ற மதசார்பற்ற இந்திய அமைப்புகளுடனும் சேர்ந்து போராடி அந்த வரலாற்றுத் திரிப்பை முறியடித்தது.
  • கணினித் தமிழின் வளர்ச்சிக்கு பேரவை அமைப்பு ரீதியாக தன்னால் இயன்ற ஆதரவை அளித்து வருகிறது. தமிழ் யுனிகோடு வரிசையில் உள்ள சிக்கல்களை சரிசெய்ய உலக யுனிகோடு நிறுவனத்துக்குப் பரிந்துரைக்க தமிழக அரசு தொழில்நுட்ப வல்லுனர்கள் அடங்கிய ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளது. பேரவை நிர்வாகக் குழுவும் தமிழக அரசின் பரிந்துரைகளை ஆதரித்து உலக யுனிகோடு நிறுவனத்துக்கு தன் கருத்துக்களை அனுப்பியுள்ளது.ஆழிப்பேரலைகள் (சுனாமி) ஏற்படுத்திய மிகப் பெரும் சேதத்தின் போது தமிழ் நாட்டுக்கும், தமிழ் ஈழத்துக்கும் பொருளுதவியும், பண உதவியும் அளித்தது பேரவை. அதுமட்டுமல்லாமல் கும்பகோணத்தில் நடந்த பள்ளி தீ விபத்தின் போது உடனடியாக நிதி திரட்டி வழங்கியது. கட்ரீனா புயல் தாக்கிய அமெரிக்க நகரமான நியூஆர்லியன்ஸுக்கும் பேரவை உதவிகளை அனுப்பியது. ஆண்டு தோறும் பொங்கல் அன்று சிகாகோ நகரில் முதியோர் மற்றும் அனாதை இல்லங்களில் உணவு வழங்கி வருகிறது. இது போல் எண்ணற்ற சேவைகளில் பேரவைவும், அதன் அங்கங்களான பல தமிழ்ச் சங்கங்களும் செய்து வருகின்றன.
  • இதுதவிர கடந்த சில ஆண்டுகளாக திருமணத்துக்கான இளைஞர்கள் சந்திப்பையும் ஏற்படுத்தி வருகின்றனர். இவை சாதியை மறுத்த திருமணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி எண்ணற்ற சாதனைகளை பல்வித இன்னல்களுக்கு இடையே செய்து வரும் பேரவை மாநாட்டிற்கு அவசியம் வந்து தங்கள் ஆதரவைத் தர வேண்டியது அமெரிக்கத் தமிழர்களின் கடமை.

3 comments:

VSK said...

இங்கு வருகை தரவிருக்கும் அனைவரையும் வருக வருகவென அழைக்கிறேன்.

ராலே வரும் தமிழ்மணப்பதிவர்கள் எனக்கும் ஒரு தனிமடலிட்டால் ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்ய வசதியாயிருக்கும்!

மின்னஞ்சல்
ommurga41@gmail.com

நன்றி.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை said...

//ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்ய வசதியாயிருக்கும்!//
அன்பு வி.எஸ்.கே,
உங்களோடு இணைந்து செயல்பட பேரவையின் ஆர்வலர்கள் காத்திருக்கிறார்கள்!
http://fetnathiruvizha.blogspot.com/2007/06/blog-post_07.html
உங்களைத் தொடர்புகொள்கிறோம். மிக்க நன்றி!

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை said...

ommurga41@gmail.com
வி.எஸ்.கே, இந்த மின்னஞ்சல் முகவரியில் ஏதோ பிழையிருக்கிறது, போகவில்லை.
ommuruga41 என முயன்றிருக்கிறோம்!