Monday, June 4, 2007

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) மாநாடு தேவைதானா? - 2

பாகம் இரண்டு - பேரவையினால் அமெரிக்கத் தமிழர்க்கு என்ன பயன்?

தமிழ்ச்சங்கங்களின் வெளிப்படையாக நம்பப் படும் பயன்
தமிழ்ச்சங்கங்களில் உறுப்பினராகச் சேர்ந்து கலந்து கொள்வதன் மூலமோ அல்லது பொறுப்புகளிலும், நிகழ்ச்சிகளிலும் தீவிர பங்கேற்பதன் மூலமோ நம் குழந்தைகளுக்கு நம்முடைய கலாச்சாரத்தோடும், மொழியோடும் தொடர்புடன் இருப்பதற்கு உதவும்.

இதில் ஓரளவு உண்மையுண்டு. தமிழ்ப் பண்பாட்டை நாம் வீட்டில் திணிக்கும் பொழுது, இயல்பான எதிர் வினையாக நம் குழந்தை அதிலிருந்து மீற நினைக்கும். ஆனால் தன்னையொத்த மற்றக் குழந்தைகளும், இளைஞர்களும் வெளிப்படுத்தும் கலாச்சாரக் கூறுகளை இயல்பாக உள்வாங்கிக் கொள்ளும்.
இருந்தாலும் இது முழுக்க வெற்றியில் போய் முடியும் என்று சொல்ல முடியாது. அதனால்தான் சிறுவர்களாக இருக்கும் பொழுது தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் கலந்து கொள்ள நினைப்பவர்கள், இளைஞர்களாகும் பொழுது விலகிப் போய் விடுகிறார்கள். இதற்கு விதி விலக்காகவும் ஒரு சில இளைஞர்கள் உண்டு, அதற்குக் காரணம் அவர்களின் வீட்டிலும் குழந்தைகளுக்குப் பண்பாட்டையும், மொழியையும் இயல்பாகக் கற்றுத்தர பெற்றோர் முயற்சி செய்கின்றனர்.

வெளியே பேசப்படாத ஆனால் மிக முக்கியமான பயன்
இந்த நாட்டில் நாமெல்லாம் குடியேறியவர்கள். எவ்வளவு திறமையிருந்தாலும், குடியுரிமை வாங்கி நீண்ட காலம் வசித்தாலும், இரண்டாவது தலைமுறையாக நம் குழந்தைகள் இருந்தாலும் வேற்று இனத்தவர்களாகத்தான் கருதப்படுகிறோம். அமெரிக்காவின் செல்வச்செழிப்பு குன்றாத வரையிலும், வேலை வாய்ப்புகள் ஓரளவு இருக்கும் வரையிலும் இந்த வேற்று இன மனப்பான்மையால் நமக்கு எந்தச் சிக்கலும் வராது.
திண்டாட்ட சூழ்நிலை உருவானால்தான் ஐரோப்பியத் தோற்றமில்லாதவர்கள் எல்லோரையும் வேற்று இனம் மட்டுமல்லாது வெளியேற்ற வேண்டிய இனம் என்று கருதும் மனப்பான்மை வரக்கூடும். இது வரலாற்றில் காலங்காலமாக எல்லா நாடுகளிலும் ஏற்பட்டு வந்துள்ள நிலைமை. இதில் கறுப்பு, வெளுப்பு என்றெல்லாம் பேதம் கிடையாது. மலேயாவும், பர்மாவும், உகாண்டாவும் உணர்த்தும் பாடம் இது.

மக்களாட்சிக் குடியரசு இல்லாத நாடுகளில் வெளியேற்றத்தையும், வன்முறையையும் நேரடியாகச் செயல் படுத்துவர். மக்களாட்சிக் குடியரசும், சட்டதிட்டங்களும் உள்ள நாடுகளில் முதலில் சட்டப் பூர்வமான மாற்றங்களைக் கொண்டு வர நினைக்கும் பெரும்பான்மை பலம் கொண்ட அரசு. அப்படிப் பட்ட சூழ்நிலைகளில் நம் தாய் நாடு நம்மைப் பாதுகாக்குமா என்றால் உறுதியாகச் சொல்ல முடியாது. சமகாலக் கட்ட உலக அரசியல் நிர்ப்பந்தங்களின் அடிப்படையிலும் சுயநலத்தின் அடிப்படையிலும்தான் ஒவ்வொரு நாடும், இன்னொரு நாட்டுடன் முறித்துக் கொள்வதும், சேர்ந்து கொள்வதும் நடந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தாய் நாட்டை ஆள்வோர் நாணயமில்லாத அரசியல்வாதியாக இருந்தால், தங்களுக்கு வேண்டிய சிலரின் நன்மைக்காக மற்ற அனைவர் நலத்தையும் காவு கொடுக்கவும் செய்வர்.

ஒரே வழி - சிறுபான்மை சமூகங்கள் ஒற்றுமையாக, ஒரு அமைப்பாக தங்களின் இருப்பை உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கான நடை முறைகள் - தமிழ்ச்சங்கங்களை நல்ல முறையில் கட்டிக் காப்பது, பல்வித கலாச்சார நிகழ்ச்சிகள் , மாநாடுகள் போன்றவற்றை நடத்திக் கொண்டே இருப்பது.

எனவே தனிப்பட்ட சுயநலங்களையும், விருப்பு வெறுப்புகளையும் ஒதுக்கி வைத்து நம்முடைய சந்ததியினரின் ஒட்டு மொத்த சமுதாயத்தின் சுயநலம் கருதி தமிழ்ச்சங்கத்தையும், பேரவையும் நல்ல முறையில் நடத்த முன்வர வேண்டும். பல்வித வேலைகளுக்கும், இடர்ப்பாடுகளுக்கும் இடையில் நமக்குக் கிடைக்கும் சிறு ஓய்வு நேரத்தை எப்படிப் பயனுள்ளதாகச் செய்ய முடியும் என்று சிந்திப்போம்.

அடுத்த, நிறைவுப் பாகத்தில் பெட்னா இதுவரை ஆற்றியுள்ள தொண்டை மிகச் சுருக்கமாகக் காண்போம்.

No comments: